சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்!

Added : மார் 18, 2020
Share
Advertisement

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்!

என்.கணபதி சுப்ரமணியன், கொடுமுடி, ஈரோடு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு, ஆறு பேர் தேர்வாகியுள்ளனர். தி.மு.க.,விலிருந்து மூவர்; அ.தி.மு.க.,விலிருந்து மூவர்.இதில், அ.தி.மு.க.,வில், கே.பி.முனுசாமியை, முன்னாள் முதல்வர், ஜெ., வெகு காலமாய் ஒதுக்கி வைத்திருந்தார். அவர் மறைவுக்குப் பின், மீண்டும் முன்னுக்கு வந்துள்ளார் முனுசாமி.தம்பிதுரையோ, கடந்த லோக்சபா தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர். மக்களால் ஒதுக்கப்பட்ட ஒருவரை, மீண்டும் மக்களை மறைமுகமாக ஆளக் கூடிய சபைக்கு அனுப்புவது, எந்த விதத்தில் நியாயம்?தி.மு.க.,வில், திருச்சி சிவாவும் பல காலம், லோக்சபா எம்.பி.,யாகவும், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர். இவரை விட்டால் கட்சியில் வேறு நபர்களே இல்லையா?இது ஒரு உதாரணம் தான். பல கட்சிகளும், இந்த வழிமுறையைப் பின்பற்றுகின்றன.மக்களுக்கான ஆட்சி எனில், எல்லா பிரதிநிதிகளுமே, மக்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை, அமல்படுத்தப்பட வேண்டும். நடக்குமா?

விஜயகாந்த்துணிச்சல்மிக்கவர்!
எம்.எஸ்.சரவணகுமார், தேவதானபட்டி, தேனியிலிருந்து எழுதுகிறார்: 'ஜெ.,யின் துணிவு இன்று ரஜினியிடம்' என்று ஒருவர் இப்பகுதியில், எழுதியிருந்தார்.தே.மு.தி.க., தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், விஜயகாந்திடம் இருந்த துணிச்சலா, ரஜினியிடம் இருக்கிறது?ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர் தான். அவரையே எதிர்த்து கேள்வி கேட்டவர் விஜயகாந்த். ஆளுமை மிக்க இரு தலைவர்கள் இருக்கும்போதே அரசியலில் இறங்கி, குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி தலைவரானவர். இப்போது, அவர் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, கட்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.பல பதவிகளில் இருந்தபடி, லஞ்சமோ, ஊழலோ செய்யாதவர் விஜயகாந்த் மட்டுமே.எங்கேயாவது பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிவாரணம் அளிப்பவர். துணிச்சல் என்பதை, ஜெயலலிதாவிடம் பார்த்துள்ளோம். அதன் பின் துணிச்சல் மிக்கவர், விஜயகாந்த் மட்டுமே!
நோயற்ற வாழ்வு வேண்டுமா?

ஆதிரை வேணுகோபால், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது; வாசலில், வாளியில் நீர் வைத்து, கால் கழுவிய பின், வீட்டுக்குள் நுழைந்தது; மஞ்சள் பூசி குளித்தது; வாசலில் பசுஞ்சாணி தெளித்தது; உணவில் மஞ்சள், சுக்கு, மிளகு சேர்த்தது; வேப்பங்குச்சியால், பல் துலக்கியது...ஆண்டுக்கு ஒருமுறை, வீட்டிற்கு வெள்ளை அடித்தது; மாலை நேரம், வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது; துக்க காரியம் மற்றும் நெரிசல் மிக்க இடங்களிலிருந்து திரும்பியதும், குளித்த பின், வீட்டிற்குள் நுழைந்தது...கஷாயம் குடித்தது; வெள்ளாவியில் உடை வெளுப்பது; வெற்றிலை பாக்கு போடுவது என, நம் பாரம்பரியம் அனைத்துமே, கிருமியை தடுப்பதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பின்பற்றப்பட்டது.அதை, 'நாகரிகம்' என்ற பெயரில் அழித்து, இன்று நோய்களின் பிறப்பிடமாகவும், புகலிடமாகவும், நம் தேசத்தை மாற்றி உள்ளோம்.பாரம்பரிய முறை எதையும், நகரத்தில் இருப்போர் பின்பற்றுவதில்லை என்பது, வேதனையான விஷயம். அது குறித்து அறிவுரை கூறுவோரை, கிண்டல் செய்யும் பழக்கமும் அதிகரித்திருக்கிறது.எந்த நேரமும், 'டிவி சீரியல்' பார்ப்பது, மொபைல் போனில், 'வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக்' என, பலர் அதிலேயே ஐக்கியமாகி விடுகின்றனர். பெற்றோரே இப்படி இருந்தால், பிள்ளைகளை என்ன சொல்வது?வருங்கால சமுதாயத்தின் ஆரோக்கிய வாழ்க்கை, ஒரு பெரிய கேள்விக்குறி தான்!பெரும்பாலான வீடுகளில், பிள்ளைகள் கை, கால், முகம் கூட கழுவாமல், சாப்பிட உட்கார்ந்து விடுகின்றனர். தட்டில் என்ன இருக்கிறது, எதை சாப்பிடுகிறோம் என்பது, அவர்களின் கவனத்திலே இல்லை.பிள்ளைகளை குற்றம் சொல்வதை விட, பெற்றோரைத் தான் திருத்த வேண்டும். ஒரே பிள்ளையாக இருந்தாலும், தேவையான விஷயத்தில், கண்டிப்பு அவசியம் இருக்க வேண்டும்.நம் முன்னோர் கற்றுத் தந்த, அனைத்து விஷயங்களிலும், ஏதோ ஒரு வாழ்வியல் அர்த்தம் ஒளிந்திருக்கிறது. அதை உணர்ந்து, நாமும் பின்பற்றினால், நோயற்ற வாழ்வு நிச்சயம்!

தேர்தலுக்கு பின் கூட்டணி!

ஆர்.கிருஷ்ணசாமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு, தேர்தல் வரவிருக்கிறது. இதில் தேசிய, மாநில, உதிரி கட்சிகள் போட்டியிடும்.பெரிய இரு திராவிட கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் பெருந்தலைவர்களாக இருந்த, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர், இன்று இல்லை.தேசிய கட்சியான, பா.ஜ., மத்திய ஆட்சியில், வலுவாக அமர்ந்துள்ளது. அது, இன்னும் நான்கு ஆண்டுகள், பதவியில் நீடிக்கும். ஒரு அடியாவது, வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம், காங்கிரசுக்கு.இத்தகைய சூழ்நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மக்கள், எந்த கட்சியை தேர்ந்தெடுக்கப் போகின்றனர் என்பதை கணிக்க முடியாது.தேர்தலுக்கு பின் கூட்டணி என்ற உத்தியை, இந்த தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டும்.வரும் தேர்தலில், ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டு, தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். எந்த கட்சி, பெரும்பான்மையை பெறுகிறதோ, அது ஆட்சி அமைக்கலாம்.எந்த கட்சியும், தனிப்பெரும்பான்மை பெறவில்லை எனில், ஒருமித்த கொள்கையுடைய கட்சிகள், ஒரு அணியில் திரண்டு, பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சியில் அமரலாம்.கூட்டணி சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சி அமைத்து, சில நாட்களில், மனஸ்தாபனம் காரணமாக, ஆட்சியை கலைத்து விடுகின்றனர். இதனால், மக்கள் வரிப்பணம், அதிகாரிகளின் உழைப்பு ஆகியவை வீணாகின்றன.மேலும், ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலம் என்ன என்பதும், சரியாக தெரிவதில்லை.எனவே, தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதை தடுக்க வேண்டும். தேர்தலுக்கு பின் கூட்டணி என்ற புதுமை படைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் சிந்திக்குமா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X