சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

அனுபவிக்க அல்ல, சுமப்பதற்கே பதவி!

Added : மார் 18, 2020
Share
Advertisement
 அனுபவிக்க அல்ல, சுமப்பதற்கே பதவி!

அன்புள்ள ரஜினிகாந்துக்கு...தாங்கள் அடிக்கடி குறிப்பிடும், 'சிஸ்டம்' என்ற வார்த்தையை, தமிழில் அமைப்பு அல்லது செயல்முறை என்று கொள்ளலாம். சிஸ்டம் சரியில்லை, கெட்டுப் போயிருக்கிறது என்று சொல்வது, நடுநிலையான, நல்ல சிந்தனையாளர் பலருக்கும் தெரிந்த உண்மை தான்.சமுதாயத்தில் மவுனமாக, சுயமாகவும், நியாயமாகவும் சிந்திக்கும் பெரும்பான்மையினர் இருக்கின்றனர். அவர்களிடம் உள்ள ஒரே குறை மற்றும் பலவீனம் என்னவென்றால், தங்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.'நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி இருந்து, மவுனமாக, மனதிற்குள் புலம்பிக் கொண்டிருப்பர்.

இவர்களை அப்படி மவுனிகளாக்கி வைத்திருப்போர், தங்களின் அசாதாரண உரத்த குரலாலும், வாய் சாதுர்யத்தாலும், மற்றவர்களை அடக்க நினைக்கும் அராஜகக் கும்பல்.சின்ன விஷயங்களைக் கூட, ஊதிப் பெரிதாக்கி, தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள, பயன்படுத்திக் கொள்ளும் திறமை கொண்ட குறைந்த சதவீதத்தினர் தான்.உங்களின், 12ம் தேதி செய்தியாளர் சந்திப்பு உரைபடி, அந்த மவுன பெரும்பான்மையினருக்கு, பேச வாய்ப்புக் கொடுக்க முன் வருகிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால், அதற்கு தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள செயல்முறை, உங்கள் மொழியிலேயே சொன்னால், 'சிஸ்டம்' முழு வெற்றியைத் தராது.என்ன தயக்கம்?இப்போது, தமிழகம் உள்ள நிலையில், ஆட்சியில் அமர, மக்களின் மதிப்பைப் பெற்ற, வாக்களித்த மக்களின் நலனில் மட்டுமே அக்கறையுள்ள, சொத்து சேர்க்கும் ஆசையில்லாத, துணிந்து முடிவெடுக்கும், சர்வ அதிகாரம் படைத்த தலைமை தேவை. நீங்கள், பதவி என்பது ஒரு சுகம் என்று எண்ணி, அதிலிருந்து விலகி இருப்பது, சுயநலமின்மையின் வெளிப்பாடு என்று காட்ட நினைக்கிறீர்கள்.ஆனால், மக்கள் கருத்தில், உங்களுக்கு வழங்க நினைக்கும் பதவி என்பது, பொறுப்பு மிக்க ஒரு சுமை. அதிலிருந்து விலகி இருப்பதாக நீங்கள் சொன்னால், சுமையைக் கண்டு அஞ்சுகிறீர்களா அல்லது அதிலிருந்தவர்கள் எல்லாம் சந்தித்த அவப்பெயரை எண்ணி அஞ்சுகிறீர்களா என்ற சந்தேகம், மக்களுக்கு எழ வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்திற்கு தலைமை பொறுப்பேற்க, தகுதியான ஒரு தலைமையின் இடம் காலியாகி, வெற்றிடமாக உள்ளது என்பதை உணர்ந்த நீங்கள், மக்களின் குறிப்பாக, உங்களின் ஆதரவாளர்கள், உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்து, அந்த வெற்றிடத்தை நிரப்புவதில் என்ன தயக்கம்?ஒரு சக்தி வாய்ந்த தலைமையை எதிர்த்து வெளியே வந்த, எம்.ஜி.ஆர்., பெற்ற வெற்றி, உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதில், உங்களுக்கு என்ன சந்தேகம்?ஆலோசனைகளை எங்கு பெறலாம் என்பதில், தெளிவாக இருக்கிறீர்கள். பல காலமாக, அரசியல் நிகழ்வுகளையும், நடைமுறைகளையும், மக்களின் எதிர்வினைகளையும் கவனித்து வந்திருக்கிறீர்கள்.

அவ்வப்போது, நீங்கள் தெரிவித்த கருத்துகள், அனுபவம் மிக்கவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அப்படியிருக்கும் போது, கிடைக்கும் வாய்ப்பை உதறித் தள்ளினால், தமிழக அரசியலில் உள்ள, பல, வாய்ச் சொல் வீரர்களில், நீங்களும் ஒருவராகி விடும் ஆபத்து இருக்கிறது.கட்சிக்காரர்கள் அனைவரையும், தன் விரல் அசைவில் வைத்திருந்த, ஜெயலலிதாவிடமிருந்த நிர்வாகத் திறமை, உங்களுக்கு இல்லை என்று, நீங்களே ஏன் குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள். ஜெயலலிதாவிடம் இருந்த நிர்வாகத் திறமையின் தாக்கம் தான், அவர் மறைவுக்கு பிறகும் இத்தனை காலம், அந்த கட்சியால் தாக்குப்பிடித்து நிற்க முடிகிறது.உங்கள் உரையில் நீங்கள் குறிப்பிட்ட நல்ல ஆலோசகர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்களிடம் பேசும்போதே, உங்களது மக்கள் சேவைக்கு அவர்கள் ஒத்து வருவரா என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையானவர்களையும், தகுதியானவர்களையும், பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்; மற்றவர்களுக்கு வாசலைக் காட்டி விடுங்கள். அதற்குத் தான் துணிவு வேண்டும். மக்களின் ஆதரவு, உங்களுக்கு அந்த துணிவை தர வேண்டும்.தற்காலிக தலைவர்கள்தவறான வழி நடத்துதல், திறமையானவர்களையும் மாசுபடுத்தி, கவிழ்த்து விடும் என்பதற்கு, ஜெயலலிதாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்தி, முடிந்ததும் பதவியைப் பறிப்பது அல்லது கழற்றி விடுவது என்பது சரியான முடிவாகத் தோன்றவில்லை. 'என் வீட்டுக் கல்யாணத்தில் கலந்துகொண்டு விட்டு, உன் வீட்டில் போய் சாப்பிடு' என்பது போல் உள்ளது.கட்சிக்காரர்கள், தங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, ஆளும் கட்சி என்ற தோரணையில், அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பதையும் தான் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லையே தவிர, தன் கட்சித் தொண்டர்களுடன் தோளோடு தோள் நின்று, நியாயமான உதவிகளைச் செய்து, நட்போடு பழகினால் தான், கட்சி வளரும்; நிலைத்து நிற்கும்.

தேர்தலுக்கு மட்டும், வீடு தேடி வரும் தற்காலிக தலைவர்களுக்கு, மக்களிடையே மதிப்பிருக்காது; அவர்களால் கட்சிக்கு பயன் ஏதுமில்லை.பதவியைப் பயன்படுத்தி, அராஜகத்தில் ஈடுபடாமல், அந்த பதவியில் சிறப்பாக செயல்பட்டு, மக்களின் நன்மதிப்பையும், மரியாதையையும் ஏற்றுக்கொள்வதில், கட்சிக்கும், உங்களுக்கும், எந்த அவப்பெயரும் வரப் போவதில்லை.மிதிவண்டியில் வந்து, தன் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் தலைவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள், நம் மக்கள்.

காமராஜர், கக்கன் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளை, பாவம் அவர்கள் சந்தித்ததில்லை. நீங்கள் அறிமுகப்படுத்துங்கள்; மக்கள் நெகிழ்ந்து போவர்.நேர்மைக்கும், எளிமைக்கும், மக்களிடம் கிடைக்கும் மரியாதையையும், கிடைக்கும் சந்தோஷத்தையும், உங்கள் தொண்டர்களை அனுபவிக்கப் பழக்குங்கள்; நிச்சயமாக தடம் பிறழ மாட்டார்கள்.கட்சித் தொண்டர்களையும், அந்தப் பகுதியில் பொறுப்பில் உள்ள தலைவர்களையும், தங்கள் பகுதி பாமர மக்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் நட்புடன் பழகி, அந்தப் பகுதி இளைஞர்கள் அனைவரையும் சந்தித்து, நல்வழிப்படுத்த சொல்லுங்கள்.பணம் வாங்காமல், நியாயமான முறையில் படிக்கவும், வேலைவாய்ப்பு பெறவும், உதவச் சொல்லுங்கள். அரசு அதிகாரிகளுக்கு அதற்கான உத்தரவுகளை வழங்குங்கள். எதிரணியினரிடமும் பகைமை பாராட்டாமல் பழகச் சொல்லுங்கள்.கட்டப் பஞ்சாயத்து செய்யாமல், நியாயமான சின்னச்சின்ன பிரச்னைகளை, அரசு அதிகாரிகளின் உதவியோடு, கட்சி பேதம் பார்க்காமல், நியாயமான முறையில் தீர்த்து வைக்க சொல்லுங்கள்.களம் இறங்குங்கள்இளைஞர்கள் திசை மாறி, கூலிப்படையாகவும், ரவுடிகளாகவும் மாறுவதைத் தடுக்கச் சொல்லுங்கள். மக்களின் மதிப்பும், மரியாதையும், தானாகக் கிடைக்கும்.காவல் துறை அதிகாரியாக பல எளிமையான, நேர்மையான அரசியல்வாதிகளைச் சந்தித்தும், மதிப்புக் கொடுத்து இருக்கிறேன். மக்களிடம் அவர்களுக்கு இருந்த மரியாதையைக் கண்டு வியந்திருக்கிறேன் .காலம் சென்ற, தாழை மு.கருணாநிதி என்ற, தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., பற்றி எதிரணியில் இருப்பவர்கள் கூட, தவறாக பேச மாட்டார்கள். அவர், அவசர கால பிரகடனத்தின் போது, கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த போது, தன் உடல்நலமில்லாத தாயை பார்க்க, 'பரோல்' விடுப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.அதன் மீது விசாரித்து, அறிக்கை அனுப்பும் பணி, நிலைய பொறுப்பு அதிகாரியான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல், அவரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்காமல், அவர்கள் எதிர்பார்க்காமல் அவரின் இல்லத்துக்கு சென்றேன்.அவரின் தாய், சிறிய வீட்டில், கோரை பாயில் படுத்திருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டசபையிலும், பார்லிமென்டிலும் உறுப்பினராக இருந்த ஒருவரின் தாய், அந்த எளிமை கோலத்தில் இருந்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை.இதே போல், பல கட்சிகளிலும், பலரை என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியும். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை, அவர்களை தேர்ந்தெடுத்த பதவி மாசுபடுத்தாது; பதவியை அவர்கள் தான் பெருமைப்படுத்துவர்.எனவே, மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து, அரசியலில் களம் இறங்குங்கள்!மா.கருணாநிதிகாவல் கண்காணிப்பாளர், ஓய்வுspkaruna@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X