சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

உயர் நீதிமன்ற உத்தரவு அமலாகணும்!

Added : மார் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
உயர் நீதிமன்ற உத்தரவு அமலாகணும்!

கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: பள்ளி வாசல், சர்ச் நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகள், இஸ்லாம், கிறிஸ்துவம் மத நம்பிக்கைகளை போற்றுபவர்களாகத் தான் இருப்பர். மதியம், மாலை தொழுகை நேரங்களில், முஸ்லிம்கள், வேறு எந்த வேலையையும் உதறி விடுவர். இறை வழிபாட்டில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். ஹிந்து அறநிலையத் துறையில் உள்ள கோவில் பணியாளர்களில், தி.க., கம்யூனிஸ்ட், நாத்திகர்களும் இருக்கின்றனர்.

கடந்த, 1967க்கு பின், நாத்திகர்களும் அறங்காவலர்கள் ஆயினர். அய்யப்பன், முருகனை கேலி செய்தவர்கள், திருக்கோவில் பணியாளர்கள் ஆயினர். சுவாமி நகைகள், திடீரென மாயமாகின. இந்நிலையைத் தடுக்க, 'அறநிலையத்துறை ஆணையர் அந்தஸ்து வரை உள்ள அதிகாரிகள், 'ஹிந்து சமய நம்பிக்கைகளை ஏற்கிறோம்' என, உறுதி மெழி அளிக்க வேண்டும். உறுதி மொழி அளிக்கத் தவறுபவர்கள், பணி பறிக்கப்படும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. மத நம்பிக்கை உள்ளவன், கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்க மாட்டான் என, கோர்ட் நம்புகிறது. கறுப்பு சட்டைக்காரர்கள் இனி, கோவில் சொத்துக்களை பகிரங்கமாக அனுபவிக்க முடியாது.

ஹிந்து மத கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ள அறநிலையத்துறை பணியாளர்கள், அதிகாரிகள், சம்பிரதாயத்தை பின்பற்றுவர். அன்னதானம், கார் ஸ்டாண்டு, பூஜை பொருட்கள் கொள்முதல், பணியாளர் தேர்வு, சம்பளம் இவற்றில் ஊழல் செய்ய மாட்டார்கள். உயர் நீதிமன்ற உத்தரவை, இரும்புக் கரத்துடன் அமல்படுத்தினால், கோவில்கள் சுபிட்சமாகும்.


விவசாயத்தை மேம்படுத்த ஆர்வம் காட்டணும்!


சீனி. சேதுராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின், நெற்களஞ்சியமான, 'நஞ்சையும், புஞ்சையும்' கொஞ்சி விளையாடிய, காவிரி, 'டெல்டா' பகுதியை விவசாய பாதுகாக்கப்பட்ட மண்டலமாக, தமிழக அரசு அறிவித்திருப்பது, வரவேற்கத்தக்கது. இதன் வாயிலாக, விவசாயத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். விவசாய தொழிலை நம்பியுள்ளோர் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் பயன் அடைவர்!

இத்தருணத்தில், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கூடுதல் விலை கொடுக்க, அரசு முன் வர வேண்டும். இயற்கையால் பாதிப்பு ஏற்படும் போது, பயிர் பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக பயன் பெறும் வகையிலும், அரசு செயல்பட வேண்டும். அதிக மகசூல் தரும் விதைகளை, விவசாயிகளுக்கு கணிசமான விலையில் வழங்கி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். அப்படி செய்தால், காவிரி டெல்டா பகுதி சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயத்திற்கு ஏற்ற, நீர் வளம், மண் வளம், உழைக்கக் கூடிய மக்கள் எல்லாம் அமைந்த பகுதி, காவிரி டெல்டா பகுதி. இதை, வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, சால பொருத்தம்!

விஞ்ஞான உலகில், காகிதத்தை பதிவிறக்கம் செய்ய முடியும். உணவு பொருள்களை பதிவிறக்கம் செய்ய முடியாது. நிலத்தில் விளைவித்து தான் உற்பத்தி செய்ய முடியும். இன்று, மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், உணவு உற்பத்தியை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்த, தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும்!


முருக பக்தர்கள் மனம் மகிழ...


எஸ்.குலசேகரன், துாத்துக்குடியிலிருந்து எழுதுகிறார்: திருச்செந்துார் முருகன் கோவிலில், முடிக்க வேண்டிய பணிகள் பல உள்ளன. திருப்பதி பெருமாளுக்கு லட்டும், பழனி முருகனுக்கு பஞ்சாமிர்தமும், மதுரை மீனாட்சிக்கு குங்குமம் மற்றும் லட்டும், இலவச பிரசாதங்களாக வழங்கப்படுகின்றன. அதேபோல, திருச்செந்துார் முருகனுக்கு அன்றும், இன்றும் பிரதானமான, இலை விபூதி தான் பிரசாதம். ஆனால், அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை; சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம், அனைத்து பக்தர்களுக்கும், தினசரி இலவசமாக கிடைக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் இலை, அதிக அளவில் கிடைக்க, கோவிலுக்குச் சொந்தமான இடங்களில், அதற்குரிய மரம் வளர்க்கப்பட வேண்டும்.

கோவிலுக்கு வரும் வசதி படைத்தவர்களை, 'முதலாளி' என்றும், ஏழை மக்களை ஒருமையிலும் அழைப்பது, அர்ச்சகர்கள் வழக்கத்தில் உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும். கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் விஷயத்திலும், அலட்சியம் காட்டப்படுகிறது. இங்கு நடக்கும் சூர சம்ஹார விழா, உலகப் பிரசித்தி பெற்றது. இதற்கு இன்னும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய, அரசு முன்வர வேண்டும். நடந்தால், முருக பக்தர்கள் மனம் மகிழ்வர்!


நீதி கிடைக்க தாமதமாவது வேதனை!


ஏ.தாஜ்மா மணாளன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: டில்லியில் நடந்தேறிய, 'நிர்பயா' வழக்கில், குற்றவாளிகள் இன்னமும் துாக்கில் போடப்படவில்லை. ஒவ்வொருவராக, மாற்றி மாற்றி, கோர்ட்களில் மனு போட்ட வண்ணம் உள்ளனர். பொதுவாக, ஒரு குற்றத்தில் பலர் ஈடுபட்டிருந்தால், அதில் யாரேனும் தலைமறைவாகி இருப்பின், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீது, நீதிமன்ற நடவடிக்கைகள் பாயும்.

தலைமறைவானவர்கள் கிடைக்கும் வரை, நீதிமன்ற நடவடிக்கை காத்திருப்பதில்லை. கொலைக் குற்றத்தில், ஒன்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருப்பின், மேலே கண்ட குற்றவியல் நடைமுறைப்படி, அவரவருக்கான தண்டனை, அவரவருக்கு உரித்தான கால கட்டத்தில் வழங்கப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது. காணாமல் போன ஒரு குற்றவாளி பிடிபடாவிட்டால், மற்றவர்களுக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதில்லை. நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் தண்டனை வழங்கப்பட்டு, மேல்முறையீடு, கருணை மனு, சீராய்வு மனு, நிவர்த்தி மனு, கருணை மனு எல்லாம் ஒவ்வொருவராக முடித்த நபர்களுக்கு, அந்தந்த காலக் கெடு முடிந்த பின், துாக்கு தண்டனையை, தனித்தனியாக நிறைவேற்றியிருக்க வேண்டும்.

தற்போது, 'பஞ்சாப் ஜெயில் மானுவல்' என்ற தண்டனை சட்டப்படி, அது இந்தியா முழுமைக்கும் நடைமுறையில் உள்ளது. நுாறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்ப டக் கூடாது என்பதே, இந்திய தண்டனை சட்டத்தின் நோக்கம். அதற்காக, நீதித்துறையை கேலிக் கூத்து ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் போக்கை, நாம் ஒருபோதும் அனுமதிக்கலாகாது.

கடந்த, 2009 பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரசைச் சேர்ந்த, ப.சிதம்பரம் சிறிய வித்தியாசத்தில் ஜெயித்ததை எதிர்த்து, அவரிடம் தோற்ற ராஜ கண்ணப்பன் தொடுத்த வழக்கு, இன்னமும் நடந்து கொண்டிருப்பது தான் வேடிக்கை. நம் நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும், நீதி பரிபாலனத்தில் இத்தகைய கால தாமதங்கள் களையப்படவில்லை என்பது, வேதனை தான்.


வாரச்சந்தைகள் எண்ணிக்கை பெருகட்டும்!


கே.சூர்யா, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கிராம சந்தைகளில், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் என, கடந்த காலங்களில் தவற விட்டவற்றை மீண்டும், மக்கள் தேடத் துவங்கியிருப்பது, மகிழ்ச்சிக்குரிய நல்ல செய்தி; இந்த வகையில் பார்த்தால், 'புதியன கழிதலும், பழையன நுழைதலும்' நல்லதொரு எதிர்காலத்தின் அறிகுறிகளாக தெரிகின்றன. இன்றைய இளைய தலைமுறையினருக்கு, சந்தை என்றால் என்னவென்று தெரியாது. உழவர் சந்தையை தெரிந்திருப்பர். கிராமத்து சந்தைகளை, 16வயதினிலே போன்ற பழைய படங்களில் வேண்டுமானால், மக்கள் பார்த்திருப்பர்.

ஆனால், ஜி.எஸ்.டி., வருகைக்குப் பின், பல்வேறு கிராமங்களில் மூடப்பட்ட வாரச்சந்தைகள் மீண்டும் பொலிவுடன் வரத் துவங்கி விட்டன. அந்தக் காலத்தில் கூடைகளுடன் சென்ற பெண்கள் எல்லாம், இன்று, துணிப்பைகளோடு வாரச் சந்தைக்கு வரத் துவங்கி விட்டனர். வாரத்தில், ஒரு நாள் மதியம், 2:00 லிருந்து, இரவு 9:00 வரை, கிராமத்து சந்தைகளில் வரும் கூட்டம், திருவிழா கூட்டம் போல் வந்து செல்கிறது. உற்பத்தியாளர் இங்கு நேரடியாக பொருட்களை, நுகர்வோருக்கு விற்பதால் விலை மலிவாக உள்ளது. கடை வாடகை, மின்சார கட்டணம், போக்குவரத்து கட்டணம், கடை பராமரிப்பு செலவுகள் இவற்றை, 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்'களோடு ஒப்பிடுகையில், சந்தையில் உள்ள விற்பனை கடைகளுக்கு, மிக மிக சொற்பமான தொகையே செலவு செய்யப்படுகிறது.

நகர்ப்புற, 'டிபார்ட்மென்ட் ஸ்டோர்'களை விட, குறைவான விலைக்கு காய்கறிகளிலிருந்து, மளிகை சாமான்கள் வரை, எல்லா பொருட்களும், கிராம சந்தைகளில் கிடைப்பதே, இதற்கு காரணம். ஜி.எஸ்.டி., போன்ற பிரச்னைகளும் இல்லாத காரணத்தால், வியாபாரிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது. விவசாயிகள் வாரச்சந்தைகளில் நேரில், காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் விற்பனை செய்வதால், நுகர்வோர் விரும்பி வாங்கிச் செல்ல வசதியாக உள்ளது. மக்களின் மகிழ்ச்சிக்காக, கிராமங்களின் சந்தைகள் எண்ணிக்கை பெருகட்டும்!


கொஞ்சம் கவனம் செலுத்துங்களேன்!


ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: 'மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்' என்ற பெயரில், 1929ல் துவங்கப்பட்ட, பணியாளர் தேர்வாணையம், 1970ல், 'தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக துவங்கப்பட்ட பணியாளர் தேர்வாணையம் என்ற பெருமையை பெற்றிருந்த, டி.என்.பி. எஸ்.சி., இன்று சந்தி சிரிக்குமளவுக்கு தரம் தாழ்ந்து விட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு எண், 320ல், பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரம் மற்றும் கடமைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்துவது. வெற்றி பெற்றவர்களுக்கு உரிய பணியிடங்களை வழங்குவது. பணியாளர்களுக்கான நெறிமுறைகளை வகுப்பது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் பணி இட மாற்றம் வழங்குவது போன்ற அனைத்து விஷயங்களிலும், பணியாளர் தேர்வாணையம் தான், அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இங்கு நடப்பது என்ன... தேர்வு நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு, 'கவுன்சிலிங்' நடத்துவதோடு, தேர்வாணையத்தின் கடமை முடிந்து விடுகிறது; மற்ற அதிகாரங்கள், ஆட்சியாளர்களின் கைக்கு மாறி விடுகின்றன.

தங்கள் சொந்த ஊருக்கருகில் பணி வேண்டுமானால், அதற்கு ஒரு, 'ரேட்' மற்றும் இட மாறுதல் வேண்டுமானால் அதற்கு தனி, 'ரேட்' என, லஞ்சம் தலை விரித்தாடுகிறது. மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பணிக்கு, 25 லட்சம், கல்லுாரி ஆசிரியர் பணிக்கு, 40 லட்சம் ரூபாய் விலை பேசப்படுகிறது. இப்படி, குறுக்கு வழியில் வேலைவாய்ப்பை பெறும் ஆசிரியர்கள், மனசாட்சியோடு எப்படி பணியாற்றுவர்? தரமான கல்வி எங்கிருந்து கிடைக்கும்? ஒரு காலத்தில், அரசு பணிக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களது பதிவு மூப்பு அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைக்கு போட்டியாளர்களின் பதிவு எண் அடங்கிய பட்டியல் அனுப்பி வைக்கப்படும். ஆனால், அதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. இப்போது, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பட்டப்படிப்பை முடித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கின்றனர். மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது புரியாத புதிராக இருக்கிறது. முதல்வர், இ.பி.எஸ்., இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், அடுத்த தேர்தலில் ஓட்டை அள்ளலாம்!


மிஸ்டர் ஸ்டாலின்... வேண்டாம் அபத்தம்!


ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'திராவிடக் கொள்கைகளை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத ஒரே தலைவர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான். மத்திய அரசு, தன் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முடியாத அளவிற்கு, அரணாக நிற்பவரும் அவர் தான்' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அரை நுாற்றாண்டிற்கு மேலாக, தமிழக அரசியலை குடும்ப ஆதிக்கத்தால் தரைமட்டமாக்கி வரும், தி.மு.க.,வின் செயலை திராவிடக் கொள்கை என்கிறாரா?

மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதை, திராவிடக் கொள்கை என்கிறாரா? வரும், 2021ல் நடக்க உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு வியூகம் வகுக்க, வட மாநிலத்தவரான பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக்கியதை, திராவிடக் கொள்கை என்கிறாரா? அவரது தந்தை கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? நுாறு பிரசாந்த் கிஷோர் வந்தாலும், கருணாநிதியின் அறிவுத் திறனுக்கு ஈடாகாது. தமிழக பாரம்பரியம் மற்றும் கலாசாரத்திற்கு துளியும் பொருத்தமில்லாத போராட்டங்களை வடிவமைத்துக் கொடுக்க, வட மாநிலத்தவரை நாடுவது, வெட்கக் கேடில்லையா! மண்ணுக்கேற்ற வியூகம் வகுக்கத் தெரியாத காரணத்தால் தான், தேசியக் கட்சியான, காங்கிரஸ் இன்று நாடு முழுதும், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி நிற்கிறது.

கீழ்மட்ட, தி.மு.க., தொண்டனின் கருத்தை, காது கொடுத்து கேட்டீர்களா மிஸ்டர் ஸ்டாலின்? வேண்டாம் இந்த அபத்தம்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-மார்-202009:11:51 IST Report Abuse
D.Ambujavalli நான் 1954 இல் ம்ப்ஸ்க் எழுதினேன் அப்பொழுதெல்லாம் Admn , Judicial என்று இரண்டு ஆப்ஷன்கள் இருந்தன. நான் இரண்டையும் டிக் செய்திருந்தேன். சரியாக மூன்றாம் மாதம் இரண்டு பிரிவுக்கும் தேர்வு செய்து, என் விருப்பமான துறையை தேர்ந்தெடுத்தேன். அதற்குள் அஞ்சல் தேர்விலும் தேர்ந்தெடுக்கப்படவே, அங்கு பணியில் அமர்ந்தேன். தகுதி, மதிப்பெண் பேசிய காலம் அது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X