வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெனிவா: கொரோனா வைரசுக்கான தடுப்பூசி சோதனை துவங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அத்னோம் கூறியுள்ளார். வைரஸ் குறித்து சீனா தெரிவித்த 60 நாட்களில் இந்த சோதனை துவங்கியதாக தெரிவித்த அவர், எங்கு சோதனை நடக்கிறது என்பது குறித்து கூறவில்லை.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் டெட்ரோஸ் அத்னோம், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த ஆலோசனையின் போது கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெவ்வேறு வழிமுறைகளை கொண்ட பல சிறிய சோதனைகள் செய்வது என்பது, மக்களை காப்பற்ற எந்த சிகிச்சைகள் உதவுகின்றன என்பதற்கான தெளிவான மற்றும் வலிமையான ஆதாரங்கள் கிடைக்காது.. இதனால், உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சோதனை சிகிச்சை முறைகளை முறையாக ஆராய்வதற்காக ஒன்றாக செயல்படுகின்றனர்.
இந்த காரணத்தினால் தான் பல நாடுகளில், உலக சுகாதார அமைப்பும் அதன் கூட்டு நிறுவனங்களும் ஒரு ஆய்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் அந்த நாடுகளில் பரிசோதனை செய்யப்படாத சிகிச்சை முறைகளை, ஒன்றுக்கொன்றுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். அர்ஜென்டினா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஈரான், நார்வே, தென் ஆப்ரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள், இந்த சோதனையில் பங்கேற்பதாக ஒப்பு கொண்டுள்ளன. கொரோனா வைரஸ் குறித்த தகவலை தெரிவித்த 60 நாட்களில் தடுப்பூரி சோதனை துவங்கியுள்ளது.
பரவி வரும் உலக தொற்றை பல நாடுகள் எதிர்கொண்டு வருவதும், அதனால் அவை அவதிப்படுவதும் நமக்கு தெரியும். இருப்பினும் நமக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. மக்களுக்கு ஒருவருக்கு ஒருவர் இடைவெளி ஏற்பட செய்வது, விளையாட்டு நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மக்கள் அதிகளவில் கூட செய்வதை தடுக்க பல நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவ செய்வதை குறைக்க முடியும்.
அந்த நாடுகள், சுகாதார அமைப்புகள் மீது சுமை ஏற்றுவதை தடுக்கவும், நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் முடியும். ஆனால், உலகளாவிய நோய் தொற்றை குறைக்கவும், கட்டுப்படுத்தவும், நாடுகள் கட்டாயம் பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், சோதனை, சிகிச்சை மற்றும் சந்தேக நபர்களை கண்டறிய வேண்டும்.
கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், சோதனை மற்றும் ஒவ்வொரு சந்தேக நபர்களுக்கு சிகிச்சை மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து பரிந்துரை செய்யும். இதுதான், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி பரிசோதனை முக்கிய மைல்கல்லாக உள்ள நிலையில், இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
'நம்ப முடியாத சாதனை'
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் தாக்கத்தால், ஒட்டுமொத்த இத்தாலியும், இரண்டு வாரங்களாக முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் கொரோனா வைரஸ் பரவலும், அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்பும் கட்டுக்கடங்காத அளவுக்கு அங்கு அதிகரித்துள்ளது.
இத்தாலியை போன்று மற்ற ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சையளிக்க வேண்டும்.
அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, ஒரு 'நம்ப முடியாத சாதனை.' இந்த மருத்தை கொரோனா தொற்று உருவாகி 60 நாட்களில் கண்டறிந்துள்ள ஆய்வாளர்களை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம். இதுகுறித்து, சோதனை மற்றும் சிகிச்சை முறைகளை முறையாக மதிப்பீடு செய்ய, உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

"The first vaccine trial has begun, just 60 days after the genetic sequence of the #coronavirus was shared. This is an incredible achievement.
We commend the researchers around the world who have come together to systemically evaluate experimental therapeutics"-@DrTedros #COVID19
— World Health Organization (WHO) (@WHO) March 18, 2020