சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

பட்டையைக் கிளப்புங்கள் ரஜினி!

Added : மார் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பட்டையைக் கிளப்புங்கள் ரஜினி!

வசந்த ராஜன், புதுச்சேரியிலிருந்து எழுதிய, 'இ - மெயில்' கடிதம்:
நேற்று வரை, 'அரசியலில் ரஜினி நுழைந்து, என்ன பிரமாதமாய் கிழித்து விடப் போகிறார்' என்ற நினைப்பில், முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தேன். ஆனால், நேற்று முன்தினம் அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் படித்த பிறகு, இப்படி ஒரு மாற்றம் நிச்சயம் வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அவருடைய ரசிகர்களுக்கு இது பிடிக்கிறதோ, இல்லையோ... இதுவரை ஓட்டு போடாமல் தவிர்த்த மக்கள் அனைவரும், இவர் பின்னே நிற்கப் போவது நிச்சயம். அரசியல்வாதிகள் மீதான வெறுப்பில் தானே, இவர்கள் அனைவரும் இப்படி ஒதுங்கினர்!

வரும், 2021 சட்டசபை தேர்தலில், மக்கள், அலை அலையாய் ஓட்டுச் சாவடி முன் திரளப் போகின்றனர் என்பதைப் பார்க்கப் போகிறோம்! 'நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவது ஒன்றே குறிக்கோள்' என்று அவர் நினைப்பதில் தவறில்லை. எந்த நாட்டிலுமே, புரட்சி வெடித்து தான், மாற்றத்தைக் கொண்டு வர முடியும். நான் எந்த நடிகருக்கும் ரசிகன் அல்ல. ரஜினியுடைய படத்தைப் பார்ப்பேன்; அனுபவிப்பேன்; சிரிப்பேன்... அவ்வளவு தான்!

ஆனால், அரசியல் ரீதியாக, மாற்றத்தைக் கொண்டு வர அவர் முனைந்தால், என் போன்ற, வெளியாட்களும், நிச்சயம் ஆதரவு தருவோம். பட்டையைக் கிளப்புங்கள் ரஜினி!

தமிழகம் முழுக்க கவனம் செலுத்துங்களேன்! வி.எம்.மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்:

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியில், 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்திற்கு, தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். இதற்காக, 565 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளார். ஓராண்டில் பயனுக்கு வரும் இதை விட, சேலம் மாவட்ட ஏரிப்பாசனம் மட்டும் நடைபெறும் பகுதி மக்களுக்கு, வேறு நல்ல செய்தி இருக்க முடியாது!

ஆனாலும், தமிழக விவசாயிகள் மனதில் ஒரு நெருடல் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.சேலம் மாவட்டத்துக்கு மட்டும், முதல்வர் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்துகிறார் என்பதே அது! தமிழகத்தில், 4,127 ஏரிகள் உள்ளன. விவசாயம், 125 லட்சம் ஏக்கரிலிருந்து, வெறும், 40 லட்சம் ஏக்கர்களாகக் குறைந்து விட்டது.

தமிழகத்தில், 17 ஆறுகள் ஓடுகின்றன. வட பெண்ணையிலிருந்து, தாமிரபரணி வரையுள்ள, 25 லட்சம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதியின்றி விவசாயம் நடைபெறவில்லை. தமிழகத்தின் மொத்த நீர் தேவை, 1,300 டி.எம்.சி., இதில், 4.35 டி.எம்.சி., நீரைத் தேக்கினாலே, 70 சதவீத நீர்த் தேவையை பூர்த்தி செய்யலாம்.

தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலிருந்தும் வாய்க்கால்களை வெட்டி ஏரி, குளம், கிணறுகளை நிரப்பலாம். நிலத்தடி நீரும் உயரும்; குடிநீர் பிரச்னையும் தீரும். வீணாகக் கடலில் கலக்கும் நீர் எவ்வளவு தெரியுமா? 1,000 டி.எம்.சி., 300 டி.எம்.சி., நீரை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். இதன் விளைவு, இன்னும், 20 ஆண்டுகளில் தண்ணீருக்காக நாம் போராடும் அபாயம் ஏற்படும். டெல்டா மாவட்டங்களை, விவசாயம் மண்டல மாக அறிவித்தால் மட்டும் போதாது; உண்மையிலேயே அங்கு விவசாயம் நடைபெற, தொடர் கண்காணிப்பை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இரட்டை வேடம் வேண்டாமே! ஆர்.பாரத்வாஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:

1962க்குப் பின், அண்ணா துரை, தன் கொள்கைகள், நடைமுறைக்கு ஒத்து வராது; யதார்த்தத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணி, பல கொள்கைகளை கைவிட்டார்.திராவிட நாடு பிரிவினை, பிராமண எதிர்ப்பு, ஹிந்து மத துவேஷம் எல்லாவற்றையும் கைவிட்டார். ராஜாஜி, ம.பொ.சி., சி.பா.ஆதித்தனார் போன்ற எதிர்தரப்பு, தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, 1967 தேர்தலில் வெற்றி பெற்றார்.

இப்போது ஸ்டாலின், எந்தவித இலக்கும் இல்லாமல், கட்சி நடத்துகிறார். இன்னும் பழைய தெய்வ எதிர்ப்பையும், பிராமண எதிர்ப்பையும் கைகொள்கிறார். தமிழகத்தில் தற்போது, ஹிந்து ஒற்றுமையையும், பிராமண இளைஞர்களின் எழுச்சியையும், கண்கூடாக பார்க்கிறோம்.முன்பைவிட ஆன்மிகம் வளர்ந்து, கோவில்களில் கூட்டம் அலை மோதுகிறது.

முன்பெல்லாம், ஈ.வெ.ரா.,வைக் கண்டாலே, பெயரை சொன்னாலே பலரும் பயப்படுவர். இப்போது, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக தளங்களில், ஈ.வெ.ரா.,வை விமர்சனம் செய்கின்றனர். இதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டாலின் சாமி கும்பிட்டால், தைரியமாகச் செய்யட்டுமே! கோவிலுக்கும் செல்வது, அர்ச்சகர்கள் தன் நெற்றியில் வைக்கும் குங்குமம், விபூதியையும் அழிப்பது என, இரட்டை வேடம் போட வேண்டாமே!

நல்ல ஆலோசகர் தேவை சோனியாவுக்கு! எம்.ஸ்ரீனிவாசன், கவரைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் விலகுவதற்கு காரணம், தலைவர் சோனியா தான்.ஒருங்கிணைந்த மாநிலமாக ஆந்திரா இருந்த போது காங்கிரஸ் ஆட்சியில், ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந்தார். அவர் மறைந்த பின், அவர் மகன், ெஜகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க, ராஜசேகர் ரெட்டி குடும்பத்தினர் விரும்பினர்.ஆனால், ரோசைய்யா மற்றும் கிரண் குமார் ரெட்டியை முதல்வர் ஆக்கினார், சோனியா. இதற்கு, சோனியாவின் ஆலோசகர்கள், அகமது படேல் மற்றும் சிதம்பரம் தான் காரணம். இப்போது, ெஜகன்மோகன் ரெட்டி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில், ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்து, மாநிலம் முழுக்க பிரசாரம் செய்து வந்தவர், ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் வேட்பாளர் களத்தில், கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகிய இருவரும் இருந்தனர். ஆனால், சோனியா ஆலோசகர்கள், அகமது படேல், குலாம்நபி ஆசாத் தலையீட்டில், கமல்நாத், முதல்வர் ஆக்கப்பட்டார்; சிந்தியா புறக்கணிக்கப்பட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் தவறான முடிவெடுத்தலால், தலைவர்களை இழக்க நேரிடுகிறது. நல்ல ஆலோசகர்களை, அருகில் வைத்துக் கொள்ளுங்கள் சோனியா!Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thomas - Al Khor,கத்தார்
16-மார்-202011:21:41 IST Report Abuse
Thomas கட்சியே தொடங்கவில்லை, அதற்கே தைரியம் இல்லை. அதற்குள் இதனை சோம்பு தூக்கலா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X