சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மாய்மாலம் இது; மயங்கி விடாதீர்கள்!

Added : மார் 11, 2020
Share
Advertisement
 மாய்மாலம் இது; மயங்கி விடாதீர்கள்!

கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் உள்ள சில, பழமையான ஹிந்து கோவில்களை, மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்கு மாற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., தலைவர் வைகோ ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

புராதனமான, நம் மாநிலத்தின் கலாசாரமான, பொக்கிஷமான கோவில்களைப் பாதுகாப்பதில், இவர்களுக்கு என்ன புகைச்சல்? இவர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதைப் பார்த்தால், 53 ஆண்டுகளாக நடந்த சிலைக் கடத்தல் சம்பவங்களுக்குப் பின்புலத்தில், இவர்களும் இருக்கின்றனரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நல்ல வேளை... திருப்பதி கோவில், ஆந்திர அரசிடம் உள்ளது. இல்லையெனில், 'உண்டியலுக்கு ஏன் காவல்?' எனக் கேட்கும் நாத்திக பகுத்தறிவு வாடைகளால், அதன் புனிதம் பாழ்பட்டிருக்கும். 'தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் என்னாளோ?' என்றும், 'மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர மூக்குத்தி ஏன்?' என்றும் கேட்ட, தி.மு.க.,வினர், இன்று, வேப்பங்குழலால் தேன் வடிய வைக்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலுக்கான மாய்மாலமாகக் கூட இது இருக்கலாம்... யார் கண்டது! எனவே, யாரும் மயங்கி விடாதீர்கள்!

கடலுப்பு காணாமல் போனது இப்படி தான்!
எஸ்.அனந்தராமன், காஞ்சிபுரத்திலிருந்துஎழுதுகிறார்: அயோடின் தயாரிப்பதற்கான மூல வேதிப்பொருள், பொட்டாசியம் பெர்ரோ சயனைடு. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில், ஏராளமான வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கும், இதே பொட்டாசியம் பெர்ரோ சயனைடு தான் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், அமெரிக்காவில் மிக அதிக அளவில், இந்த வேதிப்பொருள் மிச்சமானது. சயனைடு என்ற கொடிய விஷம் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளையும், அமெரிக்கா, பொது வெளியில் அனுமதிப்பதில்லை. அப்படி இருக்க, பொட்டாசியம் பெர்ரோ சயனைடை, அமெரிக்கா எப்படி வைத்திருக்க முடியும்? யார் தலையில் கட்டுவது என யோசித்தது!

அப்போது, நம் நாட்டில், காங்., சோனியாவின் பினாமி பிரதமரான, மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முன்னணி அரசு பதவியில் இருந்தது. ஆசிய - ஆப்ரிக்க நாடுகளில், மிகவும் ஏமாந்த சோணகிரி, நாம் தானே! ஆபத்து விளைவிக்கக் கூடிய சயனைடை, நிறைய பண ஆதாயத்துடன், நம் தலையில் கட்ட, அமெரிக்கா முடிவு செய்தது.

இந்திய மக்களில் பெரும்பாலானோருக்கு, அயோடின் சத்து குறைவு இருப்பதாக, ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிப்பதாகவும், அதனால், முன் கழுத்துக் கழலை நோய் ஏற்படுவதாகவும், சர்வதேச அளவில் அறிக்கை வெளியாகியது. நம் நாட்டில், இமயமலை அடிவாரங்களில் வசிக்கும், 500 பேருக்கும் குறைவான மலைவாழ் மக்களிடையே மட்டும், அயோடின் சத்துக் குறைபாடு இருப்பது உண்மை. சத்தான ஆகாரம், தேனீர் ஆகியவற்றின் மூலமே, நம் உடலுக்குத் தேவையான அயோடினைப் பெற்று விடலாம்.

