தமிழ்நாடு

பொது இடங்களில் அதிகரிக்கும் விழிப்புணர்வு; 'கைகழுவி கைகழுவி கொரோனாவை விரட்டுவோம்'

Added : மார் 20, 2020
Share
Advertisement

மாவட்டத்தில் நாளுக்கு நாள் பொது இடங்களில், அரசு அலுவலகங்களில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதை வீடுகள், தெருக்கள், தனியார் அலுவலங்களிலும் கடைபிடித்து, சுகாதாரம் காத்து, நம்மை மிரட்டும் கொரோனாவை விரட்டியடிக்க உறுதி கொள்வோம்.
ஈரோட்டில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட், வணிக நிறுவனங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நான்கு மண்டலத்துக்கும் உட்பட்ட, அனைத்து பகுதிகளிலும் உள்ள, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு நுழைவு வாயிலில், கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப், ஹேண்ட் சேனிடைசர் போன்ற உபகரணங்களை வைக்க, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை: கொரோனாவை தடுக்க, அரசுத்துறை அலுவலகங்கள், திருமண மண்டபம், தியேட்டர், மருத்துவமனை, வணிக நிறுவனங்களில் லைசால் அல்லது சோடியம் ஹைப்போகுளோரைட் மூலம் தரைப்பகுதி, நாற்காலி, கதவு கைப்பிடி, ஜன்னல்கள், மாடிப்படி கைப்பிடிகள் ஆகிய இடங்களில், தினசரி மூன்று முறை சுத்தப்படுத்த வேண்டும். மக்கள், வாடிக்கையாளர் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக, நோய் தொற்றை தடுக்க ஹேண்ட் சேனிடைசர் அல்லது சோப், தண்ணீரை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், பொது சுகாதார சட்டம் 1939ன் படி வழக்குப்பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாண்டில்...: சுகாதாரத்துறை சார்பில், அந்தியூர் பஸ் ஸ்டாண்டில், சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சக்தி கிருஷ்ணன் மற்றும் சுகாதார பணியாளர்கள், பஸ்களில் கிருமி நாசினி தெளித்தனர். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிந்தவரை கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, துண்டுப் பிரசுரமும் வழங்கினர்.

தினசரி மார்க்கெட்டில்...: பவானி, தினசரி மார்க்கெட்டுக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் பவானி தினசரி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கம் சார்பில், மார்க்கெட்டில் பேனர் வைத்துள்ளனர். அதில், மார்க்கெட்டில் நுழையும் மக்கள், வியாபாரிகள் அனைவரும், கிருமி நாசினியில் கைகளை சுத்தம் செய்து கொண்டு உள்ளே வர அறிவுறுத்தியுள்ளனர்.

ரயில்வே ஸ்டேஷனில்...: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிய டிக்கெட் கவுன்டர் அருகே, பரிசோதனை முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் முதன்மை சுகாதார ஆய்வாளர் சூர்யபிரகாஷ் தலைமையில், சுகாதார பிரிவு அலுவலர்கள் பயணிகளை கண்காணித்து, சோதனை செய்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில்...: பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் போலீசார், முக கவசம் அணிந்து கொண்டு, கைகளை சுத்தமாக கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சித்தோடு போலீஸ் ஸ்டேஷனிலும், போலீசார் கைகளை சுத்தமாக கழுவி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில்...: ஈரோடு, அரசு மருத்துவமனை முன்பும், கருங்கல்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில், முககவசம், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட செயலாளர் சாம்ராஜ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், சுரேஷ், முத்துகுமார் உட்பட பலர், 1,500க்கும் மேற்பட்டோருக்கு முக கவசம் வழங்கினர்.

நேதாஜி மார்க்கெட்டில்...: ஈரோடு ஆர்.கே.வி., சாலையில், நேதாஜி தினசரி காய்கனி மார்க்கெட்டில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மாநகாரட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். விழிப்புணர்வு துண்டறிக்கையை வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு வழங்கினர். வெளிமாநில லாரிகளை சுத்தம் செய்வது தொடர்பாகவும், காய்கறிகளை சுத்தமாக கழுவி விற்பனை செய்வது தொடர்பாகவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் கட்டாயம் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வைத்திருக்க உத்தரவிடப்பட்டது. கடை, மார்க்கெட் வளாகத்தில் கிருமிநாசினி கரைசல், பவுடர் தெளிப்பது குறித்தும் அறிவுறுத்தினர்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X