'கொரோனா'வை தடுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

Updated : மார் 21, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 Modi,corona,  மோடி, ஆலோசனை,கொரோனா, பிரதமர், தடுப்பு நடவடிக்கை


புதுடில்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி, நேற்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ், நம் நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நாடு முழுவதும், நாளை காலை, 7:00 மணியிலிருந்து, இரவு, 9:00 மணி வரை சுய ஊரடங்கு நடைமுறையை பின்பற்றும்படி, மக்களுக்கு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, சில முக்கியமான ஆலோனைகளை பிரதமர் மோடி தெரிவித்தார். முதல்வர்களும், தங்கள் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள மற்றும் எடுக்க திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.


223 பேருக்கு பாதிப்புஇதில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். தமிழக முதல்வருடன், பிரதமர் நடத்திய ஆய்வில், அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம் மற்றும் அரசு துறை செயலர்கள் பங்கேற்றனர்.மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும், 223 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள், தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் தவிர, கொரோனா பாதிப்புள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தவர்கள் என, 6,700 பேர், கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப் புக்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

மக்கள், பொது இடங்களில் கூடுவதையும், ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவது, பேசுவது போன்றவற்றை தடுப்பதன் மூலம், கொரோனாவை பெருமள வில் தடுக்க முடியும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


சமூக தொற்று இல்லைமத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:ஒருவருக்கு கொரோனா பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டால், அது, சமூக நோய் தொற்று நிலையாக கருதப்படும்.

ஒருவர், தனக்கு நோய் தொற்று இருப்பது தெரியாமல், மற்றவர்களுக்கு அதை பரப்புவதே, சமூக நோய் தொற்றுக்கு காரணம். இது போன்ற நிலை ஏற்பட்டால், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இந்த நிலை தான் ஏற்பட்டது. நம் நாட்டில், சமூக நோய் தொற்று நிலை ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவ்வாறு வந்தவர்கள் மூலம் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே, 223 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். பயப்படவோ, பதற்றம் அடையவோ எதுவும் இல்லை. நம் நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடனும், வைரசை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கேட்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


எம்.பி.,க்களுக்கு வேண்டுகோள்பார்லிமென்டின் இரு சபைகளிலும், எம்.பி.,க் களாக பதவி வகிக்கும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 38 டாக்டர்களை, தங்கள் தொகுதிகளில், கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுமாறு, பார்லி., விவகாரத்துறை அமைச்சர், பிரஹலாத் ஜோஷி, நேற்று கேட்டுக் கொண்டார்.


முழுமையாக முடங்கிய காஷ்மீர்ஜம்மு - காஷ்மீரில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் கூட்டமாக நடமாடுவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகில், முக்கிய வேலைகளுக்காக செல்வோர், அதற்கான ஆவணங்கள், அடையாள அட்டைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், நேற்று இரண்டாவது நாளாக, முழுமையாக முடங்கிய பகுதியாக, காஷ்மீர் காட்சி அளித்தது.


'பாலிவுட்' பாடகிக்கு கொரோனா தனிமையில் இருக்கும் நடிகை'பாலிவுட்' படங்களின் இயக்குனர், சேகர் கபூரின் மகள் காவேரி, அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் இசைக்கல்லுாரியில் படித்து வந்தார். கொரோனா காரணமாக கல்லுாரி மூடப்பட்டதால், நேற்று முன்தினம் இந்தியா வந்தார். விமான நிலைய பரிசோதனையில், காவேரிக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என அறிந்தும், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். நடிகையும், எழுத்தாளருமான அவரது தாய் சுசித்ரா கிருஷ்ண மூர்த்தியும், வீட்டில் தனிமையில் இருந்து வருகிறார்.
பிரிட்டனில் இருந்து லக்னோ வந்த, பாலிவுட் பின்னணி பாடகி கனிகா கபூருக்கு நடந்த பரிசோதனையில், அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், மருத்துவ மனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலிவுட் பழம்பெரும் நடிகர், அனுபம் கெர், அமெரிக்காவில் இருந்து நேற்று மும்பை திரும்பினார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், வீட்டில், தானே முன் வந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மகனை மறைத்த பெண் அதிகாரி, 'சஸ்பெண்ட்


'

தென்மேற்கு ரயில்வேயில், பெண் அதிகாரி ஒருவரின், ௨௫ வயது மகன், ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பி உள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது. அதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், பெண் அதிகாரி, பெங்களூரில் உள்ள ரயில்வே ஓய்வு விடுதியில், மகனை தங்க வைத்துள்ளார். இதனால், பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக, ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறினார்.


