உற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு: கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை| Dinamalar

தமிழ்நாடு

உற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு: கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

Added : மார் 20, 2020
Share

கரூர்: கரூர் சுற்று வட்டார பகுதிகளில், கோரைபுல் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், உரிய விலை கிடைக்க, அரசே கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் வாங்கல், என்.புதூர், பிச்சம்பாளையம், கடம்பங்குறிச்சி, தளவாய்பாளையம், தோட்டக்குறிச்சி, நெரூர், மரவாப்பாளையம், புதுப்பாளையம், திருமாகூடலூர், அச்சமாபுரம், சோமூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோரை பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் போதும், குறைந்த பட்சம், 30 ஆண்டு வரை, ஆறு மாதத்துக்கு, ஒருமுறை அறுவடை செய்யலாம். அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவில்லாத கோரை புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோரை புல் மூலம், பொதுமக்கள் உறங்க பயன்படுத்தும் பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், கான்கீரிட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, கோரை புல் உற்பத்தி அதிகரித்துள்ளது இந்நிலையில், கடந்த, 15 நாட்களாக, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோரை புல் அறுவடை துவங்கியுள்ளது. ஆனால், உற்பத்தி அதிகரிப்பால், போதிய விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, கரூர் நெரூரை சேர்ந்த கோரை புல் விவசாயிகள் கூறியதாவது: பதினாறு இன்ச் கொண்ட, ஆறு கோரைபுல் கட்டுகள், 1,500 ரூபாய் வரை, ஆறு மாதங்களுக்கு முன் விலை போனது. தற்போது, 900 ரூபாய்தான் அதிகபட்சமாக கிடைக்கிறது. இடைத்தரகர்கள் மூலம்தான், கோரை புல்லை விவசாயிகள் விற்க முடிகிறது. நேரிடையாக விற்பனை செய்ய வழியில்லலை. இதனால், அறுவடை காலங்களில் நெல்லுக்கு கொள்முதல் மையம் திறக்கப்படுவது போல, கோரைபுல்லுக்கும் கொள்முதல் நிலையத்தை அரசே திறக்க வேண்டும். அப்போது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X