கரூர்: உலக நாடுகளில், கொரோனா தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், கரூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கு, ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்புகள், கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு உட்பட பல்வேறு வீட்டு உபயோகங்களுக்கான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உட்பட பல்வேறு ஐரோப்பா நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு, 3,500 கோடி ரூபாய் வரை, அன்னிய செலாவணி வருவாய் ஈட்டி தருகின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் செயலாளர் கோபாலகிருஷணன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பல நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதில், கரூரிலிருந்து வீட்டு உபயோக துணி பொருட்கள், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அங்கு, கொரோனா நோய் தாக்கம் காரணமாக, வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால், சரக்குகளை அனுப்ப முடியாமல், 150 கோடி ரூபாய் அளவில் கன்டெய்னர் மற்றும் கிடங்குகளில் தேங்கியுள்ளன. இதுமட்டுமின்றி வரும், மூன்று மாதங்களுக்கு, 500 கோடி ரூபாய் அளவிற்கு கிடைக்கும் ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கம் குறைந்தால் மட்டுமே தொடர்ந்து ஆர்டர்கள் கிடைக்கும். எனவே, தொழிலாளர்களின் பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவற்றை செலுத்த, ஆறு மாதங்களுக்கு விலக்களிக்க வேண்டும். ஏற்றுமதி கடன்களுக்கு வட்டி தள்ளுபடி, அபராதம் இல்லாமல் தவணை நீடித்து தர வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் அளவில் வங்கிகள் மூலம், முன் பணம் வழங் சலுகை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE