சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன்: பா.ஜ., புதிய தலைவர் முருகன் திறமையானவர்; அவரால், கட்சி மேலும் வளர்ச்சி பெறும். கட்சித் தலைவர் போட்டியில் நான் இருந்ததில்லை. அதனால், தலைவர் தேர்வில் திருப்தியாக இருக்கிறேன்.
'டவுட்' தனபாலு: தமிழக, பா.ஜ., புதிய தலைவர் போட்டியில், பல முன்னணி தலைவர்கள் இருந்தனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில், போட்டியிலேயே இல்லாத புதிய நபரை, தலைவராக கட்சி மேலிடம் நியமித்துள்ளது. தலித் பிரிவை சேர்ந்த அவரின் தேர்வை, நீங்கள் குறை சொன்னால், ஜாதி அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாவோம் என்ற அச்சத்தில் தான், போட்டியில் நான் இருந்ததில்லை என, பவ்யமாக கூறுகிறீர்களோ என்ற, 'டவுட்' கிளம்புது.

தி.மு.க.,வில் சேர்ந்துள்ள, தங்க தமிழ்செல்வன்: 'தமிழகத்தில் இரு பெரும் தலைவர்கள் மறைந்து விட்டதால், அரசியலில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை; வெற்றிடம் உள்ளது' என்று ரஜினிகாந்த் சொல்கிறார். ஆனால், தி.மு.க.,வில் அப்படி ஒரு வெற்றிடம் இல்லை. தற்போது உள்ள சூழலில், மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல், தமிழகத்தில், தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க.,வில் தான், ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை.

'டவுட்' தனபாலு: அ.தி.மு.க.,விலும், அதன் பின், தினகரனின், அ.ம.மு.க.,விலும் நீங்கள் இருந்த போது, அடிக்கடி, 'டிவி'களில் தோன்றிய உங்களை, தி.மு.க.,வில் சேர்ந்த பிறகு காண முடியவில்லையே... புதிய கட்சி உத்தரவால், அமுக்கி வாசிக்கிறீர்களோ என்ற, 'டவுட்' வருது. அதுபோல, ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன், கனிமொழி படங்கள், பேட்டிகள் தான் ஊடகங்களில் வெளியாகும்; பிறருக்கு தடையோ என்ற, 'டவுட்டும்' வருது.

பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பின் போது, கேட்கப்படும் வினாக்கள் அனைத்திற்கும் விடையளிக்க கட்டாயம் இல்லை; எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. எனவே, இனியும், பொய்யான தகவல்களைக் கூறி, மக்களை அச்சுறுத்த வேண்டாம்.

'டவுட்' தனபாலு: சட்டசபை தேர்தலுக்கு இன்னும், ஓராண்டு மேல் உள்ளது. அதுவரை, எதிர்ப்பை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக, 'குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க வேண்டாம்; மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம்' என, ஒரு சாராரை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மீண்டும் கொம்பு சீவி விட்டுள்ளார். அதற்குத் தான், நீங்கள், இப்படி பதிலடி கொடுக்கிறீர்களோ என்பதில் 'டவுட்'டே இல்லை!

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: ரஜினிகாந்த் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்பது, புதிய செய்தியே அல்ல. பல மாநிலங்களில் நடைமுறையில் இருந்தது தான்; இருப்பது தான். அதே நேரத்தில், ரசிகர்களுக்கு சில செய்திகளைச் சொல்லியிருக்கிறார். அது, அவர்களுக்குப் புரிந்ததா என, தெரியவில்லை. எனக்கு எதுவும் புரியவில்லை.

'டவுட்' தனபாலு: 'நாட்டில் அமைதி நிலவக் கூடாது; தொழிற்சாலைகளில் பிரச்னையின்றி, உற்பத்தி நடக்கக் கூடாது; விவசாயிகள், அமைதியாக விவசாயத்தை மட்டும் பார்க்கக் கூடாது என்பன போன்ற, 'உயரிய' கொள்கைகளை கொண்ட கம்யூ.,க்களுக்கு, ரஜினியின் தெளிவான பேச்சு, புரியாமல் தான் போயிருக்கும்' என, மக்கள் பேசிக் கொள்கின்றனர். அவரின் பேச்சில், மக்களுக்கு, 'டவுட்'டே இல்லை என்பது மட்டும் உறுதி!

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: தேசிய மக்கள்தொகை பதிவேடு விவகாரத்தில் சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அச்சத்தை ஏற்படுத்தாமல், உண்மைகளை மக்களுக்கு சொல்லுங்கள். அமைதி மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், பதற்றத்தை உருவாக்க வேண்டாம். சட்டசபைக்கு உள்ளே ஒன்றை பேசிவிட்டு, வெளியே சென்று, வேறு மாதிரியாக பேசி, பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்.

'டவுட்' தனபாலு: அரசியல் லாபத்திற்காகத் தான், எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தை கிளப்பி விடுகின்றன என்பதை நடுநிலையாளர்கள் பல முறை கூறிய பிறகும், சிறுபான்மையினரில் சிலர், இன்னமும் மாறாமல் உள்ளது தான், போராட்டம் தொடரும் பின்னணி குறித்து, பல விதமான, 'டவுட்'டுகளை கிளப்புகிறது!

இயக்குனர் பாரதிராஜா: தமிழன் தான், தமிழகத்தை ஆட்சி செய்ய சிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, அரசியலாக அல்லாமல், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், நன்மை பயக்கும். அவரின், 'நாணய அரசியலில்' முதல் பக்கத்திலேயே, ஓர் தமிழனை, 'அரசனாக' ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்றது, அவரின் மனிதத்தை காட்டியது. இதனால், ரஜினியை அற்புத மனிதனாக பார்க்கிறேன்.

'டவுட்' தனபாலு: அந்த செய்தியாளர் சந்திப்பில், ரஜினி மட்டும், 'நான் தான் முதல்வர் ஆவேன்' என அறிவித்திருந்தால், முதல் ஆளாக போர்க்கொடி துாக்குவது நீங்களாகத் தான் இருக்கும். இப்போது, நண்பர் ரஜினி என கூறும் நீங்கள், கன்னடன், பிற மாநிலத்தவன், தமிழன் இல்லை என பேசியதை, தமிழக மக்கள் மறந்திருந்தாலும், ரஜினி மறக்கவில்லை என்பது, அவரின் பேட்டியில், 'டவுட்' இல்லாமல் தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மார்-202019:48:39 IST Report Abuse
theruvasagan எம்ஜியார் ஜெயலலிதா இவர்களை தமிழர்கள் இல்லை என்று இந்த பச்சை தமிழர்கள் இல்லையில்லை இந்த கொச்சைத் தமிழர்கள் எத்தனை தடவை கூவியிருப்பார்கள். ஆனால் அவர்களை எத்தனை முறை முதல்வராக தமிழ்நாட்டு வாக்காளர்கள் வாக்களித்து இவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்கள். இதுதான் இவங்க பேச்சுக்கு ஜனங்கள் கொடுத்த மரியாதை. இது வருங்காலத்திலும் தொடரும் என்பதே நிதர்சனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X