திருப்பூர்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோயின் பாதிப்பு மனிதர்களையும் தாண்டி, உலகப் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கத்தால், திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களில் வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது. இதற்கு தீர்வு காண்பதற்காக, திருப்பூர் பின்னலாடை சங்கத் தலைவர் ராஜா சண்முகம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் தலைவர் ஈஸ்வரன், நிட்மா சங்க தலைவர் ரத்தினசாமி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் இன்று(மார்ச்-19) காலை நடந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் கூறியதாவது:"கொரோனா வைரஸ் காரணமாக, திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த மூன்று மாதங்களாக ஏற்றுமதி வர்த்தகம், ரூ.6000 கோடி அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளது. ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொழில் நிறுவனங்களை, தற்காலிகமாக மூடலாமா என ஆலோசித்தோம். தொழில் நிறுவனங்களை மூடினால், இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அதனை தவிர்க்கும் வகையில் தொழிலாளர்களிடம், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட சுகாதாரங்களை செய்து கொடுத்து, உரிய பாதுகாப்புடன் தடையின்றி பின்னலாடை நிறுவனங்களை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளோம். இது தொழிலாளர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE