பொது செய்தி

தமிழ்நாடு

புரட்சி வெடித்தால் அரசியலுக்கு வருவேன்: நடிகர் ரஜினி பரபரப்பு பேட்டி

Updated : மார் 13, 2020 | Added : மார் 13, 2020 | கருத்துகள் (114)
Share
Advertisement
Rajinkanth, PoliticalEntry, RajinikanthPoliticalEntry, RajinikanthPressMeet, ரஜினிகாந்த், அரசியல், செய்தியாளர்கள் சந்திப்பு, எழுச்சி, புரட்சி, ரஜினி

சென்னை: ''அரசியலில் மாற்றம் வர வேண்டும் என்பது தான், என் விருப்பம். கட்சிக்கு மட்டுமே, நான் தலைமை ஏற்பேன். ஆட்சிக்கு திறமையான, ஒருவர் பதவி ஏற்பார். இதை ஏற்று, மாற்றத்தை தரும், அரசியல் புரட்சி வந்தால், கண்டிப்பாக அரசியலுக்கு நான் வருவேன்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, நட்சத்திர ஓட்டலில், நேற்று ரஜினி அளித்த பேட்டி: இந்த சந்திப்பு, எதற்கு என, உங்களுக்கே தெரியும். சில தினங்களுக்கு முன், மாவட்ட செயலர்களை சந்தித்து பேசினேன். அதன் பின், நிருபர்களிடம் பேசும் போது, 'எல்லாமே நல்லா இருக்கு. ஆனால், எனக்கு தனிப்பட்ட முறையில், ஒரு ஏமாற்றம் உள்ளது' என்றேன். நான் பேசிய விபரம், மாவட்ட செயலர்களிடம் இருந்து வெளியே வரவில்லை; அதற்கு என் பாராட்டுகள். ஆனால், நாங்கள் பேசிய விஷயங்கள், பல மாதிரியாக பத்திரிகைகளில் வெளியாகின. இதற்கெல்லாம், ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினேன்.

அதே நேரம், என் வருங்கால அரசியல் எப்படி இருக்கும்; நான் அரசியலுக்கு வந்தால், மக்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விளக்க, முண்னோட்டமாக, கட்சி ஆரம்பிக்கும் முன், இதை சொல்லி விட்டால், அவர்களுக்கும் தெளிவு வரும். எனக்கும் அந்த அதிர்வுகள், எப்படி இருக்கும் என, தெரியும்; உங்களை புரிந்து கொள்ளவும் உதவும். அதற்காக தான், இந்த சந்திப்பு.


latest tamil newsகடந்த, 1996ல் இருந்து, '25 ஆண்டுகளாக, ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்' என்கின்றனர். கடந்த 2017 டிச., இறுதியில் தான், 'நான் அரசியலுக்கு வருவேன்' என, சொன்னேன். அதற்கு முன், சொன்னதே கிடையாது. 'எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள்' என கேட்டவர்களிடம், 'அது, ஆண்டவன் கையில் தான் இருக்கிறது' என்றே சொல்லியுள்ளேன்.

கடந்த, 1996ல் எதிர்பாராவிதமாக, அரசியலில் என் பெயர் அடிபட்டது. கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோரிடம் பேசி பழகிய பின், ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், என் தலையில் அப்படி எழுதியிருந்தால், எந்த மாதிரி அரசியல் திட்டத்தை, மக்கள் மத்தியில் தர வேண்டும் என எண்ணி, அரசியலை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தேன்.

கடந்த, 2017ல், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்த நேரத்தில், நான் அரசியலுக்கு வருவதாக, முதன்முதலாக சொன்னேன். அப்போதே, 'சிஸ்டம் கெட்டுப் போச்சு; அதை சரி செய்ய வேண்டும்' என்றேன். 'மக்கள் மத்தியில், முதலில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். சிஸ்டம் சரி செய்யப்பட வேண்டும்' என்றேன். அதை சரி செய்யாமல், மாற்றம் நடந்தால், மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல், சர்க்கரை பொங்கல் வைத்தால், எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும். முதலில், அரசியலில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு, சில திட்டங்களை வகுத்திருந்தேன். அதில் முக்கியமாக, மூன்று திட்டங்கள்...


முதல் திட்டம்


இரண்டு மிகப்பெரிய கட்சிகளான, தி.மு.க., - அ.தி.மு.க.,வில், 'பூத் கமிட்டி' உறுப்பினர்கள் தவிர்த்து, 60 ஆயிரம் கட்சிப் பதவிகள் உள்ளன. தேர்தல் நேரத்தில் மட்டுமே, இப்பதவிகள் தேவை. தேர்தல் முடிந்த பின், இவ்வளவு அதிக பதவிகள் தேவையில்லை. இவர்கள் வெற்றி பெற்ற பின், ஆளும்கட்சி ஆட்கள் என்ற முறையில், ஒப்பந்தம் முதல் அனைத்திலும், எல்லா விதத்திலும் ஊழல், தப்பு நடக்கும்; மக்கள் பாதிக்கப்படுவர்.

ஆட்சிக்கும், கட்சிக்கும் இது கெட்டது; மக்களுக்கும் ரொம்ப கெட்டது. சிலர், கட்சிப் பதவிகளை, தொழிலாகவே வைத்துள்ளனர். அவர்களுக்கு, வேறு தொழில் இல்லை. நாம் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் நேரத்தில் இருந்த பதவிகள், அதன்பின் களையப்படும்; அத்தியாவசியப் பதவிகள் மட்டுமே இருக்கும். வீட்டில் திருமணம் நடந்தால், நிறைய சமையல்காரர்கள், வேலையாட்கள் தேவை. திருமணம் முடிந்த பின், அந்த சமையல்காரர்கள், வேலையாட்களை, நாம் கூடவே வைத்திருப்போமா... இல்லையே!

அதற்காக, பதவியில் இருப்பவர்களை, வேலையாட்கள், சமையல்காரர்கள் என, நான் கூறியதாக நினைக்க வேண்டாம். எவ்வளவு வேண்டுமோ, அதை தான் வைத்திருக்க வேண்டும். இதை தான், முதலில் அரசியல் மாற்றம் என்றேன்.


இரண்டாவது திட்டம்:


சட்டசபையில் பெரும்பாலானவர்கள், 50 - 65 வயதுக்கு மேலானவர்கள்; 45க்கு கீழே கொஞ்சம் பேர் மட்டுமே உள்ளனர்; அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். புதியவர்கள் வருவதே இல்லை; வந்தவர்களே வருகின்றனர். புதியவர்கள், இளைஞர்கள், அரசியலை சாக்கடை என, ஒதுங்கி இருக்கின்றனர். இளைஞர்களுக்கு, அவ்வளவு சீக்கிரம் பதவிகள் கிடைப்பதில்லை. அப்படி பதவி கிடைக்க வேண்டும் என்றால், அவர், எம்.எல்.ஏ., - எம்.பி., மகனாகவோ அல்லது செல்வந்தனாகவோ இருக்க வேண்டும். என் கட்சியில், 50 வயதுக்கு கீழே உள்ள திறமையான, ஓரளவு படித்த, நல்ல பெயர் பெற்ற, தொகுதியில் கண்ணியமாக கருதப்படுபவர்களுக்கு மட்டுமே, 65 சதவீதம் அளவுக்கு, 'சீட்' தருவேன்.

வேறு கட்சியில் உள்ள நல்லவர்கள், திறமையானவர்களுக்கு, மீதி, 35 சதவீதம் தருவேன். நல்லவர்கள் இருக்கின்றனர்; அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை, நல்லவர்கள் வந்து, நல்லது செய்து விட்டால், மற்றவர்கள் விட மாட்டனரே... அந்த மாதிரியானவர்களை, பதவியில் அமர்த்த வேண்டும். வெளியே, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,கள், நீதிபதிகள், ஓய்வுபெற்றவர்கள், சமுதாயத்தில் பணம், பெயர் புகழோடு இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இவர்கள், ஏன் அரசியலுக்கு வருவதில்லை என, பலர் நினைப்பதுண்டு. இதுபோன்ற ஒவ்வொருவரது வீட்டிக்கும் சென்று, அவர்களிடம், 'அரசியலுக்கு வர வேண்டும்.

'சிஸ்டம் கெட்டுப் போயிருக்கு வாங்க' என்பேன். இந்த மாதிரி, ஒரு புது சக்தி, புது வெள்ளம், புது மின்சாரம், புது ரத்தம், சட்டசபைக்குள் போக வேண்டும். 'இத்தகைய ஆட்சி அதிகாரத்திற்கு, ரஜினி, ஒரு பாலமாக இருக்க வேண்டும். சினிமாவில், 45 ஆண்டுகளாக கிடைத்த பெயர், புகழ், அன்பு, நம்பிக்கை, இதற்கு உதவும்' என, நம்புகிறேன்.


மூன்றாவது திட்டம்:


இந்தியாவில், தேசிய கட்சிகளை தவிர, எல்லா மாநிலத்திலும், கட்சிக்கும் அவர் தான் தலைவர்; ஆட்சிக்கும் அவர் தான் தலைவர். இப்படி இருக்கும் போது, தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், அவரை, ஐந்தாண்டுகளுக்கு மக்கள் ஒன்றும் கேட்க முடியாது. கட்சியில் கேட்டாலும், அவரை துாக்கி எறிந்து விடுவர். ஏன் என்றால், கட்சியிலும் அவர் தானே தலைவர்! எனவே, கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை அவசியம். கட்சி என்றால் என்ன; கொள்கைகள் தான் கட்சி.

கொள்கைகளை வைத்து, மக்களுக்கு வாக்குறுதி தருகிறோம். அதை நம்பி, மக்கள் ஓட்டு போடுகின்றனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மக்கள் வளர்ச்சிப் பணியில், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி, குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதை, கட்சி தலைமை உறுதி செய்யும். இதில், இரண்டு தலைமை இருக்காது. இதுவே, என் மூன்றாவது திட்டம்.

ரஜினி, ஆட்சித் தலைவரா... கட்சித் தலைவரா என, யோசிக்கும் போது, எனக்கு முதல்வர் பதவி மீது, ஆசையே இல்லை; அதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. சட்டசபையில் அமர்ந்து பேசுவதை, நினைக்கவே முடியவில்லை; அது, என் ரத்தத்திலேயே இல்லை. கடந்த, 1996ல், சிதம்பரம், சோ, மூப்பனார் என, பலர் கேட்டனர். அப்பவும், எனக்கு ஆசை இல்லை. 'நல்ல சந்தர்ப்பம் இது' என்றனர். 'ஒரு முறை, ரஜினி முடிவு எடுத்து விட்டால், அவ்வளவு தான்' என்பார், சோ. நான் கட்சித் தலைவராக செயல்படவே விரும்புகிறேன். ஆட்சித் தலைமைக்கு, புதிதாக ஒருவரையா கொண்டு வரப் போகிறேன் அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவரையா கொண்டு வரப் போகிறேன்; தேர்தலின் போது, ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளத் தானே போகிறீர்கள். நல்லவராக, நற்சிந்தனை உள்ளவராக, தொலைநோக்கு பார்வை உள்ளவராக, அன்பு, பாசம், தன்மானம் உள்ளவராக, ஒருவரை தான் அமர வைப்போம்.


என் வேலை என்ன...


எதிர்க்கட்சி மாதிரி, முதலில் சுட்டிக்காட்டுவோம்; யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவோம்; பின், பதவியில் இருந்து துாக்கி எறிவோம். அதே மாதிரி, அவர்களின் அன்றாட பணிகளில், நாம் தலையிட மாட்டோம். அரசுப் பணியில், கட்சி ஆட்கள் யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. அதை, நாம் பார்த்துக் கொள்வோம். கட்சி நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியாளர்கள் வர வேண்டியதில்லை; சம்பந்தப்பட்டவர்கள் வந்தால் போதும். இது தான் என் திட்டம். மக்கள் இதை விரும்புவரா என, யோசித்தேன். மக்கள், மாற்று அரசியல் தானே கேட்கின்றனர். இதை ஏற்றுக் கொள்வர் என, உறுதியாக நம்பினேன். படத்தில் நடிக்கும் போது கூட, அந்த கதையை, 10 பேரிடம் சொல்லி, கருத்து கேட்பேன். ஆனால், இப்போது, 10 கோடி மக்களின் வாழ்க்கை குறித்த திட்டம் ஆயிற்றே... எவ்வளவு பேரிடம் கருத்து கேட்க வேண்டும்.

