அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், தன் மனைவி, மகள், மருமகன் ஆகியோருடன், குடும்ப சகிதமாக, இந்தியா வந்தது, இந்தியா - அமெரிக்கா உறவில், புதிய திருப்பத்தை ஏற்படுத்த உள்ளதாக, வெளியுறவுத் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்திய மண்ணில், அதிபர் டிரம்பின் முதல் பயணம், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின், ஆமதாபாத் நகரில் துவங்கியது.அங்கு, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை, டிரம்ப் திறந்து வைக்க, பிரதமர் மோடி ஏற்பாடு செய்தது, பெரிய அளவில் பேசப்படுகிறது.அந்த மைதானத்தில் நடந்த வரவேற்பின் போது, 'நமஸ்தே டிரம்ப்' என, அவரை வரவேற்று, பிரதமர் மோடி, மூன்று முறை கூறியதில், டிரம்ப் அசந்து விட்டார்; உச்சிகுளிர்ந்து விட்டார்.குஜராத் மாநிலத்தின் முதல்வராக, 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார் மோடி. அப்போது நடந்த மதக் கலவரத்தில், பலர் இறந்தனர். இதை உலக செய்தியாக்கி, அவரை அவமானப்படுத்தி, அமெரிக்கா செல்ல அவருக்கு, 'விசா' தராமல் தடுத்தது, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு.அதற்கு காரணம், காங்., தலைவர் சோனியா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய மத்திய அமைச்சர், சிதம்பரம் என்பது, மோடி ஆதரவாளர்களின் கருத்து.
அந்த தடையை, அப்போதைய, அமெரிக்க அதிபர், பராக் ஒபாமாவால், நீக்க வைத்தது, மோடியின் ராஜ தந்திரம்.மோடி மீதிருந்த, அமெரிக்கா வர தடையை நீக்கியதுடன், அமெரிக்காவுக்கு வருமாறு அன்புடனும் அழைத்தார், ஒபாமா. அதுவரை, அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு, சிறப்பாக இருந்ததில்லை. இதற்கு காரணம், இந்தியா வலிமை வாய்ந்த வல்லரசாக வர, அமெரிக்க நிர்வாகம், எப்போதும் விரும்பியதில்லை என்பது தான் உண்மை. ஆனால், அந்த முரண்பாடுகளை பின்னுக்கு தள்ளி, ஒபாமா, அவருக்குப் பின் டிரம்புக்கு, இந்தியா விரித்த சிவப்பு கம்பளத்துக்கு அடியில், முரண்பாடுகள் மிதிபட்டு விட்டன; நீக்கப்பட்டு விட்டன. இப்போது, அமெரிக்கா - இந்தியா உறவு வலிமை பெற்று விட்டது என்பதே, உலக நோக்கர்களின் கருத்து.இந்தியாவில் நடந்து வரும், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு, அதிபர் டிரம்ப் என்ன கூறுவார் என, உலகமே எதிர்பார்த்தது.
'இது, இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை' என கூறி, எதிர்பார்த்த வாய்களை, டிரம்ப் அடைத்து விட்டார்.மேலும், இந்தியா வந்து, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு, வர்த்தக ஒப்பந்தமும் மேற்கொண்டு, தன் பயணத்தை இனிதே நிறைவு செய்துள்ளார் அதிபர் டிரம்ப். இதனால், 'மோடியை பாராட்ட மட்டும் அல்லது கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறக்க மட்டும் இந்தியா செல்லவில்லை; பெரிய அளவில் வர்த்தகமும் செய்து வந்துள்ளேன்' என்பதை, அமெரிக்கர்களுக்கு, டிரம்ப் உணர்த்தியுள்ளார்.எனினும், பிரதமர் மோடியுடன் எளிதாக வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என்பதையும், அனைவருக்கும் உணர்த்தும் விதமாகத் தான், 'பிரதமர் மோடி, கடினமாக பேரம் பேசும் வியாபாரி' என்றும், டிரம்ப் கூறினார்.இப்படி, அமெரிக்காவுடன் இந்தியா, சமீப காலமாக, வெகு நெருக்கமாக ஆகியுள்ள நிலையில், இந்தியாவின் நிரந்தர கூட்டாளி நாடான ரஷ்யா, இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது, முக்கியமான கேள்வியாக உள்ளது.
