திருச்செங்கோடு: திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில், கணக்கில் வராத, பல லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, செயல்பட்டு வருகிறது. சார்பதிவாளராக தமிழ்ச்செல்வன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத, நான்கு லட்சத்து, 86 ஆயிரத்து, 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து, இடைத்தரகர்கள் சிலர், தப்பிச் சென்றனர். நேற்று காலை வரை சோதனை நடத்தியும், யாரையும் கைது செய்யவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை, திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.