புதுடில்லி: 'கொரோனா வைரஸ் தாக்குதலால், நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி, பார்லிமென்டில், பிரதமர், மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
டில்லியில், காங்., செய்தி தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:'கொரோனா' வைரஸ் பீதியால், உலக அளவில் பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், பங்கு சந்தை, நேற்று மட்டும் ஒரே நாளில், 2,700 புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்களுக்கு, 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 72 மணி நேரத்தில், சிறு, குறு முதலீட்டாளர்களுக்கு, 18 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தவர்கள், பெரும்பாலும் மாத ஊதியம் பெறுபவர்கள், சிறு முதலீட்டாளர்கள் தான்.
கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரதமர், மோடியும், நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனும், இது பற்றி எதுவும் கூறாமல், மவுனம் காக்கின்றனர். நாட்டின் பொருளாதார நிலை குறித்து, பார்லிமென்டில், பிரதமர், மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து, பொருளாதாரத்தை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
''மோடி அரசில் பொருளாதாரம் அழிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை; நிதியமைச்சர் நிர்மலாவுக்கு பொருளாதாரத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இத்துடன், தற்போது, கொரோனா வைரஸ் தாக்கமும், நாட்டின் பொருளாதாரத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பொருளாதாரத்தில், சுனாமி அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன''
- ராகுல், எம்.பி., - காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE