சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

உச்ச நீதிமன்றம் கேட்காமல் யார் கேட்பது?

Added : மார் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
உச்ச நீதிமன்றம் கேட்காமல் யார் கேட்பது?

வீ.ராஜகோபால், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: சுதந்திர இந்தியாவில், உயர்கல்வி உட்பட ஏராளமாக கல்வி நிலையங்கள் பெருகி விட்டன. சமுதாயத்தின் அனைத்து பின்தங்கிய பிரிவினரும், உயர் கல்வி பெற வசதியாக, 'ஸ்காலர்ஷிப்'களும் தாராளமாக வழங்கப்படுகின்றன.

'ஷெட்யூல்டு' வகுப்பினர் போல, பின்தங்கிய சமுதாயத்தினருக்கும், இட ஒதுக்கீடுகள் உள்ளன. அச்சமுதாயத்தினர் பலர் படித்து, முன்னேறி உயர்நிலையை எட்டி இருக்கின்றனர். பல்கலை உட்பட கல்வி நிலையங்களுக்கும் நிறுவனர்களாக பலர் உள்ளனர். தொழில், வணிகம் உள்ளிட்ட துறைகளில் பலர் முன்னணியில் உள்ளனர். பொருளாதார வசதி பெற்ற அவர்கள் கூட, இட ஒதுக்கீடு சலுகையை விட்டு விட விரும்பவில்லை. கிராமப்புறங்களில், விவசாயம், கைத்தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளோர், இன்னமும் அடித்தட்டு நிலையில் தான் உள்ளனர். போதிய வருமானம் இன்றி, வாழும் பிரிவினருக்கு மட்டுமே, கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்பது தான், உண்மையான சமூக நீதியாக கருத வேண்டும்.

லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும், தங்களை சேர்ந்தோருக்கு, ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும் என, குரல் கொடுப்பது, சமூக நீதி அல்ல; சமூக அநீதி தான். உத்தரகண்ட் மாநில, வழக்கு ஒன்றில், 'பதவி உயர்வுகளில், இட ஒதுக்கீட்டை அடிப்படையாக கோர முடியாது' என, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், தற்காலிகமான இந்த சலுகை, படிப்படியாக நீட்டிக்கப்பட்டது; இது, துவக்க கால நிலை; பின், பதவி உயர்வுகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இத்தருணத்தில், 'அரசியல் சாசனத்தின் அடிப்படையில், இட ஒதுக்கீடு சலுகை, 10 ஆண்டுகள் காலத்திற்கானதே; ஒருவருக்கு பதவி உயர்வு, இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக கோரப்படலாகாது' என, அதிரடியாக உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

பல காலமாக, சமுதாய அமைப்பில் கீழ் நிலையில் இருந்த பிரிவினருக்கு, இட ஒதுக்கீடு வழங்குவது, சமூக நீதி தான்; இதற்கு, கால அவகாசம் என, ஒன்று உள்ளதே... இதை, உச்ச நீதிமன்றம் கேட்காமல், யார் கேட்பது!


எதிர்க்கட்சிகள் பின்பற்றும் இழிவான செயல்!


என்.மதியழகன், பெண்ணாடம், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: எந்த நாடும், நமக்கு எதிரி நாடு இல்லை, பாகிஸ்தான் மட்டும், பயங்கரவாதத்துடன் கூடிய நாடாக இருக்கிறது. அந்த அச்சுறுத்தலை சமாளிக்கவே, சட்ட விரோதமாக, நாட்டில் ஊடுருவும் பயங்கரவாதிகளை சமாளிக்கவே, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து, 12 ஆண்டுகளாக, இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என, கூறுகிறது, குடியுரிமை சட்டம்.

இந்தியாவில், இந்த சட்டம், 1955ல் ஏற்படுத்தப்பட்டது. அதை, 2014, டிச., 31க்கு முன், குடியேறியோருக்கு, இந்திய குடியுரிமை வழங்க, சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. 'ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, வாழ்வோருக்கும் குடியுரிமை வழங்கலாம்' என, சட்டம் கூறுகிறது. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்க்கும் மதவாதிகளுக்கும், பொதுமக்களுக்குமான கலவரத்தில், டில்லியில் மட்டும், 27 பேர் பலியாகியுள்ளனர். இத்தருணத்தில், 'அமைதி மற்றும் நல்லிணக்கம் தான், நம் நாட்டின் கொள்கை. இந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும்' என, டில்லி மக்களை பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாய் கேட்டுள்ளார்.