'உலக அளவில், இஸ்லாமிய பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது' என கூறிய, டிரம்ப், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவரை, அமெரிக்கா ஒழித்ததை பெருமையாக கூறினார்.அதுபோல, பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு தான் அளித்த, பல லட்சம் கோடி ரூபாய் நிதியை நிறுத்தி விட்டேன் என்பதையும், இந்தியாவில் டிரம்ப் கூறி, இந்தியர்களை மகிழ்விக்கச் வைத்தார்.மேலும், மோடியின் கோரிக்கைகளான, 'பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சிரியா, ஈரான், பாகிஸ்தான் நாடுகளை, பயங்கரவாத நாடுகளாக அறிவிக்க வேண்டும்' என்பதையும் டிரம்ப் ஏற்றார்.பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும், எப்போதும் நெருக்கம் ஜாஸ்தி. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி நிறுத்தப்பட்டதும், பாகிஸ்தானுடன் அதிகமாக ஒட்டிக் கொண்ட சீனா, அந்நாட்டிற்கு பணத்தை வாரி இறைத்தது.
சீனாவில் இருந்து லாகூர் வரை, பட்டு வழிச்சாலையை உருவாக்க, பாகிஸ்தானுக்கு சீனா உதவுகிறது.சீனாவும், இந்தியாவும் சேர்ந்து, தென் கிழக்கு ஆசியாவில் பெரிய வல்லரசாக வந்தால், தனக்கு ஆபத்து என்பது, அமெரிக்காவின் பொதுவான நிலைப்பாடு. அதை, மோடி - டிரம்ப் சந்திப்பு, மாற்றி விட்டது. டிரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்து, உலகை அதிர வைத்து விட்டது, இந்தியா.இதில், பிரதமர் மோடியின் ராஜ தந்திரமும் உள்ளது.
முக்கிய உலகத் தலைவர்களான ரஷ்யாவின் புடின், ஜெர்மனியின் ஏஞ்ஜெலா மெர்க்கல் போன்றோருக்கு கூட, இந்தியாவில் இந்த அளவு வரவேற்பு கிடையாது. இதனால், அந்த நாடுகளின் வெறுப்பை, மோடி எப்படி சமாளிப்பார் என்பது மற்றொரு ராஜதந்திர கேள்வி. இந்தியா - அமெரிக்கா கூட்டணி, இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகிற்கே நல்லது என்பதை, மேலை நாடுகளிடம், பிரதமர் மோடி எப்படி எடுத்து சொல்வார் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நிலைமை இவ்வாறு இருக்க, டிரம்பின் டில்லி வருகையின் போதே, டில்லியில் கலவரத்தை நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்வியும் எழுகிறது. அவர் இந்தியாவில் இருக்கும் போதே, டில்லியில் பயங்கர வன்முறை நிகழ்ந்தது. அந்த வன்முறை, அமெரிக்க அதிபரை மிரட்டவா அல்லது மோடியை மிரட்டவா என்பது, அதை இயக்கியவர்களுக்கு தான் தெரியும்.டிரம்பின் இந்திய வருகை, அவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவரும், இந்த ஆண்டில் அமெரிக்க தேர்தலை சந்திக்க உள்ளார். அங்குள்ள இந்தியர் ஓட்டுகளை, கணிசமாக பெற வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், உலக, 'சாணக்கியர்' அதிபர் டிரம்பா, மோடியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சீனா, நம் எதிரி நாடு; உலகை ஆள துடிக்கிறது, அந்நாடு. ஆரம்பத்தில், ரஷ்யாவிடம் இருந்து, ராணுவ தளவாடங்களை வாங்கிய சீனா, அதன் தொழில்நுட்பத்தை தனதாக்கி, இப்போது தானே அவற்றை தயாரித்து, ஆயுதங்களை குவித்து வருகிறது.மேலும், தெற்கு சீனா கடல் பகுதியை சொந்தம் கொண்டாடுவது போல, இந்தியப் பெருங்கடலிலும் ஆதிக்கம் செலுத்த, சீனா நினைக்கிறது; அதற்கு பல காரணங்களும் உண்டு.தெற்கு சீனா கடல் பகுதி, எண்ணெய் வளம் நிரம்பியது. இந்த கடல் பகுதியில் உள்ள இலங்கைக்கு, சீனா, தாராளமாக நிதியுதவி அளிக்கிறது. ஏராளமான திட்டங்களை, பல ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தி வருகிறது.
