உலக செய்திகள்

Added : மார் 20, 2020
Share
Advertisement



'டாப் 50'ல் 3 இந்தியர்கள்

லண்டன்:
'யுனெஸ்கோ' அமைப்பு, வர்கி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறந்த ஆசிரியருக்கான போட்டியில், வெற்றி பெறுவோருக்கு, 7 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும். இப்போட்டியில் பங்கேற்க, 140 நாடுகளைச் சேர்ந்த, 12ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், முதல் ஐம்பது இடங்களில், ராஜஸ்தானைச் சேர்ந்த, சிக் ஷா நிகேதன் பேர்பூட் கல்லுாரி ஆசிரியர், சுவஜித் பெய்ன், மஹாராஷ்டிராவின், பரித்வாடி ஆரம்ப பள்ளி ஆசிரியர், ரஞ்சித்சின் டிசலே, டில்லியின், எஸ்.ஆர்.டி.ஏ.வி., பப்ளிக் பள்ளி ஆசிரியை, வினிதா கார்க் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்கள், மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில், நவீன தொழில்நுட்பங்களையும், புதிய உத்திகளையும் புகுத்தி, பாராட்டு பெற்றுள்ளனர்.

**

'நான் சர்வாதிகாரி அல்ல'

மாஸ்கோ:
ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், அரசியலில் நுழைந்து, இம்மாதத்துடன், 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி 'டாஸ் டிவி'க்கு அவர் அளித்த பேட்டியில், ''ரஷ்யாவில் சர்வாதிகாரியாக செயல்பட்ட, ஜார் மன்னருடன் என்னை ஒப்பிட்டு பேசுகிறார்கள். அதில் உண்மையில்லை. மக்களுக்கு என்ன தேவையோ, அதன்படி பணியாற்றி வருகிறேன்,'' என, தெரிவித்துள்ளார்.

**

சிறையில் ஹார்வி வெயின்ஸ்டீன்

நியூயார்க்:
ஹாலிவுட் நடிகையரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தயாரிப்பாளர், ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு, கடந்த மாதம், நியூயார்க் நீதிமன்றம், குற்றவாளி என, தீர்ப்பளித்தது. இதைதொடர்ந்து, கடந்த வாரம், அவருக்கு, 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதயநோய் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். ஏஞ்சலினா ஜோலி உட்பட, ஏராளமான முன்னணி நடிகையரை பாலியல் வன்கொடுமை செய்த ஹார்வி வெயின்ஸ்டீன், தன், 68வது பிறந்தநாளை, சிறையில் கொண்டாட உள்ளார்.

**

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மறுநியமனம்

நியூயார்க்:
அமெரிக்காவில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின்போது, தனி நபர் தகவல் பாதுகாப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி கண்காணிக்கும், 'எம்.பி.சி.எல்.ஓ.பி.,' அமைப்பின் உறுப்பினராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வழக்கறிஞர், ஆதித்ய பம்சாய் உள்ளார். இவர் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, அவரை மீண்டும் உறுப்பினராக மறுநியமனம் செய்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

**

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள்

வாஷிங்டன்:
அமெரிக்காவைச் சேர்ந்த, தனியார் நிறுவனமான, ஸ்பேஸ் எக்ஸ், மே மாதத்தில், விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்திற்கு, விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது. 'பால்கன் 9' என்ற ராக்கெட் மூலம், நாசாவைச் சேர்ந்த, பாப் பெஹ்ன்கென், டக் ஹர்லி ஆகியோர், விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளனர்.

நாசா, செலவை குறைக்கும் பொருட்டு, தனியார் நிறுவனம் மூலம், முதன் முதலாக, விண்வெளி வீரர்களை ஆய்வுக்கு அனுப்ப உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X