18 போஸ்ட்டிங் 20 ஆயிரம் பேர் வெயிட்டிங்| Dinamalar

18 போஸ்ட்டிங் 20 ஆயிரம் பேர் 'வெயிட்டிங்'

Added : மார் 10, 2020
Share
ஒப்பந்த தொழிலாளர்கள் பலரும், துப்புரவு பணியை புறக்கணித்து, கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டிருந்தனர். சித்ராவும், மித்ராவும் அங்கு சென்றிருந்தனர்.தொழிலாளர்களிடம் பேசி விட்டு வந்த மித்ரா, ''குப்பை இல்லா நகரமா, நம்மூரை மாத்தப் போறோம்னு சொல்றாங்க. கடவுளை விட துப்புரவு தொழிலாளர்கள் மேலானவர்கள்ன்னு பேசுறாங்க. ஆனா, அவங்கள ஏமாத்தறாங்க,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''இது
 18 போஸ்ட்டிங் 20 ஆயிரம் பேர் 'வெயிட்டிங்'

ஒப்பந்த தொழிலாளர்கள் பலரும், துப்புரவு பணியை புறக்கணித்து, கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டிருந்தனர். சித்ராவும், மித்ராவும் அங்கு சென்றிருந்தனர்.

தொழிலாளர்களிடம் பேசி விட்டு வந்த மித்ரா, ''குப்பை இல்லா நகரமா, நம்மூரை மாத்தப் போறோம்னு சொல்றாங்க. கடவுளை விட துப்புரவு தொழிலாளர்கள் மேலானவர்கள்ன்னு பேசுறாங்க. ஆனா, அவங்கள ஏமாத்தறாங்க,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''இது சம்பந்தமா, கார்ப்பரேஷன் அதிகாரிங்ககிட்ட கேட்டா, அரசாங்க விதிமுறைப்படி, இட ஒதுக்கீடு அடிப்படையில, பணி நியமனம் செஞ்சிருக்கோம்; படிச்சிருக்காங்களா, படிக்கலையான்னு பார்க்கலை. அரசு உத்தரவை பின்பற்றி இருக்கிறோம்னு விளக்கம் சொல்றாங்க.

''ரெண்டு நாள்ல பதில் சொல்றேன்னு கலெக்டர் சொல்லியிருக்காரு. அதுவரை வேலைக்கு போக மாட்டோம்; குப்பை அள்ள மாட்டோம்னு, ஒப்பந்த தொழிலாளர்கள் சொல்லியிருக்காங்க.

''அதுக்கு கலெக்டரு, துப்புரவு தொழிலாளர் நியமிச்சதே எனக்கு தெரியாதுன்னு சொல்லியிருக்காரு. ஆனா, அவரு நிர்ணயிக்கிற தினக்கூலியையே கார்ப்பரேஷன் கொடுக்கறதில்லைங்கிறது, அவருக்கே தெரியாது போலிருக்கு,''

''டாய்லெட் விவகாரத்துல, பழைய பில்களை மறுபடியும் தணிக்கை செய்ய கலெக்டர் உத்தரவிட்டிருக்காராமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''ஆமாப்பா, உண்மைதான்! போன வாரம் பேசுனோமே. அந்த விவகாரம்தான். தனி நபர் இல்லக்கழிப்பிடம் கட்டுறதுக்கு, கொடுக்குற மானியத்துல முறைகேடு நடந்திருக்கிறதா, ஊராட்சி கவுன்சிலர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.கடந்த ஆண்டுகளில் எவ்வளவு கழிப்பறை கட்டுனாங்க; எவ்ளோ நிதி எடுத்திருக்காங்க; பயனாளிகள் யார் யார்? அவுங்க வீட்டுல இப்ப டாய்லெட் இருக்கா? அரசாங்க மானியம் கெடைச்சதா, கெடைக்கலையான்னு விசாரிக்கப் போறாங்களாம்,''

''அதிருக்கட்டும், கறவை மாடு இறந்தது தொடர்பா, விசாரணை அதிகாரி நியமிச்சாரே,''''அதுவா, விசாரணை அறிக்கை இனிமேதான் கொடுப்பாங்களாம். அதை வாங்கிட்டு, கெடப்புல போடுறாங்களா, துரிதமா நடவடிக்கை எடுக்குறாங்களான்னு, இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும்,'' என்ற சித்ரா,

''18 போஸ்ட்டிங்கிற்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க அப்ளிக்கேஷன் கொடுத்திருக்காங்களாமே,'' என கிளறினாள்.''ஆமாக்கா, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில, அலுவலக உதவியாளர், டிரைவர் உள்ளிட்ட, 18 பணியிடங்கள் காலியா இருக்கு. வயது வரம்பு இல்லைங்கிறதுனால, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க அப்ளிகேஷன் கொடுத்திருக்காங்க. தகுதியானவங்கள எப்படி தேர்வு செய்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காங்க. கட்சிக்காரங்க பலரும் சிபாரிசு பண்ணிட்டு இருக்காங்களாம். கடைசியில, என்ன நடக்கும்னு தெரியாதா, உங்களுக்கு,'' என, பொடி வைத்தாள் மித்ரா.அப்போது, தனக்கு வந்திருந்த இ-மெயில்-ஐ, மொபைல் போனில் பார்த்த சித்ரா,

''கருவூலகத்துறை நடைமுறையை ஆன்-லைனுக்கு மாற்றதுக்கு முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க. இங்க இருக்கற ஊழியர்கள் ஒத்துழைக்கிறது இல்லையாம். 'சர்வர் ஸ்பீடு' போதாது; 'சாப்ட்வேர்' சரியில்லைன்னு, ஏதாச்சும் சொத்தை காரணம் சொல்லி, ஆன்-லைன் முறையை வர விடாம தடுக்குறாங்களாம்.

''அதனால, சாப்ட்வேரை உருவாக்குன நிறுவனத்தில் இருந்தே மூனு ஊழியர்களை நியமிச்சு, பிரச்னைக்கு தீர்வு காணச் சொல்லியிருக்காங்க. இந்த பிரச்னை தீர்ந்தா, கரன்சி இல்லாம கருவூலத்துல வேலை நடக்கும்னு சொல்றாங்க,''

''அப்படி நடந்தா ஆச்சரியம்தான்! கலெக்டரும், ஒவ்வொரு மாசமும், துறை ரீதியா ஆய்வு செஞ்சா நல்லாயிருக்கும்,'' என்ற மித்ரா,
''ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குனாலும், 'ஓசி'யில பிரியாணி, ஸ்வீட், காரம் கேக்குறாங்களாமே,'' என, கிளறினாள்.''அது, ஒனக்கும் தெரிஞ்சு போச்சா, நம்மூர் ஏர்போர்ட்டுக்கு வி.ஐ.பி.,களுடன் வர்றவங்களுக்கு, ஏர்போர்ட் செக்யூரிட்டி ஆபீஸ்ல பிரத்யேகமா இலவச 'பாஸ்' கொடுப்பாங்க.''இப்ப, பாஸ் கொடுக்கணும்னா, ஒரு கிலோ பிரியாணி, ஸ்வீட்ஸ், காரம் கேக்குறாராம், அந்த அலுவலகத்துல இருக்குற ஒரு அதிகாரி. இதுக்கு, 'சபாரி' போட்டுக்கிட்டு வர்ற ரெண்டு எஸ்.ஐ.,க்கள் உடந்தையாம். அந்த அதிகாரிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளமாம். இவ்ளோ சம்பளம் வாங்கியும், 'ஓசி' பிரியாணி கேக்குறாரேன்னு, ஏர்போர்ட் வட்டாரத்துல பேசிக்குறாங்க,''

''அதிருக்கட்டும், சிங்காநல்லுார் எம்.எல்.ஏ.,வுக்கு எதிரா, ஆளுங்கட்சிக்காரங்க வரிஞ்சு கட்டிக்கிட்டு களம் இறங்கியிருக்காங்களே, என்ன விஷயம்''''மித்து, வழக்கமா, கார்ப்பரேஷனுக்கு எதிரா ஏதாச்சும் ஒரு காரணத்தைச் சொல்லி, தி.மு.க.,காரங்க ஆர்ப்பாட்டம் செய்றது வழக்கம். இப்ப, மினிஸ்டரையும், அவரோட சகோதரரையும் நேரடியா குற்றம் சுமத்தியும், 5 ஆண்டுகள்ல, 50 ஆண்டு கால வளர்ச்சிங்கிற ஸ்லோகனை விமர்சனம் செஞ்சும், ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

''அதனால, நாலு வருஷமா தொகுதிக்கு ஏதும் செய்யலைன்னு சொல்லி, சிங்காநல்லுார் தொகுதிக்குள்ள, தொடர் தெருமுனை பிரசாரம் செய்றாங்க. இதுக்கு பதிலடி கொடுக்கறதுக்காக, எம்.எல்.ஏ., கார்த்திக், தனது ஆதரவாளர்களை அழைச்சிட்டு, தொண்டாமுத்துார் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் ஏரியாவுல ரோடு சரியில்லை; குண்டும் குழியுமா இருக்குன்னு சொல்லியிருக்காரு,''

''ஏங்க, தொகுதி விட்டு தொகுதி போயி, ஆய்வு செய்றீங்கன்னு கட்சிக்காரங்கள்ட்ட கேட்டா, தி.மு.க., கட்சியில கிழக்கு மாவட்ட பொறுப்புல, தொண்டாமுத்துார் தொகுதியையும் சேர்த்திருக்காங்க. அதனால, அந்த தொகுதியில இருக்கற பிரச்னையையும் கையில எடுத்திருக்காங்கன்னு சொல்றாங்க,''''ஓ... அப்படியா சங்கதி,'' என்ற மித்ரா, ''வனத்துறை சம்பந்தமா ஒரு தகவல் இருக்கிறதா போன வாரம் சொன்னேன்ல. வன விலங்குகளை விஷம் வச்சு கொல்றதா, புது பிரச்னை கிளம்பியிருக்கு,'' என்றாள்

.''அப்படியா, என்னாச்சு?'' என சித்ரா கேட்க, ''வன விலங்குகள் தாகம் தீர்க்குறதுக்காக, வனப்பகுதியில தொட்டி கட்ட, தண்ணீர் நிரப்பி வைக்கிறாங்க. அதுல, யாரோ, பூச்சி மருந்து கலக்குறாங்களாம். பூச்சி மருந்து கலந்த, தண்ணீரை குடிக்கிற விலங்குகள், கொஞ்ச நாள்ல இறந்துடுதாம். இதை, பிரேத பரிசோதனை அறிக்கையில கண்டுபிடிக்கலாம்ன்னு சொல்றாங்க.
''உண்மையை சொன்னால், விலங்குகளுக்கு யார் விஷம் வைச்சாங்க. எப்படி வைச்சாங்கனு கண்டுபிடிக்க வேண்டிய வேலை வரும்ங்கிறதுனால, மூடி மறைக்கிறாங்களாம்,'' என்றபடி, ஸ்கூட்டரை 'ஆன்' செய்தாள் மித்ரா.
அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு கீழே சென்று, வெரைட்டி ஹால் சி.எம்.சி., காலனி மைதானம் வழியாக சென்றனர். மைதானம் முழுவதும் குடியிருப்பாக மாறிக் கொண்டிருந்தது.அதைப்பார்த்த சித்ரா, ''கார்ப்பரேஷன்காரங்க, விளையாட்டு மைதானங்களை வீணாக்கிட்டு வர்றாங்க. பாரதியார் பல்கலையில மைதானம் அமைச்சதே தப்பா இருக்குன்னு சொல்றாங்க,'' என, 'ரூட்' மாறினாள்.

''அப்படியா, என்ன நடந்துச்சுன்னு, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்,'' என, நோண்டினாள் மித்ரா.''மித்து, பாரதியார் பல்கலையில மைதானத்தை மேம்படுத்துறதுக்கு நிதி கெடைச்சிருக்கு. அதுல, ரூ.30 லட்சத்தை மண் கொட்டுனதா கணக்கு காண்பிச்சிருக்காங்க. இது சம்பந்தமா, சி.எம்., தனிப்பிரிவுக்கு புகார் போயிருக்கு. உயரதிகாரிங்க விசாரணை நடத்தியிருக்காங்க.அவ்ளோ லட்சத்துக்கு மண் எங்கே இருந்து வாங்குனீங்கன்னு கேள்வி கேட்டுருக்காங்க. அதுக்கு, பல்கலை வளாகத்துல வேறொரு இடத்துல இருந்து, அள்ளுனோம்னு பதில் சொல்லியிருக்காங்க.நிலத்துக்கு கீழே மண் அள்ளுறதா இருந்தா, வருவாய்த்துறையில அனுமதி வாங்கணுமே, வாங்கியிருக்கீங்களான்னு கேட்டிருக்காங்க. விசாரணை இதோட நிக்குது.

''இதுல, இன்னொரு முக்கியமான விஷயம், எந்தவொரு மைதானமா இருந்தாலும், வடக்கு-தெற்கு பார்த்துதான் அமைப்பாங்க. இங்க, கிழக்கு-மேற்கு பார்த்து அமைச்சிருக்கறதுனால, பிரச்னை வெளிச்சத்துக்கு வந்திருக்காம்,'' என்ற சித்ரா, ''ரூரல் போலீஸ் சம்பந்தமா ஏதோ தகவல் சொல்றதாவும் சொல்லியிருந்தியே,'' என, பழசை கிளறினாள்.
''அதுவா, 'பெரிய ஊரு' ஏரியாவுல இருக்கிற கிளப்புக்கு, இன்ஸ்., ஒருத்தரு பரிவாரங்களோட 'ரெய்டு'க்கு போயிருக்காரு. பல லட்சம் ரூபாயை கைப்பத்தியிருக்காரு. எதுவுமே கணக்குக்கு வரலை. 'ரெய்டு'க்கு வந்தவங்களை சரிக்கட்டிட்டாங்களாம்.''கோவை மாவட்ட போலீஸ் ஆபீசுல வேலை பார்க்குற 'வெயிட்'டான அதிகாரியை பத்தி ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன். இன்னும் தீர விசாரிச்சு, அடுத்த வாரம் சொல்றேன்,'' என்றாள்.

அப்போது, ரயில் கடந்து செல்லும் சத்தம் கேட்டது. அதைக்கேட்ட சித்ரா, ''நம்மூர்ல இருந்து பெங்களூரு போற, உதய் எக்ஸ்பிரஸ் டிரெயினை, கேரளா வரைக்கும் நீட்டிக்கிறதுக்கு முயற்சி நடக்குதாம். அதுக்குதான், கூடுதலா அஞ்சு பெட்டியை இணைச்சிருக்கிறதா, ரயில்வே வட்டாரத்துல பேசிக்கிறாங்க,''
''கொஞ்ச நாளா, கல்வித்துறையை பத்தி எதுவுமே சொல்றதில்லையே,'' என, சித்ரா கேட்க, ''அக்கா, கரன்சி கொடுத்தால், பட்டம் கொடுக்குற, 'காம்போ பேக்' திட்டத்தை பத்தி, கேள்விப்பட்டேன். அடுத்த வாரம் சொல்றேன்,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை இயக்கினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X