இப்போது சுவருக்கு கூட காது இருக்கிறது. அதனால், வெளியே சொல்லாமல் இருந்தேன். ஆனால், நேரம் நெருங்க நெருங்க, எனக்கு நெருக்கமானவர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்கள், நீதிபதிகள், வல்லுனர்களிடம் கருத்து கேட்டேன். இதில், அரசியல்வாதிகள் யாரும், என் மூன்று திட்டத்தையும் ஏற்கவில்லை. 'கட்சியில் பதவி இல்லை என்றால், யார் வருவர்' என்றனர். 'அப்படி நினைப்பவர்கள் வர வேண்டாம்' என்றேன். '50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, சீட் இல்லை என்கிறீர்களே... உங்கள் மன்றத்தில், அவர்கள் தானே அதிகம்' என்றனர். 'நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும். மற்றவர்கள் வருவதை, உங்கள் ரசிகர்களோ, மக்களோ ஏற்க மாட்டார்கள்' என்றும் கூறினர். 'இங்கே பழகி விட்டது. கட்சிக்கு யார் தலைமையோ, அவர் தான் ஆட்சிக்கும் தலைமை வகிப்பார்' என்றனர். நான் முதல்வர் இல்லை என்பதை, இளைஞர்கள் சிலர் மட்டுமே ஏற்றனர்.

'அழகு பார்க்கிறது' என்கின்றனரே, அந்த வார்த்தை, அரசியலில் எனக்கு பிடிக்காதது. 'எம்.எல்.ஏ.,வாக, எம்.பி.,யாக, மந்திரியாக அழகு பார்க்க வேண்டும்' என்கின்றனர்; எனக்கு துாக்கி வாரி போட்டது. இத்தனை ஆண்டுகளாக யோசித்து வைத்தோமே, என்ன பண்றது என, யோசித்தேன். இதைப் பற்றி, மன்ற செயலர்களை அழைத்து பேசலாம் என, முடிவு எடுத்து பேசினேன். முதல் இரண்டு விஷயங்களை, அவர்களிடம் சொல்லவில்லை. இத்தனை ஆண்டு கட்சியில் இருந்து விட்டு, பதவி இல்லை என்றால் கோபப்படுவர். முத்தலாக், ராமர் விவகாரம், குடியுரிமை சட்டம் என, பல விஷயங்களை பற்றி பேசும் போதே, சிறுபான்மை மக்களுக்கு, ஏற்கனவே கோபம் வந்தது.

அதனால், மூன்றாவது விஷயத்தை மட்டும், அவர்களிடம் சொன்னேன். நானே ரசிகனாக இருந்தாலும், இதை ஏற்க மாட்டேன் தான். ஆனால், குறைந்தபட்சம், 10 சதவீதம் மட்டுமாவது ஏற்பர் என, நினைத்தேன்; யாரும் ஏற்கவில்லை. தலைவன் சொல்வதை, ஏற்பவனே தொண்டன்; தொண்டன் சொல்வதை ஏற்பவன், தலைவன் அல்ல. நான் ஏதோ முதல்வர் பதவி வேண்டாம் என்பதை, சிலர் தியாகமாக நினைக்கலாம். இதை, 2017ம் ஆண்டிலேயே தெரிவித்து விட்டேன். பதவிக்கு ஆசை இருந்தால், 1996ம் ஆண்டிலேயே நாற்காலியில் அமர்ந்து இருப்பேன். 45 வயதிலேயே பதவி ஆசை இல்லை; இந்த வயதில் பதவி ஆசை வருமா... அப்படி வந்தால், நான் பைத்தியன்காரன் இல்லையா? பணம், பெயர், பதவிக்காக, அரசியலுக்கு வர விரும்பவில்லை. பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வெளிப்படையாக இருந்துள்ளேன்.


latest tamil news
மாற்றம் வேண்டும்:


இங்கு, ஒரு அரசியல் மாற்றம் வேண்டும். நல்ல தலைவர்கள் வேண்டும். தலைவரை உருவாக்குபவன் தான், நல்ல தலைவன். நான் மிகவும் மதிக்கும், அண்ணாதுரை, பல தலைவர்களை உண்டாக்கியவர். 'தம்பி வா... தலைமை ஏற்க வா' எனக்கூறி, பல தலைவர்களை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய தலைவர்கள் தானே, இத்தனை நாள் நம்முடன் இருந்தனர். பல தலைவர்கள், வெளிச்சத்திற்கு வரவில்லை; அவர்களை வெளியே வரவைக்க வேண்டும்.கொஞ்சம் வழி கிடைத்தால் கூட போதும், கோடிக்கணக்கான பணத்தை விட்டு விட்டு, இங்கே வர தயாராக உள்ளனர். இதுதான் ரஜினி கொள்கை என்றால், இப்போது வந்து ஏன் சொல்கிறார் என, கேட்கலாம். கட்சி ஆரம்பித்து, தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டியது தானே என, பலர் நினைக்கின்றனர்.

இதெல்லாம், ஒரு தந்திரம் என்றும் நினைக்கின்றனர். என் தந்திரம், மூளையில் இருந்து வருவது இல்லை; இதயத்தில் இருந்து வருவது. என் திட்டத்தை சொன்னபோது, யாரும் ஏற்கவில்லை. அரசியலுக்கு வருவேன் என, சொல்லி விட்டேன். சரி, டில்லிக்கு சென்று, பெயரை பதிவு செய்து, கட்சி தலைமை ஏற்று, பல லட்சம் ரூபாய் செலவு செய்து, மாநாடு நடத்தி, கொடியை அறிமுகப்படுத்தி, கட்சி பெயர் கொள்கைகளை அறிவித்து, தேர்தலில் நிற்கலாம். நாம் எதிர்ப்பது யாரை; இரண்டு பெரிய ஜாம்பவான்களை; அசுரபலத்தோடு இருக்கின்றனர். ஒரு பக்கம் பார்த்தால், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை.

மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர்; இப்போது இல்லை. அவருடைய வாரிசு என்பதை, நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம். வாழ்வா, சாவா என்ற நிலை. பணபலம், ஆள்பலம் கட்டமைப்பு என, உள்ளனர். எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் உள்ளனர். இன்னொரு பக்கம் கையில், ஆட்சியோடும், அந்த குபேரனோடும் கஜானாவையே கையில் வைத்துள்ளனர். நிறைய கட்டமைப்போடு காத்திருக்கின்றனர். இதற்கு நடுவில், ரசிகர்களையும், சினிமா புகழை மட்டும் வைத்து ஜெயிக்க முடியுமா? இந்த கொள்கைகளை சொன்னால், அது எடுபடவில்லை என்றால், உங்களை எல்லாம், நான் பலிகடா ஆக்குவது தானே அர்த்தம்.

தேர்தல் என்ன சாதாரண விஷயமா; பொண்டாட்டி தாலி விற்று, வீடு விற்று, கடன் வாங்கி வருவான் இல்லையா... அதனால் முன்பே சொல்லி விடலாம் என நினைத்தேன். ஒத்துக் கொள்ளவில்லை என்றால், ஒதுங்கி விடலாம் என இருந்தேன். ஆனால், மற்றவர்கள், 'இதெல்லாம் ஒரு சாக்கு' என்பர். பலர் பலவிதமாக பேசுவர். 'கோழை, பயந்து விட்டார்' என்பர். அந்த மாதிரி கெட்டப் பெயர் வேண்டாம் என்று தான், அரசியலுக்கு வர எண்ணினேன். ஆனால், வந்தால் இப்படி இருக்கிறது... இப்போது என்ன செய்வது; அதனால் தான் முன்பே சொல்லி விடலாம் என, நினைத்தேன். இங்கு, மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா என, இரண்டு பெரிய ஆளுமைகள், இங்கு கிடையாது. தி.மு.க.,வுக்காக, 30 சதவீதத்தினர் என்றால், மீதி, 70 சதவீதத்தினர், கருணாநிதிக்காக ஓட்டு போட்டனர்.


