சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தண்டனை சட்டம் திருத்தப்பட வேண்டும்!

Added : மார் 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தண்டனை சட்டம் திருத்தப்பட வேண்டும்!

பா.-விஜய், பால்ஸ் சர்ச், வெர்ஜீனியா, அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டனை பெற்று விடக்கூடாது' என்பதில், இந்திய தண்டனை சட்டம், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆனால், தற்போதுள்ள சட்டத்திலுள்ள ஏராளமான பிரிவுகள், வழக்குகளை கால வரையின்றி நீட்டிக்கவும், தண்டனை பெறும் காலத்தை தள்ளிப் போடவும் மட்டுமே, பயன்படுத்தப்படுகின்றன. இதனால், நீதிமன்றங்களின் பொன்னான நேரங்கள் வீணடிக்கப்படுவதுடன், அதிக பொருட்செலவும் ஏற்படுகிறது.

இதன் காரணமாகவே, கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. 'தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி!' என்றே, சட்டம் வரையறுத்துள்ளது. 'நிர்பயா' கொலை வழக்கை, இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்! நான்கு முறை, மரணத் தண்டனைக்கு நாள் குறித்தும், நிறைவேற்ற முடியாமல் தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது; சட்டத்திலுள்ள ஓட்டைகளே, இதற்கு முக்கிய காரணம். இந்த ஓட்டைகள் உடனடியாக அடைக்கப்பட வேண்டும். அப்போது தான், விரைவாக நீதி வழங்க வழி ஏற்படும். நீதிமன்றங்களின் மீது, மக்களுக்கும் நம்பிக்கை பிறக்கும். அரசியல்வாதிகளில் பலர், வரம்பு மீறி நடப்பதற்கு காரணம், இந்த சட்ட ஓட்டைகளே.

'உழைத்தவனின் கை ஈரம் காய்வதற்கு முன், கூலியை கொடு' என்பது போல, விரைவான நீதி கிடைப்பதை தான், அனைத்து மக்களும் விரும்புகின்றனர். உலக அரங்கில், நாட்டை உயர்வு அடைய செய்து கொண்டிருப்பவர், பிரதமர், மோடி. தன் அயராத உழைப்பால் உழைத்து வரும் அவர், சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்கிறார். அவர், எல்லா மக்களுக்கும், எளிதில் நீதி கிடைக்க வழி செய்வார் என, நம்புவோம்!

மீண்டும் ஆளபார்க்கின்றனர் பதவி தாசர்கள்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிடக் கட்சிகள் கையில், என்று வாக்காளர்கள் ஆட்சியை கொடுத்தோமோ, அன்றில் இருந்து, அமைதியாக இருந்த, தமிழகத்தில், ஜாதி, மத துவேஷம் எனும் நச்சு ஊடுருவத் துவங்கியது.

'எல்லாரும் ஒரு குலம்; எல்லாரும் இந்நாட்டு மக்கள்' என, ஒற்றுமையாக வாழ்ந்த காலம் காணாமல் போனது. திறமைக்கு மட்டும், வாய்ப்பின் வாசல் கதவு திறந்த அருமையான சூழல் மாறி, திராவிட ஆட்சியாளர்கள் ஆள துவங்கியதும், ஊழலும் உள்ளே புகுந்தது. அரசே ஏற்று நடத்தும், மதுபானக் கடைகளிலிருந்து வழிந்தோடும் மதுவாலும், பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சிந்தும் கண்ணீராலும், கழுவிக்கொண்டிருப்பது, அமைச்சர்களுக்கு தெரியாதா?

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ளது. தமிழகத்தை, மாறி மாறி ஆண்டு வரும் இரு திராவிடக் கட்சிகளும், போட்டி போட்டு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றன.

'தமிழகத்தில் ஜாதிச் சண்டை இல்லை; மதச்சண்டை இல்லை; வேலை இல்லா திண்டாட்டம் இல்லை; அமைதி பூங்காவாக திகழ்கிறது' என, துணை சபாநாயகர், ஜெயராமன் கூறியுள்ளார்.

இவருக்கும் ஒரு படி மேலே போய், உள்ளாட்சித் துறை அமைச்சர், வேலுமணி, 'தமிழகத்தில், இப்போது நில அபகரிப்பு கிடையாது; கட்டப்பஞ்சாயத்து நடப்பதில்லை. சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது' என, தெரிவித்துள்ளார். இதெல்லாம் வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் என, கருத வேண்டியுள்ளது.

அன்று, தி.மு.க., ஆட்சியில் ௧ லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், இன்று, அ.தி.மு.க., ஆட்சியில், 4.5 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது தான், இவர்கள் சாதனை.

'ஆட்சியின் நல்ல விஷயங்களுக்கெல்லாம், நாங்கள் தான் காரணம்' என, ஆட்சியாளர்கள் கூறுவது, திராவிடக் கட்சிகளுக்கு கை வந்த கலை. இரண்டு திராவிடக் கட்சிகளுமே, ஊழலில் ஊறியவை தான். இன்று, ஓரளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வு தோன்றியுள்ளது. சிலரை, சில காலம் ஏமாற்றலாம்; பலரை, பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது.

அன்று, 'போதையிலும், தள்ளாடாமல் கவிதை உலகை ஆட்சி செய்தார்' கவிஞர் கண்ணதாசன். இன்று, 'டாஸ்மாக்' போதையில் தள்ளாடி, நாட்டை ஆளப் பார்க்கின்றனர், இந்த பதவி தாசர்கள்!

'கொரோனா' அரக்கனிடம் எச்சரிக்கை தேவை!