'குடி' மகன்களின் ஒழுங்குகொரோனா பரவலை குறைப்பதற்காக, மக்கள் ஒருவருக்கொருவர், இடைவெளி விட்டு, பொறுப்புடன் செயல்படுமாறு, கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து, வட கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தின் மதுபானக் கடை ஒன்றில், மது வாங்க வரிசையில் நிற்கும் குடிமகன்கள், 1 மீட்டர் இடைவெளி விட்டு ஒழுங்குடன் நின்று மது வாங்கி சென்ற, 'வீடியோ' சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.


ரோட்டில் தும்மியவர் மீது தாக்குதல்மஹாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரின் குஜாரி பகுதியில், பைக்கில் வந்த ஒருவர் தும்மினார். எதிரே பைக்கில் வந்தவர், 'கொரோனா வைரஸ் பரவும் நிலையில், ஏன் முகத்தை கைக்குட்டையால் மறைக்காமல் வந்து, இதுபோல பொது இடத்தில் தும்முகிறீர்கள்' என, கேட்டார்.
அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தும்மிய நபர் தாக்கப்பட்டார். இந்த சண்டையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 'இந்த பிரச்னை தொடர்பாக, புகார் ஏதும் இல்லை' என, போலீசார் கூறினர்.


வீட்டு தனிமையில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சுக்கேந்து சேகர் ராய், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, கடிதம் மூலம், தகவல் தெரிவித்தார்.
'பாலிவுட்' திரைப்பட பின்னணி பாடகி, கனிகா கபூருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சமீபத்தில் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகனும், பா.ஜ., - எம்.பி.,யுமான துஷ்யந்த் சிங், கலந்து கொண்டார்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவருக்கு நேர் பின்னால், திரிணமுல் காங்., - எம்.பி., டிரெக் ஓ பிரெய்ன் அமர்ந்திருந்தார். இதனால், அவரும், தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பார்லி., கூட்டத் தொடரிலும், துஷ்யந்த் கலந்து கொண்டது, பல எம்.பி.,க்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இரு, எம்.எல்.ஏ.,க்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக, நேற்று அறிவித்தனர்.

துபாயில் இருந்து சமீபத்தில் திரும்பிய நபர் ஒருவர், திருமண நிகழ்ச்சியில், இரு எம்.எல்.ஏ.,க்களுடன் நெருங்கி நின்று, 'செல்பி' எடுத்துக் கொண்டார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவித்து
உள்ளனர்.


சலுான்களை மூட உத்தரவுஉத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கூடங்கள், காபி ஷாப்கள், முடி திருத்த நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை, இம்மாதம், 31 வரை மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வந்தது.


நீதிமன்ற கட்டுப்பாடு நீட்டிப்புடில்லி உயர் நீதிமன்றத்தில், இம்மாதம், 31 வரை, முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டித்து, நீதிமன்ற நிர்வாக கமிட்டி, நேற்று உத்தரவிட்டது.
மேலும், 'ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பயணியர் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து, மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் பதில் அளிக்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.


'விசா' நீட்டிப்பு!* கொரோனா பாதிப்பை கட்டுப் படுத்துவது குறித்து, இந்தோ - பசிபிக் நாடுகளின் அதிகாரிகள், நேற்று, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினர். இதில், நம் நாட்டின் சார்பில், வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா பங்கேற்று, சில ஆலோசனைகளை தெரிவித்தார்
* இந்தியாவுக்கு சுற்றுலா வந்து, கொரோனா வைரஸ் காரணமாக, தங்கள் நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கான, விசா காலத்தை, ஏப்., 15 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
* கொரோனா வைரஸ் பாதிப்பால், கால்நடைத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும்,
மத்திய கால்நடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்
* கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரி செய்வதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வின் முதல் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது
* ஐரோப்பிய நாடான இத்தாலியிலிருந்து சுற்றுலாவுக்கு வந்திருந்த, 69 வயது நபர், கொரோனா பாதிப்பு காரணமாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அவருக்கு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சையளித்தும், பலனின்றி, நேற்று அவர் உயிர்இழந்தார்.


'அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு வேண்டாம்'மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு, கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. 15 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவர்.
ஆனால், இவர்களில் சிலர், முகாம்களில் தங்க மாட்டோம் என பிடிவாதம் பிடிக்கின்றனர். முகாம்களில் உள்ள மாணவர்களின் பெற்றோர் சிலர், தங்கள் மகன் அல்லது மகள்களை அங்கிருந்து அனுப்பும்படி வலியுறுத்துகின்றனர். 'எங்கள் வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறோம். முகாமிலிருந்து அனுப்புங்கள்' என, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது, சரியான செயல் அல்ல. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால், நாட்டில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான், முகாம்களில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கிறோம். இதை தவறாக புரிந்து கொண்டு, சிலர் ஒத்துழைக்க மறுப்பது, ஏமாற்றம் அளிக்கிறது. அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், 14.30 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டில், 223 பேர், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 32 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
நாடு முழுவதும், 20 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். 69 ஆயிரம் பேர், அவர்களது வீடுகளிலேயே, தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு, இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதே சிறந்த வழியாக இருக்கும். பொதுமக்கள் ஒன்று கூடுவது, பொது இடங்களுக்கு வருவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.


கேரள ஐகோர்ட் உத்தரவுக்கு தடை'கொரோனா காரணமாக, பொதுமக்களிடம் இருந்து கடன், வரி உள்ளிட்டவற்றை, ஏப்., ௬ம் தேதி வரை, வங்கிகள், நிதி நிறுவனங்கள், வருமான வரித்துறை வசூலிக்க வேண்டாம்.
'ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கும் இந்த தடை பொருந்தும்' என, கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை எதிர்த்த மத்திய அரசின் மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், இடைக்கால தடை விதித்தது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202014:48:02 IST Report Abuse
நக்கல் அரசாங்கம் கொரோனா அவசர நிதி ஒன்றை உருவாக்கி பணக்காரர்களையும், பொது மக்களையும் நிதி அளிக்க சொல்லி கோரிக்கை விடுக்கவேண்டும்.. வெறும் அரசாங்கத்தால் மட்டும் இந்த பேராபத்தை சமாளிக்க முடியாது... புயல், வெள்ளம் வந்தாலே நிதி திரட்டும் நாம் கொரோனவுக்கு நிச்சயம் இப்பொழுதே செய்வது நல்லது.. பலர் கொடுக்க முன்வருவார்கள்...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-மார்-202009:56:29 IST Report Abuse
அசோக்ராஜ் கொரோனா நிவாரண திட்டம் தொடங்கி ஆளுக்கு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யுங்கன்னு முதல்வர்கள் கேட்டிருப்பாங்க. அவ்ளோ முடியாது. கால்வாசி மத்தி தரும். மீதியை மாநிலம் பெட்ரோல் வரி கூட்டி எடுத்துக்கோங்கன்னு தலை சொல்லியிருப்பாரு. ஓட்டுப் போடும் இயந்திரம் இலவசமா எவ்ளோ தேரும்னு ஆசையா காத்திருக்கும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-மார்-202008:21:51 IST Report Abuse
blocked user காற்றோட்டமாக இருக்கவேண்டும். அது தவிர சூரியன் மீதுள்ள பகையை நீக்கி மதம் பார்க்காமல் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். காலை மாலை இரண்டு வேலைகளிலும் சூரியனை நோக்கி பத்து நிமிடமாவது நிற்கவேண்டும். சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் எல்லா வகையான கரோனா வைரஸ்களையும் கட்டுப்படுத்த வல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X