முற்றுப்புள்ளி:


அதேபோல், அ.தி.மு.க.,வில் கட்சிக்காக, 30 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்காக, 70 சதவீதத்தினரும் ஓட்டு போட்டனர். இந்த இரண்டு ஆளுமை இப்ப இல்லை; இதுதான் வெற்றிடம். இது தான் நேரம்; 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். இதை மக்கள் யோசிக்க வேண்டும். இது தான் அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம். இதுவே நல்ல சந்தர்ப்பம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியலுக்கு வாங்க என்றால் வருகிறேன். ஆனால், இப்படித் தான் வருவேன். இதனால். ஒரு எழுச்சி உருவாக வேண்டும். அப்படி ஒரு எழுச்சி, இளைஞர்கள், மக்கள் மத்தியில் உருவானால், இந்த பெயர், பணம், சூழ்ச்சி, ஆள்பலம் உள்ள ஜாம்பவான்கள் என எதுவுமே நிற்க முடியாது.

அதை தான், நான் விரும்புகிறேன். அந்த ஒரு அலை, அந்த ஒரு எழுச்சி உருவாக வேண்டும்; அது உருவாகும் என நம்புகிறேன். இந்த மண், புரட்சிக்கு பெயர் பெற்றது. காந்தி, இங்கிருந்து தான், தாம் அணிந்திருந்த உடையை துாக்கி போட்டு விட்டு, வேட்டியும், துண்டுமாக வெளியேறினார். விவேகானந்தர், 'இந்த மண்ணிலிருந்து, 100 இளைஞர்கள் தாருங்கள்; இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுகிறேன்' என கர்ஜித்தார். இந்தியாவில், எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆண்டபோது, இங்கு தான் மாநில கட்சி ஆண்டது. அத்தகைய மண் இது.

கடந்த, 1960களில் நடந்த புரட்சி, இப்போது நடக்க வேண்டும். 2021ல், மக்கள் செய்து காட்ட வேண்டும். மக்கள் நன்றாக இருக்க, வருங்காலம் நன்றாக இருக்க, அதிசயம் நிகழ்த்துவர். அதற்கு, பத்திரிகையாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீங்கள், படித்தவர்கள், பாமரர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 50 சதவீதத்தினருக்கு தான் தெரியும்; 30 சதவீதத்தினருக்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது தெரியாது. அதனால் தான், மக்கள் மனதை மாற்ற வேண்டும் என்கிறேன். அறிவு ஜீவிகள் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இது, ரஜினிக்காக செய்யும் வேலை அல்ல.

தமிழகத்திற்காக, தமிழக மக்களுக்காக, இந்த புரட்சி வெடிக்க வேண்டும். நான் ஒரு துரும்பு தான். இது, நடக்கவில்லை என்றால், நானும் தேர்தலில் போட்டியிட்டு, 15 சதவீதம் ஓட்டை பிரிக்க, நான் வர வேண்டுமா; தேவையில்லை. மற்றவர்கள், எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், பரவாயில்லை. எனக்கு என்ன, 50 வயதா... இப்போது விட்டால், அடுத்த தேர்தலில் பிடிப்பதற்கு; எனக்கு, 71 வயது. உடலில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன; பிழைத்து வந்துள்ளேன். அடுத்த தேர்தலில், எனக்கு, 76 வயது. அப்போது, என் கொள்கையை சொல்வதை விட, இப்பவே சொல்கிறேன், ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை, மூலை முடுக்கெல்லாம், மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இதை ஏற்று, உருவாகும் மக்களின் எழுச்சி, எனக்கு தெரிய வேண்டும்; அப்போது நான் வருகிறேன். இது, இந்தியா முழுக்க பரவ வேண்டும். கட்சியில், அதிக பதவிகள் நீக்கப்பட வேண்டும். இளைஞர்கள் அதிகம் வர வேண்டும். கட்சி வேறு, ஆட்சி வேறு இருக்க வேண்டும். இந்த புரட்சி நடக்க வேண்டும் என, எதிர்பார்க்கிறேன். தயவு செய்து, என் விளக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். செய்வீர்கள் என, நம்புகிறேன். அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால், எப்பவும் இல்லை. இவ்வாறு, ரஜினி கூறினார்.


சீமான் வரவேற்பு!