ஆனால், மக்கள் பயன்படுத்தும் சாதாரண உப்பில், அயோடின் சேர்த்தாக வேண்டும் என்று அரசாணையை, ஐ.மு.கூ., அரசு வெளியிட்டு, சாதாரண கடல் உப்பு, ரொம்ப கெடுதல் என்று பிரசாரம் செய்தது.ஐ.டி.சி., டாடா போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் துாத்துக்குடி, மரக்காணம், வேதாரண்யம் போன்ற கடலோர உப்பளங்களிலிருந்து, சாதாரண உப்பை அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்தன. அதற்கு, 'அயோடைஸ்டு சால்ட்' என்று பெயரிட்டு, கவர்ச்சிகரமான பாலித்தீன் உறைகளில் அடைத்து, கிலோ, 40 ரூபாய்க்கு விற்று, கொள்ளை லாபம் அடிக்கத் துவங்கின.

கடலுப்பிலுள்ள மற்ற பல, நல்ல சத்துப் பொருட்களான, மக்னீசியம், பாஸ்பரஸ் உப்புகளை, தனியாக பிரித்து விற்கவும் ஆரம்பித்தன.இதனால், அயோடின் சேர்க்கப்பட்ட கம்பெனி உப்பு வகைகளில், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் சோடியமே அதிகமாகி விட்டது.இதனால் இப்போது, 'கவுட்' என்ற கீல்வாதம் நிறைய பேருக்கு வரத் துவங்கி விட்டது. தேவையா இது நமக்கு?

உளறுவாய்களை மூடுங்களேன்!
தி.மங்களம், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரத்திலிருந்து, 'இ - மெயில்' கடிதம்: டில்லி கலவரம், 47 பேர் உயிரை எடுத்துள்ளது; 200க்கும் மேற்பட்டோர், காயமடைந்துள்ளனர்.அமைதியான முறையில் தொடர்ந்து நடந்து வந்த போராட்டத்தில், வன்முறை வெடிக்கக் காரணமாக அமைந்தது, பா.ஜ.,வின், கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாக்குர் பேச்சு தான் என, பல தரப்பினரும் கூறி வருகின்றனர்.இந்தியப் பிரதமராக, மோடி பதவியேற்றதிலிருந்தே, நாட்டின் வளர்ச்சி ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்துப் பணியாற்றி வருகிறார்.

முதலில் நாட்டைச் சுத்தப்படுத்த முனைந்தார். வீட்டுக்கொரு கழிப்பறை கட்ட வழி வகுத்தார். வீடு இல்லாதவர்களுக்கு, வீடு கட்டிக் கொள்ளவும் வழி வகுத்தார். மின் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார். உலக நாடுகளிடையே இந்தியா தலை நிமிர, திட்டங்கள் தீட்டியதுடன், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்தினார்! யோகா பயிற்சியை உலக நாடுகளிடையே பரப்பினார்!
இவ்வளவு செய்தவர், சொந்த கட்சியில் முளைக்கும் கள்ளிச் செடிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இவருக்கு தான் கடுமையான வேலை... ஏற்கனவே, கட்சித் தலைவர் பதவி வகித்த அமித் ஷாவோ, தற்போதைய தலைவர் நட்டாவோ, எதுவுமே நடக்காதது போல், மவுனம் காக்கின்றனர்.

அரசியல்வாதியும், 'டிவி சீரியல்' நடிகையுமான சுபத்ரா முகர்ஜி, பா.ஜ.,வின் முகமாக, மேற்கு வங்கத்தில் கோலோச்சி வந்தார். சி.ஏ.ஏ., கலவரம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'கபில் மிஸ்ரா போன்றவர்கள் இருக்கும் இடத்தில் இருக்க, எனக்கு விருப்பமில்லை' எனக் கூறி, கட்சியிலிருந்து வெளியேறி விட்டார். இவர் போனதால், கட்சியே அஸ்தமித்துப் போகும் என்றாகி விடாது. ஆனால், இவர் சொன்ன கருத்தை, பா.ஜ., மேலிடம் கவனத்தில் எடுத்து, உளறுவாய்களை மூடவில்லை எனில், கட்சி கலகலத்துப் போகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X