சேலம்: சேலம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, மேட்டூர் அணை உபரி நீர் மூலம், 100 ஏரிகளை நிரப்பும், 565 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று அடிக்கல் நாட்டினார்.
மழை காலங்களில், சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நிரம்பி, காவிரியில் வெளியேறும் உபரி நீர், கொள்ளிடம் வழியாக, வீணாக கடலில் கலக்கிறது.பல டி.எம்.சி., தண்ணீர் வீணாகும் சூழலில், அணை அமைந்துள்ள, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், வறட்சியின் பிடியில் தவிக்கின்றன.இதனால், 'மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு திருப்ப வேண்டும்' என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது.முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவுப்படி, 'சரபங்கா வடிநிலத்தில் உள்ள, 100 வறண்ட ஏரிகளை, நீரேற்று முறை மூலம் நிரப்ப முடியும்' என, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தை, 565 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. இத்திட்டப்படி, மேட்டூர் அணை உபரி நீர், மின் மோட்டார்கள் மூலம், நீரேற்றம் செய்யப்பட்டு, ஓமலுார், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி தாலுகாக்களில் உள்ள, 100 ஏரிகளில் நிரப்பப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை, 10:00 மணிக்கு, சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி ஏரியில் நடந்தது.

அடிக்கல் நாட்டி, முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:நான் அமைச்சராக பதவியேற்ற, 2011ம் ஆண்டு முதல், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால், அவற்றில் கிடைக்காத மகிழ்ச்சியை, இந்நிகழ்ச்சியில் பெற்றுள்ளேன்.எனக்கு தெரிந்தவரை, இது வானம் பார்த்த பூமியாக, வறண்டு இருந்தது. அதனால், 565 கோடி ரூபாயில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது, 11 மாதங்களில் முடிந்து, 100 ஏரிகளும் நிரம்பியிருக்கும். என் கனவு திட்டமான காவிரி - கோதாவரி ஆறுகள் இணைக்கப்பட்டால், வீணாக கடலில் கலக்கும், 200 டி.எம்.சி., தண்ணீர், தமிழகத்துக்கு கிடைக்கும்.இதனால், டெல்டா பகுதி மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் வளம் பெறும்.இவ்வாறு, அவர் பேசினார்.
சிறப்பு அம்சங்கள்
* பிரதான பம்பிங் ஸ்டேஷன், மேட்டூர் அருகேயுள்ள திப்பம்பட்டியில் அமைக்கப்படும்
* 100 ஏரிகளை நிரப்புவதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதோடு, 4,238 ஏக்கர் பயன்பெறும்
* வறட்சியில் திண்டாடும், நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலுார், கெங்கவல்லி, இடைப்பாடி ஒன்றிய பகுதிகளில், இனி காவிரி பாயும்
* ஓராண்டுக்குள் திட்டப்பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE