தமிழ்நாடு

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஒத்திவைப்பு: ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

Added : மார் 19, 2020
Share
Advertisement

சத்தியமங்கலம்: ''கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது,'' என, ஈரோடு கலெக்டர் கதிரவன் அறிவித்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். நடப்பாண்டு, திருவிழா வரும், 23ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி, ஏப்ரல், 7 ல், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா, நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, திருவிழா நடத்தினால் அதிக பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவர் என்பதால், திருவிழா நடத்துவது குறித்து நேற்று, பண்ணாரி அம்மன் கோவில் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஏப்ரல், 7ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, தற்காலிகமாக, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்த பின் திருவிழா நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். பண்ணாரி அம்மன் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை இல்லை. அதிகளவு கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். கோவில் வளாகத்தில், 24 மணி நேரமும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். ஈரோடு மாவட்டத்தில் மாஸ்க் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனாவுக்கு தனி வார்டு: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க தாளவாடி மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் விரைவில் தனி வார்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, கலெக்டர் கூறினார். எஸ்.பி., சக்தி கணேசன், டி.ஆர்.ஓ., கவிதா, துணை இயக்குனர் (சுகாதாரம்) சவுண்டம்மாள், அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், துணை ஆணையர் சபர்மதி, கோபி ஆர்.டி.ஓ., ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


* கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை கோவில் திருவிழா, 21ல் நடக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க, இத்திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அங்கு கடைகள், கண்காட்சி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X