தமிழகம் மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி, உலகையே, 'கொரோனா' என்ற மூன்றெழுத்து வைரஸ் தாக்கம், பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.
வெறும் பீதி என்று புறக்கணிக்க முடியாத அளவுக்கு, அந்த நோய் தாக்கத்தால், நாளுக்கு நாள், பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்போது, நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் போது, பலியானோர் எண்ணிக்கை, உலகம் முழுவதும், 6,000த்தை தாண்டி இருக்கக் கூடும்.
உலகின் வல்லரசு நாடுகளையே படாதபாடு படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம், ஆண்டவன் புண்ணியத்தால், நம் நாட்டில், சற்று குறைவு தான். சீனாவுக்கு அண்டை நாடாக இருந்த போதிலும், இரு நாட்டு மக்கள் புழக்கம் வெகு தொலைவு என்பதால், சீனாவை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த கொடிய பிரச்னை, இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லை.அதே நேரத்தில், 'சீனாவையே அலற அடிக்கும் இந்த நோய், இந்தியாவுக்கு அதே வீச்சில் வந்தால், கால்வாசி மக்கள்தொகை காலியாகி விடும்; சட்டம் - ஒழுங்கு கெட்டு, பிரளயம் ஏற்பட்டது போன்ற நிலைமை உருவாகி விடும்' என, சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
சீனாவில், ராணுவ ஆட்சி நடக்கிறது. 'வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக் கூடாது' என, அந்நாட்டு நிர்வாகம் உத்தரவிட்டால், அப்படியே கேட்டு நடக்கின்றனர். அதுபோல, வளர்ந்த நாடான இத்தாலியில், 'மக்கள் வெளியே நடமாட வேண்டாம்' என, அரசு கேட்டுக் கொண்டதும், வீடுகளுக்குள் மக்கள் முடங்கினர்.ஆனால், நம் ஊரில் இது சாத்தியம் இல்லை.
பிரதமர் மோடி, இப்படியொரு உத்தரவை பிறப்பித்தால், அடுத்த நிமிடம், காங்., ராகுல், தன் கட்சியினருடன் பேரணி கிளம்பி விடுவார். தமிழகத்தில், தி.மு.க., பெரிய கூட்டத்தை சேர்த்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து விடும்.ஜனநாயகம், நம் நாட்டில் இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.எனவே, கொரோனா மட்டுமின்றி, எதிர்காலத்தில், அதுபோன்ற நோய் தொற்று கிருமிகள், நம் நாட்டில் உருவாகாமல் தடுக்கவும், பரவாமல் இருக்கவும், உணவு மற்றும் சுகாதார விஷயங்களில் நாம் கவனமாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
ஒவ்வோர், ஏ.டி.எம்., மையத்திலும் பாதுகாவலர் இருக்கிறார். ஆனால், அவர், அங்கு குவிந்திருக்கும் காகித துண்டுகளை எடுத்து, குப்பை தொட்டியில் கூட போட மாட்டார். 24 மணி நேரமும் சும்மாவே இருக்கும் அவர் கையில், கிருமி நாசினியை கொடுத்து, பணம் எடுக்க வருவோர் தொடும் எண் பலகையை அவ்வப்போது துடைக்க, வங்கி நிர்வாகம் உத்தரவிடலாம். இதனால், ஒருவருக்கொருவர் கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
ரயிலில் சாதாரண வகுப்பு தவிர்த்து, 'ஏசி' வகுப்பு பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டிக்கும் ஓர் உதவியாளரை, ரயில்வே துறை நியமித்துள்ளது. தலையணை, படுக்கையை எடுத்து, பயணியருக்கு வழங்குவதுடன், அவர்களின் பணி முடிந்து விடுகிறது; நான்கைந்து ஊழியர்களாக சேர்ந்து, கும்மாளம் தான் அடிக்கின்றனர்.அதற்குப் பதில், அவர்கள் கையில் கிருமிநாசினி மருந்து பாட்டிலை கொடுத்து, ஒவ்வொரு முறை, கழிவறையை பயணியர் பயன்படுத்தி வந்ததும், அவர்கள் கையில் தெளித்து, சுத்தமாக இருக்கச் செய்யலாம். அல்லது கழிப்பறை, பயணியர் இருக்கை, படுக்கையை, அவ்வப்போது சுத்தம் செய்ய அவர்களுக்கு உத்தரவிடலாம்.ஆனால், இதை செய்ய உத்தரவிட்டால், தொழிற்சங்கங்கள் கொடி பிடித்து, ரயில்களை இயங்க விடாமல் செய்து விடும்; அந்த அளவுக்குத் தான், நம் நாட்டில் நிலைமை உள்ளது.
