அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி, ஆட்சிக்கு தனித்தனி தலைமை: ரஜினி அதிரடி அறிவிப்பு

Updated : மார் 12, 2020 | Added : மார் 12, 2020 | கருத்துகள் (142)
Share
Advertisement
Rajinikanthpoliticalentry, ரஜினி, ரஜினிகாந்த், அரசியல், கட்சி, தலைமை, முதல்வர், rajini, rajinikanth, poltical

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 12) நிருபர்களை சந்தித்த ரஜினி, அரசியலுக்கு வருவது குறித்து 3 திட்டங்களை அறிவித்தார். அதன்படி, தேர்தலுக்கு பின்னர் கட்சியில் தேவையில்லாத பதவிகள் நீக்கம், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் மற்றும் கட்சிக்கு ஒரு தலைமை மற்றும் ஆட்சிக்கு ஒரு தலைமை ஆகிய திட்டங்களை அறிவித்தார்.


பத்திரிகையாளர் சந்திப்பு


2017 ம் ஆண்டு டிச.,31 அன்று அரசியலுக்கு வருவது உறுதி என தனது ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினி அறிவித்தார். இதன் பின்னர், தனது கட்சி துவங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இன்றும் ஆலோசனை நடந்தது. இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கிளம்பிய ரஜினியை, அவரது கார் மீது மலர் தூவி ரசிகர்கள் வழியனுப்பி வைத்தனர்.


சந்திப்பு ஏன்

பத்திரிகையாளர் கூட்டத்தில் ரஜினி கூறியதாவது:எனது அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள ஊடக நண்பர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த சந்திப்பு எதற்கு என உங்களுக்கு தெரியும். சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் உங்களிடம் பேசும்போது, அனைத்து விஷயத்திலும் திருப்தி, தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என கூறினேன். இது குறித்து உள்ளே என்ன நடந்தது என வெளியே பல விஷயங்கள் கூறப்பட்டன. விவாதம் நடந்தது. இது மா.செ.,க்கள் மூலம் வரவில்லை. அவர்களை நான் பாராட்டுகிறேன். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்பது குறித்தும், அரசியலுக்கு நான் வர வேண்டும் என ஆசைப்படும் மக்கள், ரசிகர்களுக்கு என் அரசியல் குறித்த கண்ணோட்டத்தையும் சொல்ல இருக்கிறேன். இதைச் சொன்னால் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். எனக்கும் எப்படியான அதிர்வு இருக்கிறது என்பது குறித்த தெளிவு கிடைக்கும்.


latest tamil news
1996-ல் இருந்து ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டே இருக்கின்றார் எனக் கூறுகின்றனர். முதன்முறையாக அரசியலுக்கு வருவதாக நான் 2017, டிச.31 அன்றுதான் சொன்னேன். அதற்கு முன்பு சொன்னது கிடையாது. முன்பு இதுகுறித்து கேட்டால் 'ஆண்டவன் கையில் இருக்கிறது' என்றுதான் சொல்வேன். அரசியலுக்கு வருவதாக நான் சொல்லிக்கொண்டே இருப்பதாக இனி யாரும் சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.1996-ல் தமிழக அரசியலில் என் பங்கு இருந்தது. நான் அரசியலுக்கு வருவது தலையெழுத்தாக இருந்தால், என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என, அந்தக் காலகட்டத்தில் இருந்து அரசியலைக் கவனிக்க ஆரம்பித்தேன்.


அரசியல் மாற்றம்


அரசியலை கவனித்த போது, 2016 ல் ஜெயலலிதா காலமானார். 2017 அரசியல் ஸ்திரத்தன்மை போய் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்ட போது அரசியலுக்கு வருவேன் என சொன்னேன். அப்போது, '' இங்கு சிஸ்டம்(அமைப்பு) கெட்டு போயுள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்'' என்று சொன்னேன். மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒரு நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்றால், வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது. இங்கு அரசியல் நடத்தப்படும் முறையிலும் மாற்றம் வர வேண்டும். அப்போது தான் ஒர நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி, மதச்சார்பற்ற ஆட்சியை தர முடியும். அரசியல் மாற்றம் இல்லாத ஆட்சி மாற்றம் என்பது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதிலேயே சர்க்கரை பொங்கல் செய்வது போன்றது. ஆக இந்த அரசியல் மாற்றத்திற்காக நான் மூன்று முக்கிய திட்டங்களை வைத்திருக்கிறேன்.

அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள வைத்துள்ளேன்.


முதலாவதாக,

தமிழகத்தில்,இரண்டு பெருங்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.,வை பார்த்தால், 50 ஆயிரத்திற்கும் மேல் கட்சி பதவிகள் உள்ளன. அதனை தேர்தல் நேரத்தில் தேவை. ஓட்டு வரும். தேர்தல் நேரத்தில் உழைப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு அது தேவையில்லை. அந்த பதவிகள் தேவையில்லை. அந்த பதவியில் இருப்பவர்கள், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாங்கள் ஆளுங்கட்சி ஆட்கள் என சொல்லி வெளிப்படையாக மிரட்டுவார்கள். ஒப்பந்தம் முதல் அனைத்திலும் ஊழல் நடக்கும். தவறு நடக்கும். மக்களிடம் பணம் போகாது. ஆட்சிக்கும் கெட்டது. மக்களுக்கு ரெம்ப கெட்டது. கட்சிக்கு கெட்டது. பலர் இதனை தொழிலாக வைத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் என்ன பதவியோ அதனை வைத்து கொள்ள வேண்டும். முடிந்த பின்னர், அத்யாவசிய பதவிகள் மட்டும் வைக்க வேண்டும். கல்யாணம் என்றால் சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் தேவை. கல்யாணம் முடிந்தபிறகு அவர்களை வைத்துக்கொண்டிருப்போமா? அதற்காக கட்சியில் இருப்பவர்களை வேலைக்காரர்கள் என சொல்வதாக நினைக்காதீர்கள்.


latest tamil news

இரண்டாவதாக

இந்தியாவில் உள்ள அனைத்து சட்டசபைகளிலும், பார்லிமென்டிலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பெரும்பான்மை உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வயதுக்கு கீழ் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு இளைஞன் அரசியலில் பிரகாசிக்க வேண்டும் என்றால், அவர் ஒரு எம்.பி., மகனாகவோ, எம்.எல்.ஏ., மகனாகவோ, பணக்காரனாகவோ, செல்வாக்குள்ளவராகவோ இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கி விடாமல், அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கட்சியில் 50 வயதுக்கு கீழே உள்ளவர்கள், ஒரளவு படித்தவர்கள், நேர்மையான தொழில் செய்பவர்கள், அவர்கள் வாழும் பகுதியில், கண்ணியமானவர் எனப்பெயரெடுத்தவர்களை தேர்வு செய்து 60 முதல் 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, மீதியுள்ள 35 சதவீதத்தில், வேறு கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இவர்கள் விருப்பப்பட்டு நமது இயக்கத்தில் சேர விரும்பினால், அவர்களுக்கு வாய்ப்பளித்து, இவர்கள் அனைவரையும் சட்டசபைக்கு அனுப்பி அதிகார சூத்திரத்தை கையில் எடுத்து கொள்ளும்படி செய்ய வேண்டும். அதற்கு, நான் பாலமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு , கடந்த 45 ஆண்டுகளாக நான் திரையுலகில் ஈட்டிய புகழ், தமிழ் மக்கள் என் மீது செலுத்தி வரும் பேரன்பு, அவர்களுக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கை அனைத்தும் உதவுமென நம்புகிறேன். இது எனது இரண்டாவது திட்டம்.


மூன்றாவதாக,


தேசிய கட்சிகள் தவிர, எல்லா மாநில கட்சிகளிலும், ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒருவர் தான் தலைவர். ஆட்சி தலைவராகவும், கட்சி தலைவராகவும் இருப்பார்கள். கட்சி தலைமையையும், ஆட்சி தலைமையையும் தனித்தனியாக பிரிப்பது எனது மூன்றாவது திட்டம். அதாவது, கட்சியை நடத்தும் தலைவர் வேறு. ஆட்சியை நடத்தும் தலைவர் வேறு. இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்து பா்ரத்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒரே நபரின் தலைமை எனும் பட்சத்தில், தேர்தலில் ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வருபவரின் ஐந்து வருட ஆட்சியில் என்ன தப்பு நடந்தாலும், மக்களோ கட்சி பிரமுகர்களோ ஆட்சியாளர்களை தட்டி கேட்க முடியாது. அவரை பதவியில் இருந்து கீழே இறக்கவும் முடியாது. இதையும் மீறி கட்சியில் இருப்பவர்கள் தட்டிக் கேட்டால், அவர்களை பதவியில் இருந்து, இறக்கி விடுவார்கள். அல்லது தூரமாக தள்ளி வைத்து விடுவார்கள்.
இந்நிலைமாற கட்சி தலைமை மிகவும் வலிமையாக இருந்தால் தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும் போது, தட்டிக் கேட்க முடியும். தப்பு செய்தவர்களை தூக்கி எறியவும் முடியும். மேலும் மக்களுக்கு கட்சி கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் சரிவர செயல்படுத்தும்படி பார்த்து கொள்ளும், கட்சி சார்ந்த விழாக்கள், கல்யாணம், காதணி போன்ற விழாக்களிலும் ஆட்சியாளர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை. ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் முழுக்கவனமும் இருப்பதற்கு இது உதவும்.

ஆட்சி நடைபெற மக்கள் வளர்ச்சிப்பணியில் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆலோசனை குழுவை உருவாக்கி அவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை அரசின் மூலம் செயல்படுத்தப்படுவதை கட்சி தலைமை உறுதி செய்யும். இதுவே எனது மூன்றாவது திட்டம்.


முதல்வராக நினைத்ததில்லை


ரஜினி ஆட்சிக்கு தலைவரா? கட்சிக்கு தலைவரா என்ற கேள்வி எழும். நான் கட்சிக்கு மட்டுமே தலைவர்.முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்தது இல்லை. முதல்வராக என்னை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இதுபற்றி 1996 லேயே தெரியும். நான் வலிமையான கட்சி தலைமை பொறுப்பை வகிப்பேன். எனது கட்சியில் இருந்துதேர்ந்தெடுக்கப்படும் நேர்மையும், திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற தன்னம்பிக்கையுள்ள படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை( அவர் பெண்ணாக கூட இருக்கலாம்) முதல்வர் பதவியில் அமர்த்துவேன். அவர் தலையாட்டும் பொம்மையாக இருக்க மாட்டார். ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது. அதேசமயம் தப்பு செய்தால் சுட்டிக்காட்டுவோம். கட்சிக்காரர்கள் ஆட்சியாளர்களை தொந்தரவோ, அதிகாரமோ செய்யாமல் பாரத்து கொள்வோம். இது தான் அரசியல் மாற்றத்திற்கான எனது முக்கியமான திட்டங்கள். இது தான் நான் விரும்பும் அரசியல். உண்மையான ஜனநாயகம். என்னுடைய கனவு. இதற்காக தான் நான் அரசியலுக்கு வருகிறேனே தவிர, பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணத்துக்காகவோ, பதவிக்காகவோ கிடையாது. ஊழலற்ற வளமான தமிழகத்தை உருவாக்க விருமபும் தமிழக மக்கள், எனது நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு, இத்தகைய அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
17-மார்-202017:09:34 IST Report Abuse
chander உங்களையெல்லாம் அரசியலுக்கு வர சொல்லி எந்த கருமாந்தரம் கூப்பிடிச்சி நடிச்ச பணத்தை காப்பாற்றி கொள்ள என்று உங்கள் ரசிகர்களுக்கு புரியவா போகிறது
Rate this:
Cancel
saravanan - Bangalore,இந்தியா
16-மார்-202019:53:47 IST Report Abuse
saravanan "எந்திரிச்சே நிக்கமுடியலையாம், ஏழு பொண்டாட்டி வேணுமாம்" இது ரஜினி பட (சந்திரமுகி) வசனம்.
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
12-மார்-202022:25:21 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ரஜினிகாந்த் அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபம். குழம்பிப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நாசூக்காகப் பிரச்சனையை முடித்துவிட்டார். 40 வயது இளைஞன் அரசியலில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், அந்த இளைஞன் குறைந்தது தனது 15 ஆவது வயதில் அரசியலில் தன்னை ஈடுபடுத்துயிருக்க வேண்டும். உலகில் உள்ள எந்த ஒரு நாட்டை உற்று நோக்கினால், அரசியல்வாதிகள் திடீரெனத் தோன்றியவர்கள் அல்ல என்று அறியலாம். உதாரணமாகத் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், எம்ஜிஆர் அவர்கள் மிக இளைமையில் காங்கிரஸ் தொண்டனாகச் செயற்பட்டார். ஜெயலலிதா அவர்கள் தனது 30 வயதில் அரசியலுக்கு விந்துவிட்டார். தற்போது, முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களும் மாணவர்களாக இருக்கும் போதே அரசியலில் ஈடுபாடு கொண்டனர். அமைச்சர்களைக் கவனித்துப் பார்த்தால், அவர்களும் இளம் வயதில் அரசியலில் ஈடுபாடு கொண்டனர். இவர்கள் ஒருவரும் திடீரென அரசியல்வாதிகள் ஆனவர்கள் அல்ல. அதிமுகதான் பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு, தமிழகத்தில் புரட்சியையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கி நிலைநிறுத்தியது.
Rate this:
சுடலைகாண் - சென்னை,இந்தியா
13-மார்-202021:23:54 IST Report Abuse
சுடலைகாண்சார் ஒரு 30 வயது இளைஞர் 15 அரசியல் அனுபவம் உள்ளவர். தேர்தலில் நின்றாள் நீங்கள் ஓட்டு போட தயாரா? பணம் வாங்காமல். அவரது கொள்கை மட்டும் கேட்டு அவரிடம் இலவசம் எதிர்பார்க்காமல் நல்ல நிர்வாகம் மட்டும் எதிர்பார்த்து . எத்தனை பேர் அப்படி ஒட்டு போட தமிழ்நாட்டில் இன்று தயார்? அப்படி ஒரு இளைஞர் நின்றாள் அவரை திமுக அதிமுக வெற்றிபெற விடுமா ? இதைத்தான் மற்ற திரு.ரஜினி அவர்கள் தனது முதல் புள்ளியை வைத்திருக்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X