திருமங்கலம் : கொரோனா அறிகுறிகள் இருப்பதால் மதுரை, தேனி, நெல்லை மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் பணியாற்றும் பொறியாளர், மதுரை திருமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி விமான நிலையம் வழியாக வந்தார். சில நாட்களாக சளி, இருமலால் அவதிப்பட்டார். திடீரென காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டது.
நேற்று திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். பரிசோதித்த டாக்டர்கள் கொரோனா அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் மதுரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா சிறப்புக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியைச் இளைஞர் கோவையில் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த மாதம், புதிய இயந்திரத்தை நிறுவ இந்தோனேசியா சென்றார். பணி முடிந்து நேற்று ஊர் திரும்பினார். விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாததால் ஊருக்கு அனுப்பினர். கிராமத்திற்கு வந்த பின் இருமல் அதிகரித்ததால் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் இவரை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
தேனி
தேனியை சேர்ந்த 37 வயது பெண், சிகாகோவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். தேனி திரும்பிய அவருக்கு சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் இருந்தன. பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கடம்பனுாரை சேர்ந்த 30 வயது வாலிபர், எர்ணாகுளத்தில் விவசாய கூலி தொழிலாளியாக இருந்தார். சமீபத்தில் வத்தலக்குண்டு திரும்பியவர் சளி, இருமல் இருப்பதாக அரசு மருத்துவமனை வந்தார்.
பிரத்யேக ஆம்புலன்ஸ் இல்லாததால் தேனிக்கு அழைத்து வர காலதாமதமானது. இரவில் தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் 'ஸ்வாப்' டெஸ்ட், ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு நோய் பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டன. இதில் கடம்பனுார் நபருக்கு கொரோனா தொற்று இல்லாதததையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் மம்சாபுரம் கீழூர் காலனியை சேர்ந்த பெண் கேரள மாநிலம் கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கொரோனா பீதியால் மூன்று நாட்களுக்கு முன்பு மம்சாபுரம் வந்தார். அவருக்கு தலைவலி, சளி, இருமல்,காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு வந்தார். கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவர் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நெல்லையில் இருவர்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 55 வயது கூலித்தொழிலாளி கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் இருந்தார். அவருக்கு சளி,காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. எனவே அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நெல்லை மருத்துவக்கல்லுாரி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே சிகிச்சையில் இருந்த இருவர் நோய் பாதிப்பு இன்மையால் வீடு திரும்பினர்.
திரையங்குகள் மூடல்
திருநெல்வேலி மாவட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. நாங்குநேரி, கங்கைகொண்டான் செக்போஸ்ட்களில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மகளிர் திட்டம் மூலம் முககவசம் உற்பத்தி செய்ய கலெக்டர்ஷில்பா உத்தரவிட்டுஉள்ளார்.