இந்த செய்தியை கேட்க
சென்னை: டில்லி நிறுவனம் எடுத்த, 'சர்வே' முடிவுகள் சாதகமாக இருப்பதால், ரஜினி உற்சாகம் அடைந்துள்ளார். அதுபற்றி விவாதிக்கவே, மாவட்ட செயலர்களை அழைத்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தை, கட்சியாக மாற்றுவதற்கு முன்னோட்டமாக, மாவட்ட செயலர்களிடம், ஆலோசனை கேட்கும் கூட்டத்தை, சமீபத்தில், ராகவேந்திரா மண்டபத்தில், நடிகர் ரஜினி நடத்தினார். அக்கூட்டம் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன், டில்லியில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட சர்வே அறிக்கை, ரஜினியிடம் தரப்பட்டுள்ளது. அதில், 'ஸ்டாலினா; ரஜினியா' என்ற, அடிப்படையில் தான், வரும், 2021 சட்டசபை தேர்தல் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளர்களில், இருவருக்கும் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு, கிராமம் முதல், மாநகரம் வரை, யாருக்கு அதிகம் என எடுக்கப்பட்டுள்ள சர்வேயில், ஸ்டாலினுக்கு, 20 சதவீதம்; ரஜினிக்கு, 80 சதவீதம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, தற்போது, ரஜினியின் ஓட்டு வங்கி, 10 - 12 சதவீதமாக உள்ளது. கட்சி துவக்கியதும், இது, 15 - 17 சதவீதம் வரை வளர்ச்சி அடையும்; மாநாடு நடத்தி முடிக்கப்பட்டதும், 20 - 22 சதவீதமாக எகிறும் என, அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ரஜினி கட்சியுடன், பா.ம.க., மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி அமைக்கும் பட்சத்தில், 33 - 34 சதவீதம் வரை, ஓட்டு வங்கி உயரலாம். திராவிட கட்சிகளில், பிரதான ஜாதிகளுக்கு, சமூக நீதி மறுக்கப்படுவதாகவும், தி.மு.க., தலைமை மீது, பெரும்பான்மை ஜாதியினருக்கு அதிருப்தி உள்ளதாகவும், அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உற்சாகம்
அதுமட்டுமல்லாமல் ரஜினியின் தேர்தல் பிரசார வியூகம், வேட்பாளர்கள் தேர்வு, கவர்ச்சிகரமான தேர்தல் அறிவிப்புகள் வாயிலாக, 40 சதவீத ஓட்டுகள் வரை உயரும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்சாகம் அடைந்த ரஜினி, கட்சியை துவக்குவதற்கு முன்னோட்டமாக, மாவட்டச் செயலர்களின் எண்ண ஓட்டங்களையும், அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.

இது குறித்து, ரஜினி வட்டாரங்கள் கூறியதாவது:ஸ்டாலின், ரஜினி என்ற இருவரை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட சர்வே முடிவு, ரஜினிக்கு சாதகமாக அமைந்துள்ளது. சமீப காலமாக, தி.மு.க., தலைமையின் செயல்பாடுகள், அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி., சீட் தரவில்லை. ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, உள்ளாட்சி தேர்தலில், இடபங்கீடு திருப்தியாக ஒதுக்கவில்லை.
கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு, தி.மு.க.,வில் மரியாதை இல்லாததால், ஸ்டாலினை முதல்வராக்க, அவர்கள் விரும்பவில்லை. கட்சியின், முன்னணி தலைவர்களை, சுற்றுப்பயணம் செல்ல அனுமதிக்காமல் புறக்கணிப்பதும், வாரிசை வளர்ப்பதும், தி.மு.க.,வின் ஆதரவு குறைவதற்கு காரணம். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE