பொது செய்தி

தமிழ்நாடு

ஏளனங்கள் தான் என்னை செதுக்கும் தங்க உளிகள்!

Added : மார் 19, 2020
Share
Advertisement
 ஏளனங்கள் தான் என்னை செதுக்கும் தங்க உளிகள்!

நம்பிக்கையுடன் சொல்கிறார் நடிகர் கிங்காங்

மாற்றுத்திறனாளியாக இருந்து, சினிமாவில் நடிகராக தொடர்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், தமிழ் சினிமாவில், அப்படி பலர் சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வரிசையில், பல்வேறு சவால்களை கடந்து, 32 ஆண்டுகள் நகைச்சுவை நடிகராக கோலோச்சுகிறார் நடிகர் கிங்காங். அவர், கடந்து வந்த பாதை குறித்து, நம்மிடம் உரையாடியதில் இருந்து...

'கிங்காங்' தான் உங்கள் பெயரா?என் இயற்பெயர் சங்கர். திருவண்ணாமலை மாவட்டம், வரதராஜபுரம் கிராமத்தில் பிறந்தேன். ஒரு அக்கா, இரண்டு தங்கை. அரசு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். 13 வயதில், என் உயரம் ஒன்றரை அடி தான்.

இந்த உயரம் தான், உங்களை நடிகராக்கியதா?

எங்கள் ஊரில், சுப்பிரமணியன் என்பவர், 'சுவாமி சங்கரதாஸ்' என்ற நாடகக்குழு நடத்தினார். என் உயரத்தை பார்த்து, 'பபூன்' கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார். முதலில், பெற்றோர் தயங்கினர். பின், சம்மதித்தனர். என் முதல் நாடகம், அச்சரப்பாக்கத்தில் அரங்கேறியது.

நாடகத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

அந்த காலத்தில், இரவு, 10:00 மணி முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை நாடகம் நடைபெறும். ஒரு நாடகம் நடித்து முடித்தால், 5 ரூபாய் கிடைக்கும். மூன்று ஆண்டுகள், மேடை வழியாக மக்களை சிரிக்க வைத்தேன்.

சினிமா தேடலுக்கு உதவியது சகோதரியாமே?

நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, சக நண்பர்கள், 'உன் நடிப்பை பார்த்து தான், அதிக நேரம் சிரிக்கின்றனர். சினிமாவில் முயற்சி செய்து பார்' என்றனர். இதை, அக்கா மகாதேவியிடம் கூறினேன். மாமா ராதா, அண்ணா நகரில் உள்ள நண்பரிடம் அனுப்பி வைத்தார். அங்கிருந்து, சினிமா தேடல் துவங்கியது.சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்போது?சினிமா கம்பெனிகள் படியேறியே, ஓராண்டு கடந்தது. பலர், 'இவனை, எப்படி நடிக்க வைப்பது' என, நிராகரித்தனர். பி.ஆர்.ஓ., விஜயமுரளி தான், இயக்குனர் கலைப்புலிஜி.சேகரனிடம் அனுப்பி வைத்தார்.என் திறமையை பார்த்து, 1987ல், பாண்டியராஜன் நடித்த, ஊர தெரிஞ்சுக்கிட்டேன் படத்தில், என்னை நடிக்க வைத்தார்.

முதல் நாள் படப்பிடிப்பு, முதல் காட்சி குறித்து?

பெசன்ட் நகர் கடற்கரையில், தேர்தல் பிரசார பாடல் காட்சியை படமாக்கினர். அதில், ஒரு பானைக்குள் இருந்து வெளியே வரும் காட்சியில் நடித்தேன். இதைப்பார்த்து, பாண்டியராஜன் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.உங்களை, மக்களிடம் கொண்டு சென்றது, 'அதிசய பிறவி' படமாமே?ஆமாம். அதிசய பிறவி படத்தில், நடிகர் ரஜினியுடன் நடித்த பின் தான், சினிமா துறையில் பரவலாக அறியப்பட்டேன். நான் ஆடும் பிரேக் நடனத்தை, ரஜினி கட்டிலில் படுத்தவாறு ரசிக்கும் காட்சியை, 1.85 கோடி பேருக்கு மேல், 'யு டியூப்'பில் பார்த்துள்ளனர்.

சங்கர் எப்படி, 'கிங்காங்' ஆனார்?

இயக்குனர் கலைப்புலி ஜி.சேகரன், 'சினிமாவுக்கு, சங்கர் என்ற பெயர் வேண்டாம்; உன் உருவத்திற்கு ஏற்ப, ஆச்சர்யமாக பார்க்கும் அளவுக்கு பெயர் இருக்க வேண்டும்' என்றார்.நீண்ட யோசனைக்கு பின், 'கிங்காங் உருவத்தில் பெரிதாக இருக்கும். சிறிய உருவம் கொண்ட உனக்கு, பெரிய உருவம் கொண்ட கிங்காங் பெயர் வைத்தால் சரியாக இருக்கும்' என, இந்த பெயரை வைத்தார்.எந்தெந்த மொழிகளில், எத்தனை படங்களில் நடித்துள்ளீர்கள்?தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.வடிவேலுடன் நடித்த நகைச்சுவை காட்சிகளை, 'டிவி'யில் அடிக்கடி பார்க்க முடிகிறதே?வடிவேலுடன் சேர்ந்து நடித்த பின் தான், என் புகழ் பட்டி தொட்டி யெல்லாம் பரவியது. அவர், மீண்டும் நடிக்க துவங்கினால், என்னை போன்ற கலைஞர்கள், ஒரு, 'ரவுண்ட்' வருவோம்.நீங்கள் வெளியில் செல்லும் போது, பொதுமக்கள் பார்வை எப்படி உள்ளது?என்னை பார்த்ததும், நான் சினிமாவில் பேசிய வசனத்தை பேசி, என் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்ப முயல்வர். 'மார்க்கெட்ல விலைபோகாம இருக்க, நான் என்ன முத்தின கத்தரிக்காவா... டர்ர்ர்ர்... ஏன் பேசிட்டே இருக்கும்போது சேர நகத்துற.. நீயெல்லாம் டிரைவரா... உலகத்திலேயே இப்படி ஒரு இன்ஸ்பெட்டர நான் பார்த்ததே இல்ல' என, 'டயலாக்' பேசி கலாய்ப்பர். நானும், புன்னகையுடன் ரசித்து செல்வேன்.உங்கள் திருமண வாழ்க்கை குறித்து?'என்ன, இன்னும் கல்யாணம் பண்ணிக்கலயா, உன் சைசுக்கு பெண் கிடைக்குமா...' என, கிண்டலாகவும், அக்கரையாகவும் பலர் கேட்டனர். நான் திருமணத்தை பற்றி சிந்திக்காமல் இருந்த வேளையில், இயக்குனர் வேலுபிரபாகரன் தான், திருமணம் செய்வதற்கான அவசியத்தை உணர வைத்தார்.பெண் பார்த்த போது, என்ன பேசினீர்கள்?மனைவி கலா, வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரை பார்த்ததும், 'என் குறையை, மற்றவர்கள் உன்னிடம் சுட்டிக்காட்டும் போது, உன் மனம் மாறுமா...' என, மனம் விட்டு ஒரு மணி நேரம் பேசினேன்.'யார் என்ன சொன்னாலும், உறுதியாக இருப்பேன்' என, வாக்கு கொடுத்த பிறகு தான், திருமண வேலையை துவங்கினேன். வடபழநி முருகன் கோவிலில், 2001ல் திருமணம் நடந்தது. கீர்த்தனா, சக்திபிரியா, துரைமுருகன் என, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.உங்களுக்கு கிடைத்த விருது குறித்து?மாற்றுத்திறனாளி துறை சார்பில், 2009ல், தேசிய விருது கிடைத்தது. தனியார் நிறுவனங்கள் சார்பில், பல விருதுகள் கிடைத்துள்ளன. டாக்டர் பட்டமும் கிடைத்தது.

மேடை நிகழ்ச்சி குறித்து சொல்லுங்கள்?'பெஸ்ட் டேன்ஸ்' என்ற பெயரில், பல்சுவை நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். இதுவரை, 6,000 மேடைகளில், நிகழ்ச்சி நடத்தி உள்ளேன்.இது தான், எனக்கு சாப்பாடு போடுகிறது. சினிமா கொடுத்த முக அடையாளம், பல மேடைகளில் ஏற வைத்துள்ளது.

உயரம் குறைவு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியதுண்டா?பள்ளி பருவத்தில், என் உருவத்தை வைத்து பலர் கிண்டல், கேலி செய்துள்ளனர். அப்போது, மிகவும் மன உளைச்சல் ஏற்படும். எனக்குள் இருக்கும் தனித்திறமை தான், கேலி பேசியவர்கள் வாயை மூட வைக்கும் என முடிவு செய்து, நடனம், நகைச்சுவையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.கமல், ஆனந்தபாபு நடனங்களை உற்று கவனித்து ஆடினேன். அன்று என்னை கேலி செய்தவர்கள், என் நகைச்சுவை காட்சிகளை பார்த்து, அவர்கள் கவலையை போக்கிக் கொண்டனர்.படங்களில்,

உங்கள் கண், உயரத்தை கிண்டல் செய்து எடுக்கும் நகைச்சுவை காட்சிகள், சக மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதற்கு வழி வகுக்கும் என உணர்ந்தீர்களா?

எனக்கும், மன வருத்தம் உண்டு. நான் நடித்த காட்சிகளை பார்த்து, சந்தோஷம் அடைவதை நினைத்து, என் மன வருத்தத்தை போக்கிக் கொள்வேன். பலரது மனக்கவலையை போக்கும் மருந்தாக பயன்படுவது, மகிழ்ச்சி தானே!உங்களை போன்ற மாற்றுத்திறனாளிகள் குறித்து?கேலி, கிண்டலுக்கு ஆளாவதாக நினைத்து, பலர், வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எல்லா மனிதரிடமும், ஒரு தனித்திறமை இருக்கும்.அதை வெளிக்கொண்டு வருவ தற்கு, தன்னம்பிக்கை தேவை. எனக்கு கிடைத்த ஏளனங்கள் தான், என்னை செதுக்கும் தங்க உளிகள். இதை, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் உணர வேண்டும்.

-- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X