அதுபோல, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்திருக்கும் குப்பை, கழிவு நீர் போன்றவை தான், கொரோனாவை விட, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. அவற்றை அகற்றி, மக்கள் கூடும் இடங்களில், முழு அளவிலான சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மரியாதை காரணமாக, கோவில்கள், வழிபாட்டுத்தளங்கள், பெரியோர்கள் இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது, செருப்பை கழற்றிச் செல்கிறோம். அதை தவிர்க்கலாம். அதற்கு முன், செருப்பை சுத்தமாக வைத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும். செருப்பு அணியக் கூடாத இடங்களில், 'சாக்ஸ்' போன்ற காலுறைகளை அணிய பழகிக் கொள்ளலாம்.
'இதெல்லாம், பின்தங்கிய, முன்னேறிக் கொண்டிருக்கும், நம் நாட்டிற்கு சரிப்படாது' என நீங்கள் சொன்னால், கொரோனா போன்ற பாதிப்பு தீவிரமானால், அதிக பலி கொடுக்கும் நாடாக, நம் நாடு தான் விளங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஏனெனில், இங்கு சுகாதார சீர்கேடு, சுத்தமின்மை, ஆரோக்கிய அலட்சியம் அதிகம்.
சாலையோரங்களில் உணவகங்கள் இயங்குகின்றன; ஏராளமானோர் சாப்பிடுகின்றனர். பெயரளவுக்கு ஏதாவது ஓர் உரிமத்தை வாங்கி நடத்தும் அதன் உரிமையாளர்களுக்கு, சுத்தம், சுகாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. முழு கையையும் விட்டு, தேசை மாவு பிசைவார்; கையை கழுவாமல், உணவு பண்டங்களை கையாள்வர்; உணவு பரிமாறும் பாத்திரங்களில், அறவே சுத்தம் இருக்காது.இத்தகையோரை, திருந்துங்கள்; திருத்திக் கொள்ளுங்கள் என்றால், கேட்க மாட்டார்கள்.
அத்தகையோரை, நோய் பரப்பும் தொழிலில் இருந்து அப்புறப்படுத்தி, அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படும் வரை, உணவகம் நடத்த விடாமல் தடுப்பது தான் சரியானதாக இருக்கும்.வீட்டில், அலுவலகத்தில் இருக்கும் போது கூட, சிலர் எழுந்து சென்று, 'வாஷ் பேஷினில்' துப்பவோ, மூக்கை சீந்தவோ மாட்டார்கள். இருக்கையில் இருந்தபடி, கர்சீப் அல்லது இருக்கைக்கு ஓரமாக திரும்பி, மூக்கை சீந்திக் கொள்கின்றனர்.
இதனால், அவரின் நோய் கிருமி, அங்கிருக்கும் அனைவருக்கும் பரவும்.வீட்டை விட்டு வெளியே வந்தால், பலருக்கும், வாயில் எச்சில் ஊறி விடுகிறது. முன், பின் பார்ப்பதெல்லாம் கிடையாது. புளிச், புளிச் என துப்பி, அந்த இடத்தையே, நோய் கிருமியின் விளை நிலைமாக மாற்றி விடுகின்றனர். சாலையோரங்களில் ஆட்டோவை நிறுத்தி, கால்களை ஆட்டோவுக்கு வெளியே நீட்டி, வாயில் இருக்கும் புகையிலை எச்சிலை, நீண்ட துாரத்திற்கு துப்புவது, நம்மவர்களில் பெரும்பாலானோர் பழக்கம்.இதனால், அவர்கள் நிற்கும், புழங்கும் பகுதியே, நோய்களின் புகலிடமாக மாறி விடுகிறது என்பதை, அவர்கள் அறிவது இல்லை. இத்தகையோர் திருந்த, அரசின் சுகாதார பணியாளர்கள், அத்தகைய நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இந்தப் பணியை, அரசு மட்டுமின்றி, அரசின் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் அரசியல் கட்சிகளும், அவற்றின் நிர்வாகிகளும் மேற்கொள்ள வேண்டும்.
இன்னும் பல மருத்துவமனைகளில், நோயாளிகளை டாக்டர் பரிசோதிக்கும் அறைக்குள், செருப்பு அணிந்து நோயாளிகள் செல்ல, டாக்டர்கள் அனுமதிப்பதில்லை. பல ரத்த பரிசோதனைக் கூடங்களில், வெறும் கால்களுடன் தான், பரிசோதனைக்கு வருவோர் நடக்க விடப்படுகின்றனர்.சுத்தமில்லாத கால்களில் இருந்து பரவும் நோய் கிருமிகள், சுத்தமான கால்கள் வழியாக எளிதாக உடலுக்குள் சென்று, சுத்தமாக இருப்பவருக்கும் நோய் பரவ வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.மருத்துவமனைகளை ஒட்டி இருக்கும் மருந்து கடைகளுக்கு, நோயாளிகள் அனைவரும் சென்று மருந்து, மாத்திரைகள் வாங்குகின்றனர். ஆனாலும், அந்த மருந்துக் கடையில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும், பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. மருந்துக் கடையின் மேஜையில் கை வைத்து, அந்த கையை, கண், மூக்கு, காது, வாய் போன்ற உடல் பாகங்களில் நுழைக்கும் அப்பாவி மக்கள் நிறைந்தது நம் ஊர். இங்கு, உச்சகட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.
இல்லையேல், கொரோனா போன்ற நோய் கிருமிகள் வேகமாக பரவினால், ஹாலிவுட் படங்களில் வரும் காட்சிகளையும் மிஞ்சி, குழப்பங்கள், கலவரங்கள் அதிகமாக நடந்து விடும்.எனவே, தேவையில்லாமல் வெறும் காலுடன் நடக்க வேண்டாம்; கண்ட இடத்திலும் எச்சில் துப்ப வேண்டாம்; பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில், மிகுந்த சுகாதார எச்சரிக்கை உணர்வு அவசியம்.ஆகவே, வெளியே சென்று வந்தால், கைகளை சோப்பு அல்லது ஆல்கஹால் அடங்கிய கிருமி நாசினி திரவங்களைக் கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்யுங்கள்.தும்மல் அல்லது இருமல் வரும்போது, சளித்துகள்கள் வெளியே தெறிக்காமல் இருக்க, வாயையும், மூக்கையும் கைக்குட்டையால் அல்லது மடக்கிய முழங்கை கொண்டு பொத்திக் கொள்ளுங்கள்.
ஜலதோஷம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில், நெருக்கமாக இருக்க வேண்டாம். முட்டை மற்றும் இறைச்சியை நன்கு வேகவைத்து உண்ணுங்கள்.வன விலங்குகள் மற்றும் கோழி போன்ற பண்ணை விலங்குகளின் அருகே, பாதுகாப்பு இல்லாமல் நெருங்கி செல்வதைத் தவிர்க்க வேண்டும். நிலைமை சீராகும் வரை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் ஆனாலும், தனியார் மருத்துவமனையில், 'ஏசி' அறையில், 'டிவி' பார்த்துக் கொண்டு சிகிச்சை பெற முடியாது. கொரோனா பாதிப்பு உறுதியானால், அரசு மருத்துவமனைகளில் ஒதுக்குபுறமான இடங்களில், பல அடக்கு பாதுகாப்பு மற்றும் தடுப்புகளுக்கு அப்பால், தனிமையாகத் தான் சிகிச்சை பெற வேண்டி வரும்.இதை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால், பொது இடங்களை சுகாதாரமாக பராமரிப்போம்; பொது இடங்களில் சுத்தமாக இருக்க முயற்சிப்போம்.
சிலருக்கு எதற்கெடுத்தாலும், கண்களை கசக்குவது, மூக்கை நோண்டுவது, வாயில் விரலை வைப்பது, நகங்களை கடிப்பது, முகத்தை தாங்கி பிடிப்பது, பிறருடன் ஒட்டி உரவாடுவது என்பன போன்ற பழக்கங்கள் இருக்கும். கொரோனா வைரஸ் விபரீதம் முடியும் வரை, அந்த பழக்கங்களை மூட்டை கட்டி வையுங்கள்.
ரூபாய் நோட்டுகளை ஜாக்கெட்டின் உள் பகுதியில் வைக்கும் பழக்கம், பல பெண்களுக்கு உள்ளது. அதை தவிர்க்கப் பாருங்கள். பலர் கைபட்டு, பல நோய்களை சுமந்து வரும் கரன்சி நோட்டுகளை, மென்மையாக தொட்டு, அப்படியே வாங்கி, பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை, சுகாதாரமில்லாத இடங்களில் தண்ணீர் அருந்தவோ, உணவு சாப்பிடவோ வேண்டாம்.உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவம் மற்றும் சுகாதார அலுவலர்கள், தயவு தாட்சண்யம் இன்றி, நேர்மையாக, 100 சதவீத சுத்தம், சுகாதாரத்தை பராமரிக்க, பணியாற்ற வேண்டும். உங்களை நம்பித் தான், 120 கோடி மக்களும் உள்ளனர். சுகாதாரமாக வாழ தெரியாதவர்கள், இனிமேலாவது கற்றுக் கொள்வோம். கொரோனா போன்ற எந்த வைரசும், எங்களை தாக்காது என்ற நிலைக்கு, ஆரோக்கிய சமுதாயத்தை படைப்போம். வாருங்கள்!
டாக்டர் டி.ராஜேந்திரன் எம்.டி.,
தொடர்புக்கு:
இ-மெயில்:rajt1960@gmail.com