கூட்டப்படுமா? செங்கல்வராயன் சர்க்கரை ஆலை நிர்வாக குழுக்கூட்டம்...கரும்புக்கான பணம் கிடைக்குமா என விவசாயிகள் ஐயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டப்படுமா? செங்கல்வராயன் சர்க்கரை ஆலை நிர்வாக குழுக்கூட்டம்...கரும்புக்கான பணம் கிடைக்குமா என விவசாயிகள் ஐயம்

Added : மார் 20, 2020
Share
 கூட்டப்படுமா?  செங்கல்வராயன் சர்க்கரை ஆலை நிர்வாக குழுக்கூட்டம்...கரும்புக்கான பணம் கிடைக்குமா என விவசாயிகள் ஐயம்


பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழுக் கூட்டத்தை கூட்டாததால், கரும்புக்கான நிலுவைத் தொகை உடனடியாக கிடைக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நிலையில், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 40 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். பெரியசெவலை சர்க்கரை ஆலையால் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் கரும்பு பயிரினை அதிக அளவில் பயிரிட்டு வந்தனர்.இதனால் ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் லாபத்தை ஈட்டி தமிழகத்தில் முதலிடம் பெற்று சிறந்த ஆலை என்ற பரிசும் பெற்றது. ஆனால், காலப்போக்கில் சர்க்கரை ஆலையின் அரவைத் திறனும், லாபம் ஈட்டும் திறனும் குறைந்து கொண்டே வந்தது.சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளின் கரும்புக்கு பணம் உடனடியாக வழங்கப்படாமல் நிலுவைத் தொகையாக வைக்கப்பட்டு வந்தது.
இது விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. கரும்புக்கான நிலுவைத் தொகை கிடைக்காததால் கரும்பு பயிர் வைப்பதை விவசாயிகள் குறைத்துக் கொண்டனர். கரும்பு மகசூல் பரப்பளவு குறைந்ததால் ஆலைக்கு அரவைக்கான கரும்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி இருந்து வந்தது.இதனால் ஆலையின் வளர்ச்சிக்கான பணிகளை முடுக்கி விடப்பட்டது. அதன்பேரில் சர்க்கரை ஆலைக்கு நிர்வாக குழு உறுப்பினர்களாக 15 பேரும், ஆலை தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.நிர்வாக குழு உறுப்பினர்கள் சர்க்கரை ஆலை வளர்ச்சிக்கான கூட்டங்களை நடத்தி அதற்கான பணிகளில் தீவிரம் காட்டினர்.
இந்நிலையில் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரி, சர்க்கரை ஆலை நிர்வாக குழுக் கூட்டத்தை கூட்டாமல், எந்தவித வளர்ச்சிக்கான பணிகளில் தீவிரம் காட்டாமல் இருந்து வருவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சர்க்கரை ஆலையில் நிர்வாக குழுக் கூட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறாமல் உள்ளது. இதனால், சர்க்கரை ஆலையில் எந்த திட்டப் பணிகளும் நடக்கிறது என தெரியவில்லை. மேலும், ஆலை வளர்ச்சிக்கான திட்ட பணிகளை முடுக்கி விடுவது என எதுவும் இல்லாததால் விவசாயிகளுக்கு கரும்புக்கான பணம் கிடைக்குமா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, விவசாயிகள் பயிரிட்ட கரும்பு, அரவைக்கு எடுத்துக் கொள்வதற்காக உடனடியாக கட்டிங் ஆர்டர் வழங்கப்படாமல் காலம் கடத்தப்படுகின்றன. இதனால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கரும்பு பயிர் பூ வைத்து தக்க பாய்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.இதனால், கரும்பு எடை அளவு குறைந்து நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்டு சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக கொண்டு வரப்பட்ட கரும்பு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல மணி நேரம் காத்திருப்பதால் வாடகை வாகனம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.ஆலை நிர்வாகத்தின் இத்தகைய போக்கால் கரும்பு விவசாயிகள் காலம் கடத்துவதைத் தவிர்த்து, தனியார் ஆலைகளுக்கு தங்களது கரும்பை அனுப்பி வைக்கும் மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எனவே ஆலை நிர்வாகம் உடனடியாக நிர்வாக குழுக் கூட்டத்தைக் கூட்டி ஆலை வளர்ச்சிக்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். கரும்பு பணம் உடனடியாக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நமது நிருபர்-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X