சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்!

Added : மார் 12, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்!

கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் பல துறைகள், தேசிய விருதுகள் பெற்றுள்ளன என, தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான காரணங்கள் தான், நம் மரமண்டைக்கு புரியவில்லை.

ஒரு வேளை... பத்திரப் பதிவு துறையில் ௧ பைசா கையூட்டு இல்லாமல், பத்திரப் பதிவுகள் நடக்கத் துவங்கி விட்டதோ? ஓட்டுனர் உரிமம், வாகன தகுதிச் சான்று இவைகள், எவ்வித லஞ்சமுமின்றி, விதிமுறைப்படி வழங்கப்படுகின்றனவோ? பிறப்பு, இறப்பு சான்றுகள், வாரிசு சான்றுகள் பட்டா மாற்றம் போன்றவை, எவ்வித, 'கவனிப்பு'மின்றி, காலத்தே வழங்கப்படுகிறதோ? தமிழகம் முழுவதும் குண்டும், குழியுமற்ற தரமான சாலைகளை, அமைக்கத் துவங்கி விட்டனரோ?

கோவில் சிலைகள் கடத்தல், முற்றிலுமாக தடுக்கப்பட்டு, ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விட்டனரே? 'டாஸ்மாக்' கடைகள் முழுவதும் மூடப்பட்டு விட்டனவோ? இலவசங்கள், மானியங்கள் நிறுத்தப்பட்டு, தொலைநோக்கு திட்டங்கள் ஏதாவது செயல்படுத்தப்படுகிறதோ?

தமிழக அரசின், 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதோ? அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், விட்டமின், 'ப' இன்றி, தரமான மருத்துவம் பெற துவங்கி விட்டனரோ? காவல் துறையினரை கண்டாலே, ரவுடிகள் மிரள ஆரம்பித்து விட்டனரோ? பல்லாண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட குளங்கள், குட்டைகள், ஏரிகள் முதலியன மீட்கப்பட்டு விட்டனவோ? முதல்வர் அவர்களே... எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன் ப்ளீஸ்!

துன்பமயமாக்க துடிப்பதேன்?

ஆர்.கிருஷ்ணசாமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: சின்னத்திரையில் பல சேனல்களில், விதவிதமான, 'மெகா சீரியல்கள்' தொடர்ந்து வலம் வருகின்றன. அவற்றிலுள்ள கதைகளில் வரும் சம்பவங்களை கவனித்தால், ஒரே மாதிரியான காட்சிகள் பல இடம் பெற்றிருக்கும் விசித்திரத்தைக் காணலாம்.

ஒரு கோவில், ஒரு நீதிமன்றம், ஒரு காவல் நிலையம், ஒரு மருத்துவமனை, ஒரு ஜோதிடர், இத்யாதி... ஏதோ எல்லாரும், தினம் தினம் காவல் நிலையத்திற்கும், மருத்துவமனைக்கும், நீதிமன்றத்திற்கும், ஜோதிட நிலையத்திற்கும் விஜயம் செய்வது போன்ற காட்சி அமைப்புகள் இடம் பெறுகின்றன.

இளம்பெண்ணை காரில் கடத்தி குடோனில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வது; கூலிப்படையை ஏவி ஆளை கொல்லப் பார்ப்பது; உணவில் விஷத்தை கலந்து உயிருக்கு உலை வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுகின்றன. அதோடு நில்லாமல், குடும்பத்திற்குள்ளேயே சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் ஏற்படுத்துவது; நேர்மையாக வேலை செய்பவர்களை லஞ்சக் குற்றத்திற்கு ஆளாக்குவது... இத்யாதி இத்யாதி!

எவ்வளவோ நல்லா எழுத்தாளர்கள், நல்ல நல்ல கதைகளைப் படைக்கின்றனர். அவற்றிலிருந்து நல்ல கதைகளை தேர்வு செய்து, நாடகம் பேோடலாமே!மேற்கு வங்க இயக்குனர் ஷியாம் பெனகல், யாத்ரா என்ற குறும்படத்தை தயாரித்தார். அந்த படத்தை பார்த்த போது, நாமும் அந்தப் பட கதாபாத்திரங்களோடு யாத்திரை சென்று வந்த அனுபவம் ஏற்பட்டது.

மறைந்த இயக்குனர், கே.பாலச்சந்தரின் ரயில் சினேகம், அருமையான படைப்பு! தமிழகத்தில் பார்க்க வேண்டிய அருமையான இடங்கள் பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் சாதாரண மக்கள் அங்கேயே சென்று பார்ப்பது இயலாது. அதையெல்லாம் காட்சிப்படுத்தலாமே! இதை விட்டுவிட்டு, சமூகத்தை எதிர்மறை எண்ணத்தில் மூழ்கடித்து, வாழ்க்கையைத் துன்பமயமாக்கத் துடிப்பது ஏன்? சிந்தியுங்கள், 'டிவி' சீரியல் தயாரிப்பாளர்களே!

அரசு மெத்தனம் ஏன்?

ஜெ.பிரியதர்ஷிணி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மாற்றுத் திறனாளிகளில், பல வகையினர் உண்டு. கடும் பாதிப்பில் உள்ளோருக்கு, தமிழக அரசு, பல ஆண்டுகளாய், மாதா மாதம், 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தமிழக முதல்வர், ௧௧௦ விதியின் கீழ், ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதிக உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள், தங்களுடன் ஓர் உதவியாளரை வைத்துக் கொள்ள, ௧,௦௦௦ ரூபாய் கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும் என்பது தான் அது. தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில், இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் மாத நிதி உதவியும் வழங்கப்பட்டு விட்ட நிலையில், சென்னை மாவட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்துவதற்கான எந்த முன்னெடுப்பும் இல்லை.

சென்னையில், 8,000க்கும் மேற்பட்டோர், பழைய திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். அவர்களில், படுத்த படுக்கையாக இருப்பவர்கள்; எல்லா நேரத்திலும் பிறர் உதவி தேவைப்படுபவர்கள்; ஒரே குடும்பத்தில் பல மாற்றுத் திறனாளிகள் என, பல வகையினர் உள்ளனர்.இவர்கள் படும் சிரமம், சொல்லி மாளாது. மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டால், சரியான பதில் இல்லை.மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் வழங்கப்பட்டு வந்தது.கடந்த இரண்டு மாதங்களாக, அத்தொகையும் மாத இறுதியில் தான் வழங்கப்படுகிறது. ஏனிந்த மெத்தனமும், பாரபட்சமும்?

எதிர்காலத்திற்கு சேமிப்பு தேவை!

சொ.செல்வராஜ், கோ-ஆப்டெக்ஸ், மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: அறுவடை முடிந்ததும், விதை நெல்லை முதலில் பத்திரப்படுத்தி, பிற்காலத்தில், அதை முறையாக செலவிட்டு, பெருஞ்செல்வமாக உயர்த்தி காட்டியோர், நம் முன்னோர்; இப்போது, முறையாக, அதை யாரும் செய்வதில்லை.

சேமிப்பு மனப்பான்மை மக்களிடம், தற்போது குறைந்து வருகிறது. 2012ல், 34.6 சதவீதமாக இருந்த சேமிப்பு விகிதம், 2019ல், 30.1 சதவீதமாக குறைந்துள்ளது. மக்களின் அடிப்படை தேவையான, உணவு, உடை, உறைவிடம் மட்டும் போதும் என்ற நிலை, முன்பு இருந்தது; அந்நிலை, தற்போது மாறி விட்டது.

தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில், கார், 'ஸ்மார்ட்' போன் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்குவதில், மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நுகர்வுப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள், வங்கிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, கடன் சலுகைகளை மக்களுக்கு அளித்து வருகின்றன.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சர்வதேச அளவில், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், வரலாறு காணாத தங்க விலை உயர்வு போன்ற நிகழ்வுகளால், பணத்தின் மதிப்பு, இனி குறையும்; இவை, எதிர்காலங்களில் நடந்தால், அவற்றை சமாளிக்க, மக்களிடம் போதிய சேமிப்பும், சிக்கனச் செலவும் இருக்க வேண்டும்.

