பிளாஸ்டிக் குப்பை கடலில் அதிகரிப்பதால், கடல் ஆமைகள் அவற்றை உண்ண ஆரம்பித்து விட்டன. இது ஏன் என்று ஆராய்ந்த வல்லுனர்கள், முதலில், கிழிந்து மிதக்கும் பிளாஸ்டிக் பைகள் பார்ப்பதற்கு ஜெல்லி மீன் போல தெரிவதால், ஆமைகள் அவற்றை உட்கொண்டுவிடுவதாகக் கருதினர்.
ஆனால், கடலுக்குள் மிதக்கும் எல்லா வகை பிளாஸ்டிக் துண்டுகளையும் ஆமைகள் உட்கொண்டு விடுவதால், இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அமெரிக்காவிலுள்ள புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகத்தில் ஆமைகளை வைத்து ஆராய்ந்தபோது, அவற்றின் பிளாஸ்டிக் மோகத்திற்கான காரணம் பிடிபட்டது.
கடலில் பிளாஸ்டிக் குப்பை மிதக்கத் துவங்கிய சில வாரங்களிலேயே, அவற்றின் மேல் பாசி, பூஞ்சை மற்றும் கிருமிகள் குடியேறி விடுகின்றன. நீருக்குள் இவை கிளப்பும் வாடை, ஆமையின் மோப்ப சக்திக்கு உணவு போலத் தெரிவதால், ஆமைகள் பிளாஸ்டிக்கை, 'சுவாகா' செய்து விடுகின்றன.இந்த சிக்கலுக்கு தீர்வு?'கடலில் பிளாஸ்டிக் கலக்க விடாமல் தடுப்பதும், கடலில் மண்டியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மீட்பதும் தான்' என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE