சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20 ரூபாய்க்கு உயிர் கோழி செஞ்சி அருகே கூவி, கூவி விற்பனை

Added : மார் 20, 2020
Share
Advertisement


செஞ்சி : கொரோனா பீதியால் கறிக்கோழி விற்பனை சரிவடைந்துள்ள நிலையில், செஞ்சி அருகே நேற்று 2 கிலோ எடை உள்ள கறிக்கோழியை 20 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தமிழகத்தில் முட்டை மற்றும் கறிக்கோழி விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால் கறிக்கோழி நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 80 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ உயிர் கோழி, இந்த வாரம் 30 ரூபாய்க்கு வீழ்ந்தது. பண்ணைகளில் இருந்து கறிக்கோழிகளை வாங்கி வந்த நிறுவனங்கள் கோழிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றன.

கறிக்கோழி நிறுவனங்கள் பண்ணை உரிமையாளரிடம் கோழிக் குஞ்சுகளையும், தீவனத்தையும் கொடுத்து 45 முதல் 55 நாட்களுக்குள் வளர்க்கப்பட்ட கறிக்கோழியை திரும்பப் பெறுகின்றனர்.

கோழிகளை வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 7 ரூபாய் வரை கொடுக்கின்றனர். வளர்ந்த கோழிகளை உரிய காலத்தில் விற்பனை செய்யாவிட்டால் இறப்பு சதவீதம் அதிகமாகி பெரும் நஷ்டம் ஏற்படும்.

தற்போது கறிக்கோழி நிறுவனங்கள் பண்ணைகளில் வாங்கிச் சென்ற கோழிகளை விற்பனை செய்ய முடியாமல் தேங்கி இருக்கும் நிலையில், மேலும் கோழிகளை வாங்கிச் சென்றால், போக்குவரத்து செலவும் மிஞ்சாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பண்ணை உரிமையாளர்களை கோழிகளை அழிக்கும்படி கறிக்கோழி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வளர்த்ததற்கான தொகையை தர சம்மதித்துள்ளனர்.

இதே போன்று விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள கிராமத்தில் வளர்க்கப்பட்ட கறிக்கோழிகளை வாங்கிச் சென்றால் நஷ்டம் வரும் என்பதால் கோழிகளை பள்ளம் தோண்டி அழித்து விடும்படி கறிக்கோழி நிறுவனம் பண்ணை உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.

பண்ணை உரிமையாளர், கோழிகளை அழிப்பதற்கு பதிலாக இரண்டு முதல் இரண்டரை கிலோ எடையுடன் இருந்த உயிர் கோழிகளை 20 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அந்த வழியாக சென்ற வெளியூர் மக்களும் 20 ரூபாய்க்கு கிடைத்த உயிர் கோழிகளை வாங்கிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கறிக்கோழி நிறுவனங்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் ஏற்பட்டு வரும் பெரும் இழப்பைத் தடுக்க கறிக்கோழியால் கொரோனா பரவாது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X