சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 07, 2020
Share
Advertisement
  'டவுட்' தனபாலு

பா.ஜ., - எம்.பி., சுப்பிரமணியன்சாமி: சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தால், தேர்தலில் போட்டியிட முடியுமா, இல்லையா என்பது சட்டப் பிரச்னை. கட்சியை வழிநடத்த, அவருக்கு திறமையும், அனுபவமும் உள்ளது. அதனால், கட்சியில் மாற்றம் வரும்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க., வில் பொறுப்பில் இருப்பவர்களே, 'சசிகலாவுக்கு, கட்சியில் இடம் கிடையாது' என, தெளிவாக கூறி விட்டனர். கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நீங்கள், அடிக்கடி சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை பார்த்தால், உங்கள் கட்சி மேலிடம், உங்களுக்கு ஏதோ ஒரு பொறுப்பு கொடுத்து, அதை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களோ என, 'டவுட்'டா இருக்கே!

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: குடியுரிமை திருத்தசட்டத்தை எதிர்த்து, நாடே கொந்தளிக்கும் நிலையில், ஜனநாயகத்தின் இதய பீடமான பார்லிமென்டில், அதுபற்றி விவாதிக்க மத்திய அரசு அனுமதி அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. இரண்டு சபைகளிலும் விவாதம் நடக்கவில்லை.

டவுட் தனபாலு: அட நீங்க வேற... குடியுரிமை சட்ட விஷயம், இப்போது பழங்கதையாகி விட்டது. கொரோனா வைரஸ் தான், 'லேட்டஸ்ட்!' இது போன்ற விஷயங்களில், நீங்கள் இன்னும், 'அப்டேட்' ஆகவில்லையோ என்ற, 'டவுட்' வருதே...!

தமிழக காங்., தலைவர் அழகிரி: பிரதமர் மோடி ஆட்சியில், வங்கிகள், திவால் நிலையை நோக்கிச் செல்கின்றன. பல வங்கிகள் செயல்படவே இல்லை. பெயருக்குத் தான் இருக்கின்றனவே தவிர, கடனும் கொடுப்பதும் இல்லை; அதை வசூலிப்பதும் இல்லை.

டவுட் தனபாலு: என்னங்க நீங்க... குழந்தை மாதிரி பேசுறீங்க? உங்கள் காங்கிரஸ் ஆட்சியிலும் இரண்டு வங்கிகள் திவாலானதாக ஆளும் கட்சிக்காரங்க சொல்றாங்களே... இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறீங்களாங்கிறது தான் என்னோட, 'டவுட்!'

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: பார்லிமென்ட் என்பது, ஜனநாயகத்தின் கோவில் என்பதை, மத்திய, பா.ஜ., அரசு நினைவுபடுத்தி செயல்பட வேண்டும். காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஏழு பேரின் இடைநீக்க உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.

டவுட் தனபாலு: சூப்பரப்பு... கோவிலுக்குள் நுழைந்து, காகிதங்களை கிழித்து வீசுவோரை, செவிட்டில் அறையாமல் பூரண கும்ப மரியாதையா கொடுக்கச் சொல்கிறீர்கள்? நீங்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போது, எதிர்க்கட்சியினர் உங்கள் மீது காகிதங்களை கிழித்து வீசினால், இப்படித் தான், ஜனநாயகம், கோவில் என, 'டயலாக்' பேசுவீங்களா என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்களேன்!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கூட்டணி பற்றி இப்போது கேள்வி கேட்க வேண்டாம். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் தான், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டணி பற்றி பேசுவர். கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கெல்லாம், இப்போது பதில் அளிக்க முடியாது.

டவுட் தனபாலு: கரெக்டா சொன்னீங்க... மருத்துவர் அய்யா. 'எந்த கூட்டணியில் சேரப் போகிறோம் என்பது, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் வரை, எனக்கே தெரியாது. இதில், இவர்கள் வேறு எரிச்சலை கிளப்புகின்றனரே' என, மனதுக்குள் குமுறுகிறீர்ளோ என்ற, 'டவுட்' வருதே...!

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 'கொரோனா' சிறப்பு தனி வார்டு அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்... அச்சப்பட தேவையில்லை.

டவுட் தனபாலு: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதுடன் முடித்திருக்கலாமே... கொரோனாவுக்கு சிறப்பு வார்டு ரெடியா இருக்கு என்ற, 'எக்ஸ்ட்ரா' வார்த்தைகளை பேசியது தான், எங்களுக்கு, 'டவுட்'டா இருக்கு!


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X