கடந்த, 1991ல், சோவியத் யூனியன் உடைந்த பின், ரஷ்யா, முன்பிருந்த வலுவான நிலையில் இருந்து வீழ்ந்து வருகிறது. இதை, சீனா பயன்படுத்தி, உலக வல்லரசு நாடுகளில் மூன்றாவதாக வர முயல்கிறது; ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளப் பார்க்கிறது.இந்தியாவுக்கு எதிரி சீனா. அதுபோல, அமெரிக்காவுக்கும் எதிரி, சீனா தான். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல, அமெரிக்கா, இந்தியாவுக்கு நண்பனாகி விட்டது. இதற்கு நன்றிக்கடனாக, சீனாவின் இடத்தில், இந்தியாவை கொண்டு வர நினைக்கிறார், டிரம்ப்.
தென் கிழக்கு ஆசியாவில், அமெரிக்காவை மீறி, எந்த வல்லரசும் உருவாக முடியாது என்ற நிலையை, இதன் மூலம் ஏற்படுத்த, அமெரிக்கா நினைக்கிறது. இது, உலக சாணக்கியத்தனம். இந்த சாணக்கியத்தனத்தில், வெற்றி யாருக்கு என்பதை, காலம் தான் பதில் சொல்லும்.இந்த பயணம், இறுதியில், பிரதமர் மோடிக்குத் தான் வெற்றியை தந்து உள்ளது.ஏனெனில், இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை, உலக நாடுகள் சில, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கமிஷன் போன்றவை எல்லாம் விவாதித்து வருகின்றன. ஆனால், அமெரிக்கா, அதை கண்டுகொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில், உள்நாட்டில், முஸ்லிம்களின் ஒரு சாராரின் எதிர்ப்பை, பிரதமர் மோடி சம்பாதித்துள்ள போதிலும், உலக அரங்கில் அவர் வெற்றியே பெற்றுள்ளார். காரணம், அமெரிக்கா, இதில் தலையிடவில்லை. அமெரிக்காவை தலையிடச் செய்ய வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது தான், டில்லி கலவரம் என்ற கருத்தும் விவாதத்திற்குரியதே.
தொடர்ந்து இரண்டாவது முறையாக, பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக, பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் சிலவற்றிற்கு, மதச்சாயம் பூசப்படுகிறது. எனினும், எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், அந்த திட்டங்கள் அவசியம் என்பதை, எதிர்க்கட்சிகளே உணரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஏனெனில், மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன், மாதம் ஒன்றிரண்டு முறையாவது, பயங்கர குண்டுவெடிப்புகள், நாடு முழுவதும் நடந்த வண்ணமாக இருந்தன. 'பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாதா...' என்ற ஏக்கம், மக்கள் மத்தியில் நிலவியது.அதை, தன் நடவடிக்கைகள், திட்டங்கள் மூலம் செயல்படுத்தியுள்ளார் மோடி.
கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டில் எங்கும் குண்டுவெடிப்புகளோ, பயங்கரவாதிகளின் தாக்குதலோ கிடையாது. அதுபோல, சர்வதேச அரங்கில், பிரதமர் மோடியின் புகழ் உயர்ந்துள்ளது போல, இந்தியாவின் பெருமையும் உயர்ந்துள்ளது.எனினும், இனி வரும் காலங்களில், மோடிக்கு கடினமான பல சவால்கள் காத்திருக்கின்றன. மதத்தின் பெயரால் கலவரத்தை துாண்டிவிட்டு, குளிர்காயும், உள்நாட்டு அரசியல் குள்ளநரிகளை ஒழிக்க வேண்டிய பொறுப்பு, அவருக்கு உள்ளது.
அது போல, ஊழல் பெருச்சாளிகள், பொருளாதார மோசடி குற்றவாளிகள், கடத்தல்காரர்கள், அரசு வங்கி பணத்தை சூறையாடிய தொழிலதிபர்கள், எதிர்ப்பு ஊடகங்களையும் அவர் எப்படி சமாளிப்பார் என்பதை, காலம் தான் முடிவு செய்ய வேண்டும். எப்படியோ போகட்டும்; கடவுளே, இந்தியாவை காப்பாற்று!
பேராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரி
தொடர்புக்கு:
இ-மெயில்: prabhuraj.arthanaree@gmail.com