வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் குறித்து எனது கருத்தை கொண்டு சென்ற பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அரசியலில் சில மாற்றங்களை விரும்புகிறேன், அதை செயல்படுத்த 3 திட்டங்கள் வைத்துள்ளேன் என ரஜினிகாந்த் இருதினங்களுக்கு முன்பு அறிவித்தார். தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை. பின்னால் இருந்து செயல்படுவது மாதிரியான கருத்தையும் முன் வைத்தார். மக்கள் மத்தியில் புரட்சி வெடிக்க வேண்டும், மக்கள் மத்தியில் மாற்றம் நிகழ்ந்து எழுச்சி ஏற்பட்டால் அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறினார்.

இதையடுத்து இருதினங்களாக மக்கள் மத்தியில் ரஜினி பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. பலர் ரஜினியை பேச்சை வரவேற்றும், விமர்சித்தும் வருகின்றனர். மீம்களும் துாள் கிளப்புகின்றன.
இந்நிலையில் ரஜினி டுவிட்டரில், ‛‛அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி''. என பதிவிட்டுள்ளார்.