சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கோடை விடுமுறை எதற்கு?

Added : மார் 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோடை விடுமுறை எதற்கு?

ந.ஜெயச்சந்திரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நம் நாட்டில், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, அரசு அதிகாரிகளும், அலுவலர்களும், அரசு இயந்திரத்துக்குக் கோடை விடுமுறை அறிவித்து, 'ஜிலுஜிலு' பகுதிகளுக்குச் சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களின் உடல், குளிர் பகுதிகளில் வசிக்கும் தன்மை கொண்டதால் அப்படி!ஆனால், நம் மண்ணில் பிறந்து வளர்பவர்களுக்கு அப்படி இல்லையே! வெப்பத்தைத் தாங்கும் உடலாச்சே!இப்போது, மக்கள் தொகை பெருகி விட்டது. அன்றாடத் தேவைகள், பிரச்னைகள், தீர்க்கப்படாத வழக்குகள், முடிக்கப்படாத தீர்ப்புகள், லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளன. நீதிமன்றங்களில், பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.இப்படிப்பட்ட நிலையில், நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை தேவையா? காலதாமதம் ஏற்படாமல் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனில், இந்த விடுமுறையைத் தவிர்க்க வேண்டும்.நீதித் துறையின் கோடை விடுமுறை, அரசு இயங்கும் வேகத்தை கட்டுப்படுத்துகிறது; தண்டனைகள் தாமதப்படுத்தப்படுகின்றன; ஏழை மற்றும் குற்றமற்றவர்களின் தீர்ப்புகள், தள்ளி வைக்கப்படுகின்றன.இதனால் தான், கட்டப் பஞ்சாயத்து முறையை, இன்னும் நம்மால் ஒழிக்க முடியவில்லை.எனவே, தேவையான, நெறிமுறைப்படுத்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் எடுத்து, நீதிமன்ற நடவடிக்கைகளை சீர்படுத்த வேண்டும்.

சுதாரிக்கணும்காங்கிரஸ்!
கே.சிங்காரம், தலைவர், நகர காங்கிரஸ் கமிட்டி, வெண்ணந்துார், நாமக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், பலர் டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் கல்வியில் மேம்பட்டு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலைக்கு அச்சாரமிட்டவர், காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், காமராஜர்.கடந்த, 1965ல், மாணவர்கள் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட போது, அப்போதைய முதல்வர், பக்தவத்சலம் சற்று நளினமாக நிலைமையைக் கையாண்டிருந்தால், பெரும் கலவரங்கள் மூண்டிருக்காது என்ற கருத்து, காங்கிரஸ் கட்சியில் நிலவியது.அன்றைய பொருளாதார வீழ்ச்சியை, மிகச் சாதுர்யமாக தன் கட்சியின் வெற்றிக்காகப் பயன்படுத்திய, தி.மு.க., தலைவர் அண்ணாதுரை, 1967ல், காங்கிரசை ஆட்சியிலிருந்து விரட்டினார். 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், விருதுநகரில் தோல்வி அடைந்தார் காமராஜர்.சென்னை, தியாகராய நகர், திருமலைப் பிள்ளை சாலையில் இருந்த, காமராஜர் வீட்டின் முன், காங்., தொண்டர்கள் குவிந்து, தாரை தாரையாகக் கண்ணீர் விட்டனர்.கதறிய தொண்டர்களிடம், 'எப்போதுமே நாமே ஜெயித்துக் கொண்டிருந்தால், அது எப்படி ஜனநாயகம் ஆகும்... நான் கூட தோற்க முடியும் என்பது தான், ஜனநாயகம்! போங்க போங்க... கட்சி வேலையை இன்னும் உற்சாகத்துடன் பாருங்க!' எனக் கூறி, அனுப்பி வைத்தார், காமராஜர்.காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் இருந்து அகன்று, 53 ஆண்டுகள் ஆகியும், திராவிடக் கட்சிகளின் வெற்றிக்கும், காங்கிரசின் தோல்விக்கும் என்ன காரணம் என்பதை, இன்று வரை, காங்கிரஸ் பரிசீலிக்கவே இல்லை. தமிழகத்தைக் கோட்டை விட்டதைப் போன்ற சம்பவம், மற்ற மாநிலங்களிலும் அரங்கேறுகிறது.ரஜினி, தமிழக மக்களுக்குச் சொன்னதைப் போல, நான் காங்கிரசுக்குச் சொல்கிறேன்...இப்போது சுதாரிக்க முன்வரவில்லை எனில், எப்போதுமே சுதாரிக்க முடியாது!

எப்படி உங்களைநம்புவது ராமதாஸ்?

என்.கல்யாண சுந்தரம், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து ஓட்டளித்த பின், அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள, பா.ம.க., தலைவர் ராமதாஸ், 'கூட்டணி தர்மத்துக்காக வாக்களித்தோம்' என்று, வாய் கிழிய முழங்கினார்.அதே தர்மர், ஜன., 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், '5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி, ஜன., 28ல் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்' என்றார். இது என்ன தர்மம்?அ.தி.மு.க., கூட்டணியின் அறிவிப்பு தானே இது!இது போகட்டும்... வருங்கால முதல்வர் என, தன்னைத் தானே வர்ணித்துக் கொள்ளும் அன்புமணி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் பேட்டி அளிக்கிறார்...'காவிரி டெல்டாவில், ஹைட்ரோ கார்பன் திட்ட உரிமத்திற்காக, அரசு, விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் முதல்வர், காவிரி டெல்டாவை பாதுகாக்க, அதை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்' என்று!இந்த சந்தர்ப்ப அரசியலை விட்டு, தயவு செய்து வெளியே வாருங்கள். உங்கள் கட்சிக்காரராகிய நாங்கள், உங்கள் பக்கம் வரும் ஒவ்வொரு முறையும், நீங்கள் வேறொரு பக்கம் போகிறீர்கள். நாங்கள் எப்படி உங்களை நம்புவது?

மீன் பிடிக்கக்கற்றுக் கொடுங்கள்!
வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: பெண்கள் நலனுக்காக, தமிழக அரசு, 78 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. இந்த நிதி எவ்வாறு பயன்படுகிறது என்று, ஒரு பட்டியலும் கொடுத்துள்ளது.பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்; பெண் குழந்தைகள் பிறந்தால் வைப்பு நிதியாக, 25 ஆயிரம் ரூபாய்; இரு குழந்தைகள் பிறந்தால், 50 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்; பெண்களுக்கு, 50 சதவீத மானியத்தில், 'ஸ்கூட்டி' வழங்கும் திட்டம் என, பட்டியல் நீள்கிறது.மனதைத் திறந்து சொல்லுங்கள், இவை பெண்களின் நலனுக்கான தொலைநோக்கு திட்டங்களா...வைப்பு நிதியாகவும், மானியமாகவும் பயன்படும் திட்டம், எந்த விதத்தில் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்; எவ்வளவு நாட்களுக்கு உதவும்?ஒருவன் வாழ, மீனை இனாமாகக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கும் கலையைக் கற்றுக் கொடுத்தலே சிறந்தது.இந்தக் கலை தான், கடைசி காலம் வரை அவன், யாரையும் எதிர்பார்க்காமல் வாழ, வழி வகுக்கும்.அவ்வாறு, பெண்கள் தாங்களே சம்பாதித்து, குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்னென்ன உதவிகள் செய்யலாம் என்று சிந்தித்துச் செயல்படுத்தற்குப் பெயர் தான், தொலைநோக்கு திட்டம்.இப்போது என்ன நடக்கிறது... கிடைக்கும் பணத்தைச் சீக்கிரம் செலவிடத் தான் தோன்றும். அடுத்த ஆட்சி வந்தால், திட்டம் நின்று போகும்; அவ்வளவு தான்!எனவே, பெண்கள் நலமுடன் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற உண்மையான அக்கறை இருந்தால், அவர்களுக்கான நிரந்தர வருமானத்துக்கு வழி சொல்லி, நுணுக்கங்களையும் கற்றுக் கொடுப்பதே, அரசின் தொலைநோக்கு சிந்தனையாக அமையும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-மார்-202006:30:09 IST Report Abuse
D.Ambujavalli வாசலால் வரும் பணம் வாசலாலேயே டாஸ்மாக்குக்குப் போய் அரசுக்கே மறு சுழற்சியாகி வரும் பெண்களுக்குப் பணம் கிடைத்தால் கணவன்மார்களின் ஊதாரித்தனத்துக்குத்தான் போகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X