சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை இல்லையே...'

Added : மார் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை இல்லையே...'

சென்னை மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கியின், பாண்டி பஜார் கிளையில், பயனாளிகளுக்கு, சிறப்பு கடனுதவி வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. பலருக்கு, அமைச்சர், ராஜு நிதியுதவி வழங்கினார். பின், நிருபர்களை சந்தித்தார். அப்போது, 'கூட்டுறவு சங்கங்களில், தவறு செய்த பணியாளர்கள் மீது மட்டும், இதற்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது; தற்போது, நிர்வாக குழு தவறு செய்தால், அந்த குழுவில் இருப்பவர்கள் மீதும், 'கிரிமினல்' நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு ஏற்ப சட்ட திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. குற்ற நடவடிக்கைக்கு ஆளாகுபவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என்றார்.

இதை கேட்ட அதிகாரி ஒருவர், 'சட்ட திருத்தம் நல்லா தான் இருக்கு... முக்கிய கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக, ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலர், ஒன்றியச் செயலர் என, முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள் தான் இருக்காங்க. அவர்கள், பல முறைகேடுகளில் ஈடுபடுறாங்க... ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லையே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள், ஆமோதிப்பது போல, தலை அசைத்தனர்.


கட்டெறும்பாக தேயும் காங்., காரணம் சொன்ன பெரியவர்


தஞ்சாவூர், கும்பகோணத்தில், இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர், மணிசங்கர் அய்யர் பேசியதாவது: கூட்டணி கட்சிகள் நமக்கு போட்டியிட, அதிக வாய்ப்பு வழங்கவில்லை என்பன போன்ற குமுறல்கள் இருந்தாலும், அதையெல்லாம் முறியடிக்கும் வகையில், போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

ராஜிவ் பிரதமராக இருந்த போது, 414 எம்.பி.,க்கள், காங்கிரசுக்கு இருந்தனர். இப்போது, 44 எம்.பி.,க்கள் தான் உள்ளனர். எம்.பி.,க்கள் எண்ணிக்கை, தேர்தலுக்கு தேர்தல் குறைந்து கொண்டே வருகிறது. கட்சியை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அங்கிருந்த மூத்த தொண்டர் ஒருவர், 'கட்சியில் குடும்ப அரசியல், மூத்த தலைவர்கள் ஊழல்வாதிகளாக மாறியது, பதவிக்காக கோஷ்டி சண்டை இருக்கும் வரை, காங்., தேறாது' என கூறி, அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அவரைப் போன்ற பெருசுகள், 'ஆமாம்...' என்றன!


குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது!


தேனி மாவட்டம், தேவாரத்தில், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் திருமணத்தை, சரத்குமார் நடத்தி வைத்தார். கட்சியினர், மணமக்களின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டிருந்த விழாவில் பேசிய சரத்குமார், 'யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம்' என, நடிகர் ரஜினி குறித்து, மறைமுகமாக பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தால், நம் நாட்டில் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், களத்தில் இறங்கி போராட, தயாராக உள்ளேன். எதிர்க்கட்சிகள், மக்களை தவறாக வழி நடத்தக் கூடாது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மூன்று அம்சங்களில் திருத்தம் கோரி, மத்திய அரசுக்கு, முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். பதில் வராததால், மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி, ஜூன் 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அங்கிருந்த ஒருவர், 'குடியுரிமை குடியுரிமை என்ற பேச்சு தான், நம் மாநிலத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இதை, இளம் தலைமுறையினர் தவறாக புரிந்து கொண்டு, 'டாஸ்மாக்' கடைக்கு சென்று, உரிமையை நிலைநாட்டி விடக் கூடாது' என, 'ஜோக்'கடிக்க, சிலர் மட்டும் அப்போதைக்கு சிரித்து வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-மார்-202006:07:59 IST Report Abuse
D.Ambujavalli ஆளும் கட்சியின் நிர்வாகிகளை இவர் தொட எண்ணினால், முதல் டார்கெட் இவர் என்று ஆகிவிடும் கூட்டம் கைதட்டும் ஆனாலும் உள் விவரம் தெரியாதவர்களில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X