அ.குணா, புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சீன நாட்டில் , உயிர் கொல்லி, 'கொரோனா' நோயின் தாக்குதல் ஆரம்பித்தது. இன்று, உலகில் பல நாடுகளிலும் பரவியுள்ளது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

சீனாவில், இதுவரை இந்த நோய் தாக்கி, 3,000 பேர் பலியாகி உள்ளனர். அரண்டு போன, இந்தியா உட்பட, உலக நாடுகள் தற்காப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றன. கப்பல், விமானம் வாயிலாக, தங்கள் நாடுகளுக்கு வரும் சுற்றுலா பயணியரை தனிமைப்படுத்தி, முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்த பின், அனுமதிக்கின்றன.

சீனா, சிங்கப்பூர், தென்கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளுக்கு, இந்தியாவை சேர்ந்தோரை, 'அவசியம் இல்லாமல் போக வேண்டாம்' என, மத்திய அரசு அறிவுரை கூறுகிறது. சீனா போன்ற நாடுகளில் வசிக்கும், இந்தியரை பாதுகாப்பாக அழைத்து வர, மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இந்தியாவிற்கு, 'கொரோனா' பாதிப்பு வராது என, எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும், வெளிநாட்டில் இருந்து, கேரளாவிற்கு வந்த சிலருக்கு, இந்த நோய் தாக்கம் இருந்தது; அது, குணப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இத்தருணத்தில், இந்தியாவில், 42க்கும் மேற்பட்டோர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியானது. மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணம், இது. 'கொரோனா'வை பரவ விடாமல், ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியாக வேண்டும்; இல்லாவிடில், சீனாவை விட, இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.

'கொரோனா' வைரசை குணப்படுத்த, இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை; தடுப்பு மருந்தும் இல்லை. தமிழக முதல்வர், இ.பி.எஸ்., ''கொரோனா' வைரசை குணப்படுத்த, தமிழக மருத்துவர்கள் மருந்தை கண்டுபிடியுங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில், 'கொரோனா' நோய் பரவாமல் தடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரே, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின், நம் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
10-மார்-202007:05:30 IST Report Abuse
venkat Iyer திரு.விஜய் அவர்கள் நீதிமன்ற செயல்பாடு தாமதம் குறித்து குறிப்பிட்டு இருந்தார். ஒரு பெண் கொடுமை வழக்கில் பூவிருந்தவல்லி குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் அந்த பெண்மணி பல வாய்தாக்கள் போடப்பட்டு அவர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டார். இதுதான் நீதிமன்ற செயல்பாடாக உள்ளது.
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
10-மார்-202006:59:01 IST Report Abuse
venkat Iyer திரு.பட்டாபிராமன் அவர்களே, நான் தமிழ்நாட்டில் முற்றிலுமாக ஊழல் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சுற்றி வாழ்ந்து வந்து இறுதியாக தமிழகத்தில் வசிக்கின்றேன்.இவற்றை ஒப்பிடும்போது ,தமிழகத்தில் திட்டங்களுக்கு ஒதுக்கீடும் நிதிகள் ஓரளவு செலவு செய்யப்பட்டு திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற படுகின்றனர்.பல்வேறு சமுக நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தமிழ் நாட்டில் நல்ல முறையில் செயல் படுகின்றனர். ரேஷனில் பல மாநிலங்களில் அனைவருக்கும் இதுவரை முழுவதுமாக உணவு பொருட்கள் கிடைப்பதில்லை.ஊழல்கள் நடக்கின்றனர். தமிழகத்தில் வாங்காதவர் ரேஷன் பொருட்கள் மட்டும் வெளிமார்க்கெட் டுக்கு போகின்றனர். அம்மா ஊழல் செய்த அமைச்சர்களை எல்லாம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே களை எடுத்துவிட்டார்.பல மாநிலங்களில் துறை செயலாளராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் துறை அமைச்சர்கள் செய்யும் ஊழலை பார்த்து பதவியை ராஜினாமா செய்கின்றனர்.அதில் எனது உறவினரும் அடக்கம். இவர்களை தட்டி கேட்க முடியாமல் கெளரவத்தை காக்க ராஜினாமா தான் செய்ய வேண்டியுள்ளதாக கூறுகிறார்.
Rate this:
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
10-மார்-202016:07:10 IST Report Abuse
Mohanraj Raghuramanஐயா வணக்கம், தங்கள் கருத்தை என்னால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்ற மாநிலங்களைவிட குறைவு என்ற வாதத்தை சரி என்று சொல்ல முடியாது. இது எதோ முற்றிலும் விஷம் இல்லை கொஞ்சம் தான் விஷம் கலந்துள்ளது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியுமா. லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலுமாக களைந்தெறிய என்ன செய்ய முடியும் என்று தான் ஆலோசிக்க வேண்டும். தமிழக வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறைகளில் எல்லாம் கணினி முறை வந்து அமல் படுத்தப்பட்டு வருகிறது என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடியவில்லை. இன்றும் வில்லங்கம் மற்றும் பட்ட போன்றவற்றுக்கு ஆன் லைனில் விண்ணப்பித்தாலும் கவனிக்க வேண்டிய இடத்தில் கவனித்தால் தான் நமது கோரிக்கை முழுமை பெற்று டாகுமென்டுகள் நமக்கு கிடைக்கும் நிலை உள்ளது. முக்கியமாக இந்த துறைகளில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களுக்கு மனமுவந்து பணியாற்றுவார்களா, லஞ்சம் ஒழிக்கப்படுமா.... காலம் தான் பதிலளிக்க வேண்டும்... நன்றி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X