சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தமிழக அரசை பாராட்டியே தீர வேண்டும்!

Added : மார் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தமிழக அரசை பாராட்டியே தீர வேண்டும்!

ஆர்.சுப்ரமணியன், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி (பணி நிறைவு), ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: இன்று, நாட்டில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை, கோடிக்கணக்கில் உயர்ந்து கொண்டே வருகிறது.

மத்திய அரசின் கொள்கைகளில் மிக முக்கியமானதாக, 'பொதுத் துறை நிறுவன பங்குகளை, தனியாருக்கு விற்பது' என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு, அரசு நிறுவனங்களில் பங்கை விற்றால், ஒதுக்கீடு முறையில் அனைவருக்கும் வேலை கிடைப்பது அரிது. தனியாருக்கு, அரசு நிறுவனப் பங்குகள் விற்பதால், தனியாரின் ஆதிக்கம் தான் உயரும்.

பல கோடி ரூபாய் கொடுத்து, அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியார் கைப்பற்றினால், இடஒதுக்கீடு கொள்கைகளை பயன்படுத்துவரா... அப்படி, கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டால், தனியார் மீது, என்ன நடவடிக்கை அரசு எடுக்கும்; இதற்கு உத்தரவாதம் தருமா?

அரசுடைமை வங்கிகள் நலிவுற்றால், அதற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கி, அந்த வங்கிகளை நன்கு இயங்கும்படி செய்கிறது. ஆனால், பல லட்சம் கோடி ரூபாய் மூலதனத்துடன், இன்று தலை நிமிர்ந்து இயங்கும், எல்.ஐ.சி., போன்ற நிறுவனத்தை தள்ளாடும்படி செய்கிறது. இன்று, சொற்ப சதவீதப் பங்குகளை, தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு, அடுத்து வரும் ஆண்டுகளில், இந்த சதவீதத்தை உயர்த்த மாட்டார்கள் என்பது, என்ன நிச்சயம்?

நிதிப் பற்றாக்குறைக்கு, அரசின் பொது நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்று காசாக்குவது, சரியான தீர்வாகாது. இதே போன்று தொடர்ந்தால், ஒரு நாள் அரசின் பலமான நிறுவனங்கள் பல சதவீதம், தனியாருக்கு கை மாறுவது உறுதி.

நாட்டின் வறுமைக் கோட்டுக்கு கீழ், பல கோடி மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு அரசு தான், உதவிக்கரம் நீட்டுகிறது. இந்த உதவிக் கரத்திற்கு, தனியார் மயம் கேடு விளைவிக்கும்.அரசின் பொது நிறுவன பங்குகளை விற்கும்போது, அவற்றை சமானிய மக்கள் வாங்க முடியாது. அங்கு டாடா, அம்பானி, ரிலையன்ஸ் ஆதிக்கம் தான் ஓங்கும்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு, நாள் ஒன்றுக்கு, 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதன் வாயிலாக, ஆண்டிற்கு, 700 கோடி ரூபாய் நஷ்டம். போக்குவரத்தை சேவையாக அரசு கருதுவதால், அதை, தனியாருக்கு தாரை வார்க்கவில்லை. இதற்காக, தமிழக அரசை பாராட்டியே தீர வேண்டும்!

'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' தொடரக் கூடாது!

சுப்ர.அனந்தராமன், சின்னகாஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'நாடு முழுவதிலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், எச்சில் தொட்டு, பைல்கள் மற்றும் காகிதங்களை புரட்டக் கூடாது' என, உ.பி., மாநிலம், ரேபரேலி மாவட்ட தலைமை வளர்ச்சி அதிகாரி, அபிஷேக் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

வங்கிகளில், 'கேஷியர்'கள் எச்சில் தொட்டு, கரன்சி நோட்டுகளை புரட்டி எண்ணி, மக்களிடையே கொடுக்கும்போது, அருவருப்பு ஏற்படுகிறது.அதுபோல, சிலேட்டு பலகைகளில் எச்சில் தொட்டு, சிறு குழந்தைகள் துடைப்பது, கண்றாவியை ஏற்படுத்துகிறது. இதை, பார்த்தவுடன் பெற்றோர் கண்டிக்க வேண்டும். இனி, இந்த தவற்றை செய்தவாறு, குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

இதோடு, பாடப் புத்தக பக்கங்களை, எச்சில் தொட்டு புரட்டக் கூடாது என, கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். இதை, பிரதமர் மோடியின், 'துாய்மை பாரதம்' திட்டத்தில், ஒரு அங்கமாக சேர்க்க வேண்டும்.

இது மட்டுமின்றி, தலைமை வளர்ச்சி அதிகாரி அபிஷேக் கோயலின் உத்தரவை, சமூக ஊடகங்கள் வாயிலாக, நாடு முழுவதும், 'வைரல்' ஆக பரவ செய்ய வேண்டும்.'தொட்டில் பழக்கம், சுடுகாடு வரை' என்ற சொலவடையை போன்று, எச்சில் தொட்டு காரியங்கள் செய்வதை நிறுத்திக் கொண்டால், குழந்தைகள் ஒழுக்கமாக வளரும்!

நல்ல புத்தகங்களை மட்டுமே படிக்கஉறுதி ஏற்போம்!

ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: அமெரிக்க அதிபராக இருந்த, ஆபிரகாம் லிங்கனுக்கு, புத்தகங்களை படிப்பது, அலாதிப்பிரியம். அவர் படிப்பதை பார்த்தாலே, அவர் மனைவி மிகவும் கோபமடைவாராம்.

'இதை படித்து, வாழ்க்கையில் என்ன சாதித்தீர்; பணம் கிடைத்ததா... இல்லை பதவி தான் கிடைத்ததா, ஒன்றுக்கும் உதவாத, இதை படித்து, நேரத்தை வீணடிக்கிறீர்களே...' என, மனைவி பொரிந்து தள்ளுவாராம்.

ஆனால், லிங்கனோ, மிக அமைதியாக சிரித்தபடியே மனைவியை பார்த்து, 'கோபம் கொள்ளாதே... புத்தகங்கள், எனக்கு பணத்தையோ, பதவியையோ தராவிட்டாலும், இன்று, ஒரு பண்பாளனாக மாற்றி இருக்கிறது. 'நல்ல மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்பதை, நாள்தோறும் போதித்துக் கொண்டிருக்கும், சிறந்த ஆசானாக செயல்படுகிறது, இப்புத்தகங்கள்' என்றாராம்.புத்தகங்கள் தான், மிகச்சிறந்த நண்பர்கள் மற்றும் சிறந்த பண்புகளை வளர்க்கும் நல்லாசிரியர்கள் என்பது, பொதுவான கருத்து.

ஒரு மனிதனை சிறந்த பண்பாளனாகவும், வெற்றிப்படிகளை நோக்கி அழைத்துச் செல்லும், சிறந்த ஆசிரியர்களாகவும் விளங்குபவை, புத்தகங்கள்.ஒரு மனிதனை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும், மந்திரக்கோலை மறைத்து வைத்திருப்பதும், நல்ல புத்தகங்களே!மனதை ஒருமுகப்படுத்தும் சிறப்பான விஷயத்தை, நல்ல புத்தகங்களை தவிர, வேறெதிலும் பெற முடியாது. நாள்தோறும் நல்ல புத்தகங்களை படிப்பதை, வழக்கமாக்கிக் கொள்வோம்; வெற்றிப்படிகளை நோக்கி, வீறு நடை போடுவோம்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
09-மார்-202007:25:14 IST Report Abuse
venkat Iyer திரு தேவதாஸ் கூறியது போல குழந்தைகளுக்கு செய்தி தாள்கள் மற்றும் புத்தகங்கள் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரமாவது படிக்க கட்டாயப்படுத்துவதுடன் அவர்களுக்கு நடித்ததன் ஞாபக சக்தியையும் ஆய்வு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X