பொது செய்தி

தமிழ்நாடு

எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?

Added : மார் 20, 2020
Share
Advertisement

'கொரோனா' பீதியில், தொண்டர்கள் எல்லாம், வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதாக, ஐவர் குழு அறிக்கை அளித்திருக்கிறது. காலியாக இருக்கும் இருக்கைகளை பார்த்தால், எதிர்க்கட்சிக்காரர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுமேஎன்ற, தொலைநோக்கு பார்வையால், தெருக்கூட்டத்தை ரத்து செய்து விட்டேன். உதிரி கட்சிகளும், 'லெட்டர்பேடு' கட்சிகளும், எனது அறிவிப்பால், குதுாகலமாக இருப்பதாக சற்று நேரத்துக்கு முன், உளவுத்துறையிடம் இருந்து தகவல் கசிந்து வந்தது.
மற்ற கட்சியினர், தேர்தல் சமயத்தில் மட்டுமே, தெருவில் நின்று பிரசாரம் செய்வர். எனக்கோ, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கே, 'டப் பைட்' கொடுக்கும் தகுதியிருப்பதாக, சில அரசியல் விமர்சகர்கள் கூறுவதால், வீதி வீதியாய் சென்று, மைக்கில் பேச முடிவெடுத்துள்ளேன்.இதற்காக, நான் ஒன்றும், பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை திரட்ட முடியாமல், 'தள்ளாடும்' அரசியல்வாதி என கருதி விட வேண்டாம். பிரியாணியும், 'புல்'லும் கொடுத்து, ஆயிரம் ரூபாய் பேட்டா கொடுக்கும் மூன்றாம் தர அரசியல்வாதியும் அல்ல. என் தொண்டர்களை கஷ்டப்படுத்தாமல், அவர்களின் காதுகளுக்கே, கருத்துகளை கொண்டு சேர்க்கவே, இத்தகைய ஏற்பாடு.போன வாரம், நம்ம முனுசாமி வீட்டு கல்யாணத்துக்கு போயிருந்தேன்.
ஏழை தொண்டன் என்ற, ஒரே காரணத்தால், மூச்சு முட்ட சாப்பிட்டு விட்டு, மொய்யாக, 100 ரூபாய் வைத்து விட்டு, கல்யாண செலவு விவரங்களை கேட்டேன். அப்பப்பா... எத்தனை செலவு... எத்தனை செலவு! 'வீட்டை கட்டிப்பார்; கல்யாணம் செய்துபார்' என்ற பழமொழி எவ்வளவு பொருத்தமானது.
அந்த ஏழை தொண்டன், தன் மகளின் திருமணத்துக்கு உதவி கேட்டு விண்ணப்பித்திருக்கிறான். எல்லாம், 'ஆன்லைன்' மயம் என பீற்றிக் கொள்கிறது, மாநில ஆளும்கட்சி. வருமான சான்றிதழுக்கு, 3 ஆயிரம் ரூபாயாம். விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால், விசாரணைக்கு வருவோருக்கு, 5 ஆயிரம் ரூபாயாம். பள்ளிப்படிப்பு முடித்திருந்தால், கிடைக்கும் உதவித்தொகையில், 5 ஆயிரமாம். பட்டப்படிப்பு முடித்திருந்தால், 10 ஆயிரமாம். இப்படியே பட்டியல் போட்டு போட்டு, கந்துவட்டிக்கு கடன் வாங்கியது தான் மிச்சம் என்கிறான் முனுசாமி.அதிகாரிகளே...! உங்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். ஏழைகளின் வயிற்றில்தான், அடிக்க வேண்டுமா? 'தாலிக்கு தங்கம்' என கூறி கொண்டு கோஷம் போடுகிறீர்களே... அந்த எட்டு கிராம் தங்கம் கைக்கு கிடைக்கும்போது, குழந்தையே ஸ்கூலுக்கு போய்விடும் அளவுக்கு, காலத்தை கடத்துறீங்களே. இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா?தங்கம் வாங்கிதான், தாலி செய்யணும்னு இருந்தா, என்னாவது? திட்டத்துக்கு பெயர் வைத்த அந்த மகராசனை தேட, நம்ம முட்டுச்சுவரு சங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
அவர் மட்டும் சிக்கினால், சின்னா பின்னமாக்கி விடுவேன்.'கொரோனா' புண்ணியத்தால, பள்ளிக்கூடங்களுக்கு லீவு விட்டுருக்காங்க. இந்த சமயத்திலே, கட்சியை பலப்படுத்தப் போறேன். 'பில்டிங் ஸ்டிராங்; பேஸ்மென்ட் வீக்'குன்னு சொல்வாங்க. நான், பேஸ்மென்ட்டை ஸ்டிராங்க்கா போடப்போறேன். அதுக்காக, நம்ம கட்சிக்கு மாணவர் அமைப்பு துவங்குற ஐடியா வச்சிருக்கேன்.
இதை நான் பேசிக்கொண்டிருக்கும்போதே, சில மீம்ஸ் கிரியேட்டர்கள், சமூக வலைதளங்களில் என் எதிர்கால அரசியல் தந்திரங்களை, கசிய விடுறதுக்கு வாய்ப்பிருக்கு. இதுக்கெல்லாம் கவலைப்படுபவன் நான் அல்ல. வீடு வீடாக இலவசமாக 'மாஸ்க்'கும், கை கழுவ சோப்பும் கொடுத்தாவது, தாய்மார்களின் ஆதரவோடு, மாணவர் அமைப்பை உருவாக்கி விடுவேன்.
இதில் பெண் குழந்தைகளைசேர்த்தால், கூடுதலாக ஒரு மாஸ்க் வழங்கும், அதிரடி ஆபரும் வைத்திருக்கிறேன்.பெண் குழந்தை என்றபோது தான், நேற்று நடந்த சம்பவம், என் மூளைக்குள் மணியடித்தது. பெண் குழந்தைகளை பாதுகாக்க, அரசாங்கமே அவர்களது வங்கி கணக்குல, காசு போடுறாங்களாம். ஒரு குழந்தைன்னா, 50 ஆயிரமும், 2 குழந்தைன்னா ஒவ்வொரு பெண் குழந்தை பேர்லயும், தலா 25 ஆயிரமும் 'டெபாசிட்' பண்றாங்களாம்னு, நம்ம சுமார் மூஞ்சி குமாரு சொல்லியிருந்தான்.
ஆஹா, நல்ல அறிவிப்பா இருக்கேன்னு, விசாரிக்க போன இடத்துல தான், உண்மை தெரியுது.அந்த தொகை, 18 வயசுக்கு அப்புறம் தான் கிடைக்குமாம். வட்டி குட்டி போட்டு, 'லம்ப்பா' தொகை கிடைக்கும்னு நினைச்சா, என் புள்ளைக்கு, 21 வயசாகிடுச்சு, இன்னும் தொகை வங்கி கணக்கு வரலைன்னு, ஒரு அக்கா ஆபீசு முன்னாடி குத்தவச்சி, அழுதுக்கிட்டு இருந்துச்சு.
இதுக்கெல்லாம் என்னய்யா, கணக்கு? எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?இப்படியே எல்லா திட்டங்கள்லயும் ஏமாத்துறதுக்கு எதுக்கு, சமூக நலம்னு பேர் வைக்கணும் என கேட்கத் தோன்றுகிறது. இதற்கு மேல் பேசினால், என் முகவரியை தேடி வந்து, வெட்டுவதாக கூறிய, அந்த மகாராசனின் எச்சரிக்கையை, மானசீகமாக மதித்து, விடைபெறுகிறேன். ஆனால், மீண்டும் வருவேன்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X