மதச்சார்பின்மை என, கூறிக் கொள்ளும் எதிர்க்கட்சிகள், தேர்தல் களத்தில் நேருக்கு நேர் நின்று, ஜெயிக்க முடியாத கோழைகள். மதவாதிகளின் பின்னால் நின்று, தொடை தட்டுவதும், கலவரத்தை துாண்டி குளிர்காய்வதும் தேசத்திற்கு செய்யும் துரோகம். 'தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை, பார்லிமென்டில் நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, உச்ச நீதிமன்றம் சென்று, சட்டமாக்கி விட்டனர். அச்சட்டத்தை திரும்பப் பெற, போராட்டம் நடத்துவது, பயன்படாது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது, கவனத்திற்குரியது. எதிர்வரும் தேர்தலை மனதில் நிறுத்தி, சிறுபான்மையினரின் ஓட்டுகளை தந்திரமாக பெற, எதிர்க்கட்சிகள் பின்பற்றும் இழிவான செயல், இது!


ரஜினியால் நல்ல மாற்றம் தர முடியுமா?


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 50 ஆண்டுகளாக, தமிழகத்தை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகள் சீர்குலைத்து விட்டது என, பலரும் புலம்பி வருகின்றனர். அதற்கு, யார் காரணம் என்பதை சிந்திக்க வேண்டும்.தமிழகத்தை, 1967- இருந்து, இன்று வரை, மாறி மாறி, இரு திராவிடக் கட்சிகளை, மக்கள் அமர வைத்துள்ளனர்.

தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொடுத்து உதவிய இலவசப் பொருட்களுக்கு, தமிழக மக்கள் விலை போனது தான், ஜனநாயகப் படுகொலை. மக்கள் ஜனநாயக உரிமையை, வியாபார பொருளாக வைத்தது, காலத்தின் கொடுமை! இன்று, 'காசு இல்லாமல் காரியமில்லை' என்ற கேவல நிலைமை தான், தமிழர்களிடம் வந்து விட்டது. இத்தருணத்தில், திராவிடக் கட்சிகளுக்கு, மாற்றாக, ஊழலை ஒழிக்க, ஒருவர் வர வேண்டும். அவர் நல்லாட்சி தர வேண்டும் என்பது, பலரது பிரார்த்தனையாக இருக்க வேண்டும். இன்று, அனைவரது கண்களுக்கும் மாற்றாக தெரிவது, நடிகர் ரஜினிகாந்த் தான். ஆனால், எம்.ஜி.ஆர்., காலம் போல, இன்றும் மக்கள் வெறும் திரை உலக கவர்ச்சியை மட்டும் வைத்து, இவருக்கு ஓட்டு போட்டு விடுவரோ என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.

'புறங்கையில் தேனை நக்கி, பழக்கப்பட்டோர், வெறும் கையை நக்குவரா' என்பதையும் யோசிக்க வேண்டும். ரஜினிகாந்த் தேர்தலில் நேர்மையாய் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடும், திராவிடக் கட்சிகள் கொள்ளையடித்து வைத்திருக்கும், பணத்தை தண்ணீராக அள்ளி இறைக்கும். திராவிடக் கட்சிகளிடையே வாக்காளர்களின் ஓட்டுகள் சிதறாமலிருக்க, ரஜினி என்ன செய்யப் போகிறார் என்பது தான், மிகப்பெரிய கேள்வியாக, இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!


மின்சார முறைகேட்டை தடுக்க முடியும்!


எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும்' என, மக்களிடையே கோரிக்கை உள்ளது. அதை, கண்டுகொள்ளாமல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான், மின் வாரிய ஊழியர்கள் கணக்கெடுக்க வருகின்றனர்.

நான், எந்த வீட்டில் குடியிருந்தாலும், அன்றாடம் பயன்படுத்தும் யூனிட்டுக்களை குறிப்பெடுத்து வைக்கிறேன். சென்னை, ஓ.எம்.ஆர்., பகுதியில், தற்போது வசித்து வருகிறேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 8ம் தேதிக்குள் கணக்கெடுக்க, ஊழியர்கள் வருவர்; ஆனால், தற்போது, 18ம் தேதி தான் வருகின்றனர். கணக்கெடுக்க, 10 நாட்கள் கூடுதலாகும்போது, மின் பயன்பாடு, 500 யூனிட்டுகளுக்குள் இருந்தால் பிரச்னையில்லை. 500 யூனிட்டுகளுக்கு, மின் கட்டணம், 11:30 ரூபாய்; ஆனால், 510 யூனிட்டுகள் என, குறிப்பிட்டு இருந்ததால், மின் கட்டணம், 1,846 ரூபாய்- கட்ட வேண்டும்.

நான், அன்றாடம், 'எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறேன்' என, துல்லியமாக கணக்கு வைத்திருப்பதால், மின் வாரிய மோசடியை சுட்டிக் காட்ட முடிகிறது. இதுபோல, எத்தனை பேர் துல்லியமாக மின் பயன்பாட்டை குறித்து வைத்திருப்பர்? மின் வாரியம், 100 யூனிட் மின்சாரம் இலவசம் என முழங்குவது, சும்மா சப்பைக்கட்டு தான். 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஈடாக, 150 யூனிட் கூடுதலாக கணக்கிட்டு, 450 ரூபாய் வசூலிப்பது, மின் வாரியத்தின் மோசடி தானே! இரண்டு மாதத்திற்கு ஒரு முறை, மின் பயனீட்டாளர்களின் வீடுகளுக்கு சென்று, ஊழியர்கள் கணக்கெடுப்பு நடத்துவதை விட, மாதத்திற்கு ஒரு முறை கணக்கெடுத்தால், முறைகேடு நடக்காது; தடுக்க முடியும்!


ரத்தத்தோடு ஊறியது ஹிந்து மதம்!


சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: நாட்டில், ஹிந்துக்கள், 80 சதவீதம் பேர் உள்ளனர். உரிய முறையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்யப்பட்டால், சரியான தகவல் தெரிய வரும். வெளிநாடுகளில் இருந்து பெறும் பணத்தை பயன்படுத்தி, இங்குள்ள கிராமங்களில் மத மாற்றங்கள் நடந்து வருகின்றன.

நேபாளத்தில் உள்ளது போல், மத மாற்றத்தில் ஈடுபடுவோரின் குடியுரிமை பறிக்கப்படுவதுடன், நாடு கடத்தவும் சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போது தான், மத மாற்ற சம்பவங்கள் குறையும். தேசிய குடியுரிமை பதிவேட்டின்படி, அவரவர் தழுவும் மதத்தையே, இந்திய குடிமகனாக இருக்கும் வரை தழுவ வேண்டும். மீறும் பட்சத்தில், குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்.

'சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டம், இஸ்லாமியர்களை ஒருபோதும் பாதிக்காது' என, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளனர். காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் துாண்டுதலால், இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்துவது, நாட்டின் ஒற்றுமைக்கு உகந்த சூழலையை உருவாக்காது. 'குடியுரிமை சட்டம், இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அவர்களை காக்க, நாங்கள் உறுதியுடன் செயல் படுவோம்' என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., சட்டசபையில் உறுதி அளித்துள்ளார்; அதை அனைவரும் ஏற்க வேண்டும்.

மத மாற்றத்தை அறவே கைக்கொள்ளாதது, ஹிந்து மதம். மற்ற மதங்களை வெறுப்பதும், மத மாற்றம் செய்வதும் ஹிந்துக்களிடம் ஒரு போதும் இல்லை. அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதே, ஹிந்து மதத்தின் கருத்து. கடவுளை அடைய பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழியை பின்பற்றுகிறது. அவரவர் வழியில் சென்றால், யாருக்கும் பிரச்னை இல்லை. அனைத்து மதத்தினருக்கும், இந்தியா சொந்தமானது. வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியோரை, கணக்கெடுப்பதில் தவறில்லை; இதை, அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் கட்சி மாறுவது, கூட்டணி மாறுவது போன்றதல்ல, மதம். பிறப்பால், ரத்தத்தோடு ஊறியது, மதம் என்பதை அனைத்து ஹிந்துக்களும் உணர வேண்டும்!


அரசு ஊழியர்கள் 'ஓபி' அடித்தால் ஆபிஸ் தாங்குமா?


டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அரசு ஊழியர்கள், பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாமல் இருந்தால், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

பணி நேரத்தில், புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை அணிந்திருந்தால் மட்டும் போதாது. பணி நேரத்தில், பணிக்கான இடத்தில் அமர்ந்து, பணி செய்தாக வேண்டும். அப்போது தான், கோப்புகள், ஒரே மேஜையில், மலை போல் தேங்காது. அரசு அலுவலகங்களில், பல மேஜைகளில் பார்த்தால், அலுவலர்கள் இருப்பதே தெரியாத அளவுக்கு, கோப்புகள் உயரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். எட்டு மணி நேர பணிகளை, பல ஊழியர்கள் முடிப்பதே கிடையாது.

உதாரணத்திற்கு, சென்னை தலைமை செயலக பணியாளர்கள், காலை, 9:45 மணிக்கு அலுவலகத்திற்கு கட்டாயம் வர வேண்டும். ஆனால், முற்பகல், 11:00 மணிக்கு தான், கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து, கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல, மாலை, 5:45 மணிக்கு தான் பணிகள் முடியும். ஆனால், 4:00 மணியில் இருந்தே, அலுவலகத்தில் இருந்து, கூட்டம் கூட்டமாக வெளியே சென்று கொண்டிருக்கின்றனர்.

எட்டு மணி நேர பணி நேரத்தில், காலை தேநீர், மதியம் சாப்பாடு, மாலை தேநீர் என, மூன்று நேரங்களிலும், அரசு வளாகத்தில் உள்ள, 'கேன்டீன்' களில், ஆங்காங்கே சாப்பிட்டுக் கொண்டும், குழுக் குழுவாக நின்று பேசியபடியும் இருக்கின்றனர். மீதியுள்ள நேரங்களில், 'மொபைல்' போனில், 'டிவி' சீரியல் மற்றும் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி காலங்கள் வேகமாக நகர்கிறது; பணிகள் தான் ஆமை வேகத்தில் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் இதே நிலை தான் நீடிக்கிறது.

இதை சரி செய்ய, அதிகாரிகள் முதல், கடை நிலை ஊழியர்கள் வரை, பணி நேரத்திற்கு விரல் ரேகை பதிய, 'பயோமெட்ரிக்' கருவிகளை, அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் துறை வாரியாகவும், பிரிவு வாரியாகவும் பொருத்த வேண்டும். எட்டு மணி நேரம் பணியாளர்கள், விரல் பதிவில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பணி நேரத்தில், மொபைல் போனில் பேச தடை விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பொதுமக்களின் பிரச்னைகள் விரைவில் முடிவுக்கு வரும்; அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
09-மார்-202020:33:57 IST Report Abuse
venkat Iyer திரு.ஈஸ்வரன் தலைமை செயலக பணிகள் குறித்து கூறியிருந்தார்கள்.நானும் தலைமை செயலகத்தில் முன்பே இருக்கும் முதலமைச்சர் குறைதீர்ப்பு பிரிவில் நடக்கும் செயல்பாடு களை பார்த்தால் கண்ணீர்தான் வரும்.மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தினால் பிரச்சனை தீராத நிலையில்தான் தலைமை செயலகம் நோக்கி வருகின்றார்கள்.இங்கு உள்ளவர்கள் நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.மாவட்ட நிர்வாகத்தில் சம்மந்தப்பட்ட துறையை தந்தான் அணுக வேண்டும் என்று கூறுகின்றனர்.இதை சொல்லவா இவர்கள் இங்கு சம்பளம் வாங்குகிறார்கள்?.பட்டா வாங்க லஞ்சம் கேட்கிறார்கள் என்று சொன்னால் அதை ஏற்பது கிடையாது.தலைமை எச்சரிக்கை கடிதம் அனுப்பினால் மாவட்ட நிர்வாகத்தில் பயப்படுவார்கள்.இதை புரிந்து மனுவை ஏற்று அனுப்புவதில்லை.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
08-மார்-202007:14:27 IST Report Abuse
Darmavan அரசு ஊழியர்கள் இதனை கோப்பு ஒரு நாளில் முடிக்க வேண்டும்.அல்லது இதனை கேஸுகள் முடிக்க வேண்டும் என்று இருக்க வேண்டும் எல்லா வேலைகளுக்கும் கால நிர்ணயம் செய்ய வேண்டும்.பொது மக்க இதற்கு போராட்டம் நடத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X