'ரஜினி, முதல்வர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது. தமிழர் தான், தமிழகத்தை ஆள வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமான் எதிர்த்தார். தற்போது, ரஜினியின் முடிவை, அவர் வரவேற்றுள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், சீமான் கூறியிருப்பதாவது:ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம். அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக, 10 ஆண்டுகளாக, உண்மையோடும், உறுதியோடும் போராடி வருகிறோம்; அதில் வெல்வோம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


ரஜினிக்கு எஸ்.வி.சேகர் பதிலடி'டுவிட்டர்' பக்கத்தில், நடிகர், எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது:'முதல்வர் பதவி குறித்து, நான் நினைத்து பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம், எனக்கு ஒருபோதும் கிடையாது; அது எனக்கு, 'செட்' ஆகாது' என, ரஜினி கூறியிருக்கிறார். அவர் கூறுவதை பார்த்தால், பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி, அழகு பார்க்க நினைக்கிறாரா என தெரியவில்லை. கட்சியை நடத்த பணமும், ஆட்சியை நடத்த ராஜதந்திரமும் தேவை. எனவே, ரஜினி சொல்வது, நிஜத்தில் நடக்காது; இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது. ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும். கட்சி, ஆட்சி இருவர் கையில் இருந்தால், முதலில் கட்சி, சின்னம் முடங்கும்; இதுவே வரலாறு.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


பால் தாக்கரே பாணி


கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை என்ற திட்டத்தை, நடிகர் ரஜினி அறிவித்திருப்பது, பால் தாக்கரே பாணி அரசியல் என, அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.மஹாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா கட்சி நிறுவனர், பால் தாக்கரே, கட்சிக்கு, ஒரு தலைமை; ஆட்சிக்கு, ஒரு தலைமை என்ற, கொள்கையை கடைப்பிடித்தார். மஹாராஷ்டிரா முதல்வராக, மனோகர் ஜோஷி, நாராயண் ரானே போன்றவர்களை, பால் தாக்கரே உருவாக்கினார். எனவே, அவரது பாணியில், முதல்வரை உருவாக்கும், 'கிங் மேக்கர்' போல் இருக்க, ரஜினி விரும்புகிறார் என, அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்


.ஸ்டாலினை குறிவைக்கும் ரஜினி!ரஜினி கூறுகையில், ''நாம், இரண்டு பெரும் அரசியல் ஜாம்பவான்களை எதிர்கொள்ள போகிறோம். இது, சாதாரண விஷயமல்ல. பத்து ஆண்டுகளாக, ஆட்சியில் இல்லை என்றாலும், அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், ஒரு தரப்பும்; ஆட்சியில் இருந்தபடியே, குபேரனின் கஜானாவையே கையில் வைத்து கொண்டு, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில், மற்றொரு தரப்பும் காத்திருக்கின்றன,'' என்றார். ஸ்டாலினையும், இ.பி.எஸ்.,சையும், அவர் போட்டியாளர்களாக கருதுவது, இதில் இருந்து தெரிய வருகிறது.


ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது!


ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என, நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள். எனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. ரஜினி நல்ல நடிகர். ஆனால், அவர் எம்.ஜி.ஆர்., அல்ல. ரஜினியின் முயற்சி வெற்றி பெறாது; பலிக்காது. எனினும், அவரது வருகைக்கு, நாங்கள் தடையாக இல்லை.

- கே.எஸ்.அழகிரி, தமிழ காங்., தலைவர்.

Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மார்-202003:45:54 IST Report Abuse
ஆறுமுகம்    சென்னை தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் ரஜினி எப்படி மக்களுக்கு நன்மை செய்வார் கந்து வட்டி ரஜினி
Rate this:
Cancel
சுடலைகாண் - சென்னை,இந்தியா
13-மார்-202021:17:23 IST Report Abuse
சுடலைகாண் இங்க கருத்து சொன்னவங்க பாதிபேர் திரு.ரஜினி அவர்கள் சொன்னதை முழுமையாக உள்வாங்கினார்களா? சும்மா வழக்கம்போல கிண்டல் செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அடுத்த தலைமுறை நன்றாக இருக்க அவர் சிந்திக்கிறார். இவர்கள் பழைய திமுக அதிமுக வை மீண்டும் கொண்டுவர கருத்து கொண்டுள்ளார்.
Rate this:
Cancel
செந்தில்   திருச்சி நோகாம நுங்கு திங்க ஆசை படறாரு இவரை நம்பி கடை போட்ட தமிழ் அருவி மணியன் குரு மூர்த்தி இவரோட ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X