பொது செய்தி

தமிழ்நாடு

நவீன இயந்திரங்களால் நலிவடைந்த சலவை தொழில்!

Added : மார் 04, 2020
Share
Advertisement
 நவீன இயந்திரங்களால் நலிவடைந்த சலவை  தொழில்!


'மெட்ராஸ்' என்ற சிறிய ஊரை சுற்றி, நெசவு தொழில் மட்டுமே சிறப்பாக நடந்த காலக்கட்டம் உண்டு. அப்போது, ஆங்கிலேயர்களால், நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இடங்களே, காலடிப்பேட்டை,சிந்தாதரிப்பேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டை.

கடந்த, 1719ல் கவர்னராக இருந்த ஜோசப் காலட், நெசவாளர்களுக்காக, திருவொற்றியூர் அருகே ஒரு காலட்பேட்டை என்ற ஊரை உருவாக்கினார். அதுவே, இன்று மருவி,காலடிப்பேட்டையானது.மேலும், 1734ம் ஆண்டு முதல், நெசவாளர்கள் தேவை அதிகரிக்க, கூவம் நதிக்கரை ஓரத்தில், ஒரு பேட்டை உருவாக்கப்பட்டது. சிறிய தறிகள் அங்கு அமைக்கப்பட்ட காரணத்தால், சின்னத்தறிப்பேட்டை என அழைக்கப்பட்டு, நாளடைவில் அது சிந்தாதரிப்பேட்டையானது.இதேபோல், அன்று கிழக்கிந்திய கம்பெனியின் கீழ், சாயம் போடுபவர்களும், வெளுப்பவர்களும் அதிகளவில் இருந்தனர். இவர்களுக்கு திறந்தவெளியும், தண்ணீரும் தேவைப்பட, இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடமே, வண்ணாரப்பேட்டை.நெசவுத் தொழில் தவிர, பெரிய தொழில்கள் எதுவும் மெட்ராசில் இல்லை. இன்றோ அவர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது.புதுவண்ணாரப்பேட்டை, புஞ்சம்மாள் தெரு, இருசப்பன் தெரு மற்றும் வண்ணாரப்பேட்டை, கோதண்டராமன் தெரு உள்ளிட்ட இடங்களில், சலவை கூடங்கள் உள்ளன.புதுவண்ணாரப்பேட்டை,புஞ்சம்மாள் தெருவில் உள்ள சலவை கூடத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 200க்கும் மேற்பட்டோர் தங்கி, சலவை தொழில் செய்கின்றனர்.இவர்களுக்காக, தமிழக அரசு சார்பில், சமீபத்தில், 2 கோடி ரூபாய் செலவில், 46 ஓய்வறைகள் கட்டி கொடுக்கப்பட்டது.இவர்கள், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பகுதியில் உள்ள லாண்டரிகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்களில் இருந்து துணிகளை எடுத்து வந்து, சலவை செய்து தருகின்றனர்.துணிகள் துவைப்பதில், வாஷிங் மிஷன் உள்ளிட்ட நவீன கருவிகள் வந்த காரணத்தால், பலரும் வேலை இழந்து, வேறு வேலை தேடி செல்கின்றனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'சலவை கூடத்தில் போதிய பராமரிப்பு இல்லை. தண்ணீர் வசதி கூட சரிவர கிடைக்காததால், அதிக துணிகளை சலவைக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய் கொடுத்து ஓய்வறை கட்டி கொடுக்கும் அரசு, இதுவரை, சலவைக் கூடத்தில் வெளியேறும் கழிவுநீர் செல்ல வழிவகை செய்யவில்லை. இதனால், பலர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.

நான் 30 ஆண்டுகளாக சலவை தொழில் செய்கிறேன். மூன்று தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். 'வாஷிங் மிஷின்' வந்த பின், எங்கள் தொழில் அழிந்து விட்டது. எங்கள்கூடத்தில், 30க்கும் உட்பட்டோரை இத்தொழில் செய்கிறோம்.எஸ்.சேகர், 53,
சலவை தொழிலாளி
துணி சலவை செய்ய, 15 முதல் 20 ரூபாய் வரையும், அயனிங் உடன் சேர்ந்து, 25 ரூபாயும் வழங்கப்படுகிறது. மக்கள் லாண்டரி கடைகளில், ஒரு துணிக்கு, 40 முதல் 50 ரூபாய் வரை தர முன்வருகின்றனர். எங்களுக்கு,10 ரூபாய் அதிகம் தந்து, நேரடியாக துணிகளை சலவைக்கு கொடுக்க முன்வர மறுக்கின்றனர்.
எம்.தங்கமணி, 45,
சலவை தொழிலாளி

'சலவை கூடத்தில் போதிய பராமரிப்பு இல்லை. தண்ணீர் வசதி கூட சரிவர கிடைக்காததால், அதிக துணிகளைசலவைக்கு வாங்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய் கொடுத்துஓய்வறை கட்டி கொடுக்கும் அரசு, இதுவரை, சலவைக் கூடத்தில் வெளியேறும் கழிவுநீர் செல்ல வழிவகை செய்யவில்லை.இதனால், பலர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்'
என.எம்.சீனிவாசன், 65,
சலவைத் தொழிலாளிசலவை தொழிலாளி

பலர் வயதாகி உயிரிழந்து விட்டனர். சொற்பம் உள்ளோரே, இந்த தொழில் செய்கின்றனர். அடுத்த தலைமுறையினர் இந்த தொழிலில் இல்லை. இன்னும் சில காலங்களில், இந்த தொழில் இல்லாமல் போகலாம்.
கே.விஜயன், 60,
சலவை தொழிலாளி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X