சேலம் - நெல்லைக்கு 4 மணி நேரத்தில் பறக்கலாம்: ரெட்பஸ் இணையதள முன்பதிவில் தில்லாலங்கடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் - நெல்லைக்கு 4 மணி நேரத்தில் 'பறக்கலாம்': 'ரெட்பஸ்' இணையதள முன்பதிவில் தில்லாலங்கடி

Added : மார் 19, 2020
Share

'சேலத்திலிருந்து, நெல்லைக்கு, 4 மணி நேரத்தில் பயணிக்கலாம்' என, ரெட்பஸ் இணைய தள முன்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கட்டணமும் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அதில் முன்பதிவு செய்து, பயணிக்கும்போது, அதை சோதித்து பார்க்கும் கண்டக்டர்கள் மீதி கட்டணம் கேட்பதால் தகராறு ஏற்படுகிறது.
தென் மாவட்டங்களிலிருந்து, கரூர், சேலம் வழியாக, பெங்களூருக்கு, 22 எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிக்க, பஸ் ஸ்டாண்டுகளிலுள்ள முன்பதிவு மையங்கள் - 54 மட்டுமின்றி, இணையதளம் மூலமும் முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் சோதனை: இதில், 'ரெட்பஸ்' இணையதளத்தில், காலை, 2:30 மணிக்கு, சேலத்தில் புறப்படும், கன்னியாகுமரி, 'அல்ட்ரா டீலக்ஸ்' பஸ், காலை, 6:30 மணிக்கு (4 மணி நேரம்) நெல்லையை அடைவதாகவும், கட்டணம், 417 ரூபாய் என நிர்ணயித்து, டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், சரியான கட்டணம், 425 ரூபாய் முன்பதிவுக்கு, 25 ரூபாய் என, 450 ரூபாயாகும். சேலம் - நெல்லை பஸ், மதுரைக்கு செல்லாமல், எந்த இடத்திலும் நிற்காமல் சென்றால் மட்டுமே, குறைந்தபட்சம், 5:30 மணி நேரத்தில் நெல்லையை அடைய முடியும். கரூரில் நின்று, மதுரைக்குள் சென்று செல்லும்பட்சத்தில், குறைந்தபட்சம், 6:45 மணி நேரம் பயணித்தால் மட்டும், நெல்லையை அடைய முடியும். நிலைமை இப்படியிருக்க, 'ரெட்பஸ்' இணையதளத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டை, கண்டக்டர்கள் சோதித்தபோது, நிர்ணயிக்கப்பட்டதை விட, குறைந்த கட்டணம் பெறப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். அத்துடன், கூடுதல் தொகையை பயணியரிடம் கேட்டு வசூலிக்கின்றனர். இதனால், பயணியர் - கண்டக்டர்கள் இடையே, தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை உருவாகிறது. இதனால், பயணியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

நடவடிக்கை: அதேபோல், சேலம் - தேனி, கரூர் - நெல்லை உள்பட, 60 தடங்களில், 'ரெட்பஸ்' இணையதளத்தில், பயண நேரம், கட்டண குறைப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, விரைவு போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'ரெட்பஸ் இணையதளத்தில் சேலம் - நெல்லை தடத்தில் கட்டணம், பயண நேரம் குறைத்து, டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பாக, தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்தோம். அதில் தவறு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X