அடிக்கப்போறாங்க பல கோடி... போலீஸ் போகுமா தேடி!| Dinamalar

'அடிக்கப்போறாங்க' பல கோடி... போலீஸ் போகுமா தேடி!

Updated : மார் 24, 2020 | Added : மார் 17, 2020
Share
ஊரெல்லாம், 'கொரோனா' வைரஸ் பீதி உருவாகி இருக்கறதுனால, சித்ராவும், மித்ராவும் நகர் வலம் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கியிருந்தனர்.அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, ''நம்மூர்ல இருக்குற எல்லா ஷாப்பிங் மால்களையும் மூடச் சொல்லி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கு. கல்யாண மண்டபம், தியேட்டர்களையும் மூடச் சொல்லி, சக அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
'அடிக்கப்போறாங்க' பல கோடி... போலீஸ் போகுமா தேடி!

ஊரெல்லாம், 'கொரோனா' வைரஸ் பீதி உருவாகி இருக்கறதுனால, சித்ராவும், மித்ராவும் நகர் வலம் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கியிருந்தனர்.அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, ''நம்மூர்ல இருக்குற எல்லா ஷாப்பிங் மால்களையும் மூடச் சொல்லி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கு. கல்யாண மண்டபம், தியேட்டர்களையும் மூடச் சொல்லி, சக அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு போட்டுருக்காரு,'' என்றாள்.

''அப்ப, கல்யாணம்?''
''அடுத்த வாரம், 72 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப் போறதை தானே கேக்கறே. சி.எம்., - டெபுடி சி.எம்., கலந்துக்கிற விழா. அழைப்பிதழ் அச்சடிச்சிட்டாங்க. ஊர் முழுக்க சுவர் விளம்பரம் எழுதுற வேலையையும் ஆரம்பிச்சிட்டாங்க. 'கொரோனா' பீதியில, விழாவை தள்ளி வைப்பாங்களான்னு தெரியலை,''

''தி.மு.க.,காரங்க மிரண்டு போயி இருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''ஆமா மித்து, சமூக வலைதளத்துல ஆளுங்கட்சிக்கு எதிரா வதந்தி பரப்புனதா, தி.மு.க., பகுதி கழக செயலாளர் மேல மூனு பிரிவுல வழக்கு பதிஞ்சு, ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. நடுராத்திரி வீட்டுக்கு போயி, கைது செஞ்சுருக்காங்க. இதை கேள்விப்பட்டு, தி.மு.க., நிர்வாகிங்க கதிகலங்கி போயிருக்காங்க,''

''அதிருக்கட்டும், கார்ப்பரேஷன் அதிகாரியோட உதவியாளர் மகனையும், துப்புரவு பணியாளர் பட்டியல்ல சேர்த்து, தேர்ந்தெடுத்திருக்காங்களாமே,'' என கிளறினாள் மித்ரா.''உண்மைதான். ஆனா அவரை, குப்பை அள்ளச் சொல்லப் போறாங்களா, வார்டு ஆபீசுல ஒக்காரச் சொல்லப் போறாங்களான்னு, சக அதிகாரிங்க கவனிச்சிட்டு இருக்காங்க,''

''அதெல்லாம் சரி, கார்ப்பரேஷன் எலக்சன் நடக்குமா, நடக்காதா,''

''மித்து, அதே சந்தேகம் ஆளுங்கட்சிக்காரங்களுக்கும் இருக்கு. எப்படியும் தேர்தல் நடத்திருவாங்க; கவுன்சிலராகிடலாம்னு ஆசைப்பட்டு, வார்டுக்குள்ள நெறையா செலவு செஞ்சவங்க, விரக்தியில இருக்காங்க,''

''அப்ப, தேர்தல் நடக்கவே நடக்காதா,''

''இப்ப இருக்கற நிலைமையில, ஆளுங்கட்சி ரொம்பவே 'வீக்'கா இருக்காம். அதனால, பேரூராட்சி, நகராட்சின்னு தனித்தனியா நடத்திட்டு, கடைசி கட்டமா, மாநகராட்சிக்கு நடத்த ஆலோசனை செஞ்சிட்டு இருக்காங்களாம்,'' என்ற சித்ரா, ''மதுக்கரை ஏரியாவுல மூணு நம்பர் லாட்டரி வித்த கும்பலை, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, எஸ்.பி., ஸ்பெஷல் டீம் கைது செஞ்சது. இதுல, 'மணி'யானவரு வெளியில ஜாலியா உலா வர்றாராம். லோக்கல் போலீசுக்கு தெரிஞ்சும், கண்டுக்காம இருக்காங்களாம். இன்னும் மூணு நம்பர் லாட்டரி, போலீஸ் ஆசியோட சக்கை போடு போடுதாம்...'' என்றாள்.

''எஸ்.ஐ.,யோட மகனை, பல்கலையை விட்டே, 'டிஸ்மிஸ்' செஞ்சிட்டாங்களாமே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள் மித்ரா.

''ஆமாப்பா, நானும் கேள்விப்பட்டேன். போதை பழக்கத்துக்கு அடிமையான அந்த பையன், சக மாணவர்களை கிரிக்கெட் மட்டையால தாக்கியிருக்காரு.விசாரணையில, போதை பொருள் சம்பந்தமான விஷயங்கள், அவரது மொபைல் போனில் இருந்துருக்கு. அவரை, 'டிஸ்மிஸ்' செஞ்சிட்டாங்களாம். மேட்டுப்பாளையம் பக்கத்துல இருக்கற ஸ்டேஷன் எஸ்.ஐ., மகன் காணாமல் போயிட்டாராம். அவரை தேடிக்கிட்டு இருக்காங்க,''

''எனக்கொரு போலீஸ் மேட்டர் தெரியும்,'' என்ற மித்ரா, ''பிரபல ஓட்டல்ல, ரெண்டு போலீஸ் அதிகாரிங்க ரகசியமா சந்திச்சதை பத்தி, ஏற்கனவே பேசுனோமே. அவுங்கள உயரதிகாரிங்க கூப்பிட்டு, இனிமே, அது மாதிரி நடந்துக்கக் கூடாதுன்னு, 'வார்னிங்' செஞ்சிருக்காங்க,'' என்றாள்.

''மித்து, கிணறு தோண்ட பூதம் கெளம்பிய கதையா, புதுசா ஒரு தகவல் வெளிச்சத்துக்கு வந்துருக்கு,''

''அப்படியா, என்ன விஷயம்,'' என, ஆர்வத்தோடு கேட்டாள் மித்ரா.

''பெரிய ஊர்ல நடந்த, கிளப் 'ரெய்டு' பத்தி பேசினோமே. பெரியநாயக்கன்பாளையம் ஏரியாவிலும் நடந்திருக்காம். பல லட்சத்தை பறிமுதல் செஞ்சு, அமுக்கிட்டாங்களாம். போலீஸ்காரங்க பேசிக்கிட்டாங்க,'' என்ற சித்ரா, ''வெயிட்டான போலீஸ் அதிகாரியை பத்தி, விசாரிச்சு சொல்றதா சொல்லியிருந்தியே,'' என்றாள்.

''ஆமாக்கா, விசாரிச்சேன். அதை விட முக்கியமான வேற ஒரு மேட்டர் கெடைச்சது. 'க்ரைம்' போலீசில் வேலை பார்த்து, திருட்டு நகையில, 100 பவுன் வரை 'தில்லாலங்கடி' வேலை செஞ்சு, 'சஸ்பெண்ட்' ஆன பெண் போலீசை விசாரிச்சா, சில முக்கியமான ஆபீசர்ஸ் சிக்குவாங்களாம். அதனால, தலைமறைவா இருக்கறதா கணக்கு காண்பிச்சிட்டு இருக்காங்களாம். மேலதிகாரி ஒருத்தரோட கட்டுப்பாட்டுல, அந்த பெண் போலீஸ் இருக்கலாம்னு போலீஸ்காரங்க கிசுகிசுக்குறாங்க,''

''அவுங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க. காப்பாத்துறதுக்கு முயற்சிக்கறது வாஸ்தவம்தானே. கல்வித்துறையை பத்தி சொல்றதாகவும், போன வாரம் சொன்னியே,''

''கல்வித்துறையில ஏகப்பட்ட விஷயம் நடக்குதுக்கா. புதுசா வந்திருக்கிற சி.இ.ஓ., 'உஷா'ரா இருக்காங்களாம்; யாரையும் நம்புறதில்லையாம். கையெழுத்து வாங்குறதுக்கு கோப்பு எடுத்துட்டு போனா, படிச்சுப் பார்க்குறதுக்கு டைம் கேக்குறாராம்.

''இவரது பி.ஏ., வர்ற மே மாசம் 'ரிடையர்' ஆகப் போறாரு. வழக்கமா, இந்த பொறுப்புக்கு, தலைமை ஆசிரியர் ஒருத்தரை நியமிக்கறது வழக்கம். பழைய, 'பிக்-பாஸ்'-ஐ நியமிக்கறதுக்கு திட்டமிட்டு இருக்காங்களாம்,''

''இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களா வேலை செய்றதுல சில பேரு, முறையா படிச்சவங்க இல்லையாம்.பக்கத்து மாநிலங்கள்ல, 'காம்போ பேக்' திட்டம் அறிமுகப்படுத்தி இருக்காங்களாம். இளங்கலை உடற்கல்வி (பி.பி.எட்.,) படிக்க ரூ.60,000 - 80,000 வரை; முதுகலை உடற்கல்வி (எம்.பி.எட்.,) படிக்க, ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்தி, தேர்வு மட்டும் எழுதினால் போதுமாம்; பட்டம் கெடைச்சிரும்னு சொல்றாங்க,''

''அடப்பாவமே,'' என அங்கலாய்த்த சித்ரா, ''கறவை மாடு இறந்தது சம்பந்தமா, ஆர்.டி.ஓ., 'என்கொயரி' நடந்துச்சே, என்னாச்சு,'' என, கொக்கி போட்டாள்.

''அக்கா, தப்பு நடந்திருக்கறதை கண்டுபிடிச்சிருக்காங்க; அரசு அதிகாரிங்க அலட்சியமா இருந்திருக்காங்கன்னு சொல்றாங்க. இதுவரைக்கும் துறை ரீதியா ஒருத்தர் மேல கூட, நடவடிக்கை எடுக்கலை. அதுதான் மர்மமா இருக்கு,'' என்ற மித்ரா, போலீசுல வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா, புகாருக்குள்ளான, சூலுார் இன்ஸ்பெக்டர் தங்கராஜை, தென்மண்டலத்துக்கு மாத்திட்டாங்களாமே,'' என, நோண்டினாள்.

''ஆமா, உண்மைதான்! தி.மு.க., பிரமுகர் குடோன்ல போதைபொருள் சிக்குன கேஸ்ல, அரசு தரப்புக்கு இன்ஸ்பெக்டரு சரியா ஒத்துழைக்கலைன்னு, உரசல் இருந்துச்சாம். பக்காவா, 'பிளான்' போட்டு, துாக்கிட்டாங்களாம்,'' என்றபடி, காய்கறி மார்க்கெட்டுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டாள் சித்ரா. மித்ரா பின்னால் தொற்றிக்கொண்டாள்.

''அக்கா, நஞ்சுண்டாபுரம் வழியா போகாதே. பாதுகாப்பு இல்லாத ஏரியாவா மாறிக்கிட்டு இருக்கு,'' என, எச்சரித்த மித்ரா, ''அக்கா, புதுசா ஒரு மோசடி கும்பல் கரன்சியை கல்லா கட்டிக்கிட்டு இருக்காமே,'' என கேட்டாள்.

''ஆமா மித்து, சித்தாபுதுார் ஏரியாவுல அந்த கம்பெனி உருவாகி இருக்கு. 10 ஆயிரம் ரூபாய் கட்டுனா, 100 வேலை நாள்ல, தெனமும், 200 ரூபாய் கொடுப்பாங்களாம். அதாவது, கட்டுன பணம், மூணு மாசத்துல இரட்டிப்பா கெடைக்குமாம். 'எம்எல்எம்' மாதிரி, உறவினர்களை இணைச்சா, அதுக்கு, 100 ரூபாய் கெடைக்குமாம்.

''இதுதவிர, 2,500 ரூபாய் கட்டுனா, 'பின்னாடி' 50 லட்சம் ரூபாய் கெடைக்குமாம். மூணு பேரை சேர்த்து விட்டால், இரண்டு கோடி ரூபாய் கெடைக்குமாம்.ஏகத்துக்கும் கவர்ச்சி அறிவிப்புகளை அள்ளி விட்டு, ஒரு குரூப் கலெக்சன் பண்ணிட்டு இருக்கு. போலீஸ்காரங்க, பாதுகாப்பு ஏற்பாடுகள்ல பிசியா இருக்கறதுனால, கவனம் செலுத்தாம இருக்காங்க,''.

''கோடிக்கணக்குல சுருட்டிட்டு போனதுக்கு அப்புறம், கலெக்டர் ஆபிசையும், கமிஷனர் ஆபிசையும் ஏகப்பட்ட பேரு முற்றுகையிடுறதுக்கு முன்னாடி, போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்கறது நல்லது,'' என்றபடி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X