சென்னை: மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அது குறித்து பின்னர் தெரிவிக்கிறேன் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
திரைமறைவில், கூட்டணி குறித்தும், தூதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, 'டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம்' என, காட்டமாக பேட்டி அளித்தார். மேலும், 'குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கத் தயார்' என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசினார்.

இதற்கிடையே தனது அரசியல் கட்சி பெயரை அறிவிப்பதற்கான முதற்கட்ட பணிளை, ரஜினி துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் நிருபர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது: கட்சி துவங்குவது குறித்து ஓராண்டிற்கு பின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அப்போது நிறைய கேள்விகள் எழுந்தது. அதற்கு பதில் கொடுத்தேன். நிறைய விஷயங்களை நாங்கள் பரிமாறி கொண்டோம். அவர்களுக்கு எல்லாம் திருப்தி ஏற்பட்டது. ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தி கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றம் கிடைத்தது. அது குறித்து இப்போது கூற விரும்பவில்லை. நேரம் வரும் போது தெரிவிக்கிறேன்.
முஸ்லிம் மத குருமார்களை சந்தித்தது இனிமையானதாக இருந்தது. சகோதரத்துவம், அன்பு, அமைதி, ஆகியவை நிலவ உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்கள். நானும் இருப்பேன் என தெரிவித்தேன். சிஏஏ, என்பிஆர் குறித்து முஸ்லிம் மத குருமார்கள் ஆலோசனை செய்து பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என தெரிவித்தேன். அதற்கு என்னால் முடிந்த அளவு உதவுவதாக தெரிவித்துள்ளேன்.
தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நானும் கமலும் நிரப்புவது குறித்து காலம் தான் பதில் சொல்லும். ஒரு விஷயத்தில், எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயத்தை பின்னர் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி தலைமையில் கூட்டணி
இந்நிலையில், பெயர் கூற விரும்பாத, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர் ஒருவர், ரஜினி தற்போது கூட்டணி முடிவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் ஆதரவு குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவித்தார். மேலும், கட்சி அறிவிப்பு குறித்தும், 2021 தேர்தலில் தனது தலைமையில் கூட்டணி இருக்கும் என ரஜினி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE