வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவில், ஒரு கிராமத்தில், ஹோலி பண்டிகை நாளில், புதிய மருமகனை, கழுதை மீது ஏற்றி ஊர்வலம் அழைத்துச் செல்லும் வழக்கம், 90 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், பீட் மாவட்டத்தில் உள்ள விதா கிராமத்தில், ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையன்று, புது மாப்பிள்ளையை கழுதை மீது ஏற்றி, ஊர்வலம் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று (மார்ச் 10), ஹோலி பண்டிகையை முன்னிட்டு, புது மாப்பிள்ளையான, தத்தாத்ரே கெய்க்வாட் என்பவரை, கழுதை மீது ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அக்கிராம எல்லையில் உள்ள அனுமார் கோவிலில் ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தாடைகளில், தனக்கு பிடித்தவைகளை, தத்தாத்ரே கெய்க்வாட், பரிசாக எடுத்துக் கொண்டார்.

இது குறித்து, விதா கிராமத்தைச் சேர்ந்த, தத்தா தேஷ்முக் கூறியதாவது: ஊர் பெரியவரான, ஆனந்த் ராவ் தேஷ்முக், 90 ஆண்டுகளுக்கு முன், இந்த வழக்கத்தை உருவாக்கினார். ஹோலி பண்டிகையன்று, புதிதாக தன் குடும்பத்தில் இணைந்த மாப்பிள்ளையை வரவேற்கும் விதமாக, கழுதையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று, இறுதியில் விரும்பிய புத்தாடைகளை பரிசாக அளித்தார். அதுமுதல், ஒவ்வொரு ஆண்டு ஹோலி பண்டிகை தினத்தன்றும், புது மாப்பிள்ளையின் கழுதை ஊர்வலம் நடைபெற்று வருகிறது. மாப்பிள்ளை தப்பி ஓடாமல் இருக்க, ஹோலி பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே, கிராமத்தினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருவர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE