தமிழ்நாடு

கோழிப்பண்ணையாளர்களுக்கு இழப்பு ரூ.1,350 கோடி; முட்டை, கறிக்கோழி விலை கடும் வீழ்ச்சி

Added : மார் 19, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'கொரோனா' வைரஸ் பீதியால், முட்டை, முட்டைக்கோழி, கறிக்கோழி விற்பனையின்றி, 1,350 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு முட்டை, 3 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது தமிழக கோழிப்பண்ணையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 900 பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். சீனாவில், 2019, டிச., மாதம், 'கொரோனா' வைரஸ் பரவத் துவங்கியதையடுத்து, நாடு முழுவதும், உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும், தடுப்பு நடவடிக்கையை, அரசு முடுக்கிவிட்டுள்ளது. 'கொரோனா வைரஸ்' தொற்று பரவுவதாக தகவல் பரவியதால், மக்கள் பீதி அடைந்ததுடன், முட்டை, கோழி இறைச்சியை உட்கொள்வதை தவிர்த்துள்ளனர். அதனால், அதன் நுகர்வு சரிந்து, விலை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 450 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு வந்த கொள்முதல் விலை, படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று முன்தினம், 265 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கிடையில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்று, ஒரே நாளில், 70 காசு குறைக்கப்பட்டு, 195 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு முட்டை, 2.27 காசு முதல், 300 காசு வரை விற்பனையாகிறது. அதேபோல், தமிழக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை முட்டையிடும். அதன்பின், இறைச்சிக்காக, விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கொள்முதல் விலை, 60 - 70 ரூபாய் என, நிர்ணயம் செய்துள்ள போதும், கிலோ, 25 ரூபாய்க்கூட யாரும் வாங்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. கொரோனா வைரஸ் பீதி காரணமாக, கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில், தினமும், நான்கு கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், கோழிகளுக்கு தீனி போட முடியாத நிலையில், தினமும், 20 முதல், 30 லட்சம் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. கோழிகள் உயிரோடு இருப்பதற்காக, 110 கிராம் அளவில் போட்ட தீவனம், தற்போது, 50 - 60 கிராம் அளவுக்கு போடப்படுகிறது. இன்றைக்கு, ஒரு முட்டை, ஒரு ரூபாயில் இருந்து, 150 காசுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, தினமும், ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஒன்றரை மாதத்தில், முட்டை மூலம், 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முட்டை கோழியை பொறுத்தவரை, கிலோ, 25 ரூபாய்க்கு கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. இந்த கோழி, கேரளா, கர்நாடகாவுக்கு, வாரம், ஆறு முதல், ஏழு லட்சம் கிலோ விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வாரம், ஒரு லட்சம் கோழி கூட போகவில்லை. இந்த மாதம் மட்டுமே, 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி கொள்முதல் விலை, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு, தமிழ்நாடு, கேரளாவுக்கு, 35 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனை செய்யப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில், தினமும், 40 முதல், 50 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த, 18 நாட்களில் மட்டும், 300 கோடி ரூபாயும், பிப்ரவரியில், 300 கோடி என, மொத்தம், 650 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக, முட்டை, முட்டைக்கோழி, கறிக்கோழி மூலம், பண்ணையாளர்களுக்கு, 1,350 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டுக்கறி விலையில் மாற்றமில்லை: பிராய்லர் கறிக்கோழி விலை வீழ்ச்சியடைந்த நிலையில், ஆட்டுக்கறி விலையில் மாற்றமில்லை. சேலத்தில், வெள்ளாட்டு கறி கிலோ, 700 ரூபாய், செம்மறி ஆட்டு கறி கிலோ, 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், 'கொரோனா வைரஸ்' எதிரொலியாக, பிராய்லர் கறிக்கோழி விலை வீழ்ச்சியால், பலர் நாட்டுக்கோழி பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால், அதன் விலை கடந்த வாரத்தை விட, 50 ரூபாய் அதிகரித்து, ஆட்டுக்கறி விலையை விட எகிறிவிட்டது. நேற்று, கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி உயிருடன் கிலோ, 590 ரூபாய், தனிக்கறி கிலோ, 750 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X