சேமிப்பின் அவசியத்தை, பள்ளிப் பருவத்திலிருந்தே கற்றுத் தந்து, மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும். சேமிக்கும் பணத்திற்கு, போதுமான வட்டியுடன் திரும்ப கிடைப்பதற்கான, ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சேமிப்பு மனப்பான்மையை, அதிகரிக்க செய்ய வேண்டும். எதிர்காலத்தில், சேமிப்பு சதவிகிதம் உயர்ந்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தபடி இருக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
14-மார்-202008:52:27 IST Report Abuse
venkat Iyer திரு.வெங்கடேசன் அவர்களே,இக்கறைக்கு அக்கறை பச்சையாகத்தான் தெரியும். நீங்கள் அந்த/ அடுத்த மாநிலங்களில் இருக்கும் பச்சையை பார்த்தால் நமது மாநிலத்து பச்சையே நன்றாக இருக்கும் என்று தோன்றும்.ஒவ்வொரு மாநிலமும் ஏதாவது ஒன்றில்தான் அதாவது சில துறையில் தான் சிறப்பாக இருக்கும்.நமது மாநிலம் ஓரளவு சராசரியாக ஓரளவு அனைத்து துறையின் செயல்பாடுகள் பரவாயில்லை என்று தோற்றம் நீங்கள் அங்கு அதாவது மற்ற மாநிலங்களுக்கு சென்று போய் பார்த்தால்தான் உங்களுக்கு நமது மாநிலத்தின் பெருமை என்னவென்று புரியும்.மின்துறை கடன் பற்றி கூறி இருந்தீர்கள்.விவசாயத்திற்கு இலவச மின்சாரம் இருந்ததால்தான் நாம் மற்ற மாநிலங்களை விட கூடுதலாக நெல் உற்பத்தியை அடைந்தோம். சிறிய வீடுகளுக்கு குறைந்தபட்ச யூனிட்டிற்கு இலவசம் என்பதினால் இரண்டு ஆதாயம் உள்ளது.பொருளாதாரத்தில் பின் தங்கிய வர்களுக்கு உதவிகரமாக உள்ளது.பலரும் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு பொதுவிநியோக திட்டத்தையும்,ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களை கணக்கிட்டால் நாம் அதில் முன்னோடியாக திகழ்கின்றோம். தொன்னுறு சதவீதம் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.ஐடி துறையில் வெளி நாடுகளில் ஆந்திராவை தாண்டி நாம் முன்னுக்கு வந்ததற்கு காரணம் நாம் நிறைய பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்ததுதான் அடிப்படை காரணமாகும்.தேசிய சாலைகள் எங்கு குண்டும் குழியுமாக இருக்கின்றது. ஊராட்சி திட்ட பணிகள் இனிமேல் நல்ல கண்காணிப்பு டன் செயல்படுத்தப்படும்.நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை.நமது ஊரில் டீ மற்றும் காபி குறைந்த விலையில் கிடைப்பது போல எந்த மாநில த்தில் கிடைக்கிறது?.பேருந்து கட்டணம் மற்ற மாநிலத்துடன் ஒப்பீட்டு பாருங்கள். நமது மாநிலத்தில் திட்ட பணிகளை ஐப்பசி மாதம் மட்டும் மழையினால் செய்ய முடியாது. மற்ற மாநிலங்களில் அதிக வெயில் மற்றும் அதிக குளிர் பணி போன்றவற்றினால் திட்ட பணிகள் செய்ய தாமதம் ஆகிறது.மேலும் தீவிரவாத த்தினை கட்டுப்படுத்தவே அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.இதற்கு நாம் தனி நிதியை ஒதுக்கவில்லை.ஒரு மாநிலத்தில் இதற்கு இரண்டாயிரத்து நானுறு கோடி மாநில நிதி ஒதுக்கி உள்ளார்கள்.நமது மாநிலம் கல்வி துறைக்கு முப்பத்து நாலாயிரம் ஒதுக்கியது போல் எந்த மாநிலமும் ஒதுக்கவில்லை.திட்ட செயல்பாடு தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட இங்கு ஓரளவு நடைபெற்று உள்ளது.பத்து செடியில் இரண்டு செடி காய்க்கவில்லை என்றால் அதற்கு இராமாயணம் பேசாதீர்கள் .பக்கத்து தோட்டத்தில் போடப்பட்ட விதையே முளைத்து எழவில்லை.நம்முடைய தோட்டத்தை(மாநிலத்தை) நன்கு உழுது பயிர் செழிப்பாக வளரும் வகையில் வைத்துள்ளோம். யானைகள் அழிக்க வந்தால் நாம் என்ன செய்யமுடியும்?நண்பரே டூர் சென்று வாருங்கள்.
Rate this:
Cancel
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
13-மார்-202017:10:23 IST Report Abuse
Mohanraj Raghuraman திருநின்றவூர் திரு வெங்கடேசன் அவர்களின் கேள்விகளில் உள்ள விஷயங்களை லிஸ்ட் போட்டு வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக பிரச்னைகளை தீர்த்துவிட்டாலே தமிழகத்தில் பாதி முன்னேற்றம் ஏற்பட்டு விடும் என்பது எனது தாழ்மையான கருத்து.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-மார்-202006:29:46 IST Report Abuse
D.Ambujavalli இந்த எந்த முன்னேற்றமும் இல்லாமல் பாராட்டுக் கிடைக்கிறதென்றால் மெல்ல மெல்ல அதிமுகவையே தங்களில் ஐக்கியப்படுத்திக்கொள்ளும் முயற்சியின் ஆரம்ப நிலைதான் இது. மசால்வடை மனத்தில் எலி விழும் உத்திதான் இதுவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X