பொது செய்தி

தமிழ்நாடு

மரங்கள் பேசும் மனிதத்தின் பெருமையை!

Added : மார் 20, 2020
Share
Advertisement
 மரங்கள் பேசும் மனிதத்தின் பெருமையை!

கோவையை சேர்ந்த ஆட்டோ டிரைவரும், சுமை துாக்கும் தொழிலாளியும் இணைந்து, பொது இடங்களில் மரக்கன்று நட்டு வளர்க்கும் பணியை ஆர்வத்துடன் செய்வது, பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரகாஷ், 42; லோடு ஆட்டோ டிரைவர்.
இவரும், ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமலிங்க ஜோதி நகரை சேர்ந்த சவுந்திரராஜன், 60, என்பவரும் இணைந்து, கோவை மாநகரின் பிரதான பகுதியில் மரக்கன்று நட்டு பராமரிக்கின்றனர். வாழ்வாதாரத்துக்காக, அன்றாடம் உழைக்க வேண்டிய நிலையில் இருந்தாலும், இயற்கை மீதான ஆர்வம், அவர்களை ஒன்று சேர்ந்து, பணியாற்ற வைத்துள்ளது.பிரகாஷ் கூறுகையில், ''சிறு வயது முதலே இயற்கை மீது ஆர்வம் உண்டு. 20-25 ஆண்டுக்கு முன் இப்பகுதியில் நிறைய மரங்கள் இருந்தன. வீடுகள் குறைவாக இருந்தன. இப்போது வீடுகள், அபார்ட்மென்ட்கள் அதிகரித்து விட்டன.
மரங்களை காணவில்லை; வெப்பமும் அதிகரித்து விட்டது.''சுத்தமான காற்று, நோயற்ற வாழ்க்கை சூழல் வேண்டுமெனில், மரங்கள் அவசியம். அந்த எண்ணத்துடன், 4 ஆண்டுக்கு முன், மரக்கன்று நடும் வேலையை துவக்கினேன். நடவு செய்த கன்றுகளை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை பாதுகாக்கும்படி கேட்கிறோம். யாரும் முன் வராத இடங்களில், நாங்களே பராமரிக்கிறோம். பவர் ஹவுஸ், கிராஸ்கட் ரோட்டில், 140 மரக்கன்று நட்டிருக்கிறோம். 100 அடி ரோட்டிலும் மரக்கன்று நடுவதற்கு திட்டம் இருக்கிறது.''புங்கன், பூவரசு, அரசு, ஆல், வேம்பு மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடவு வேலையை செய்கிறோம். மற்ற நாட்களில் பராமரிப்பு, பாதுகாப்பு போன்ற வேலைகளை செய்கிறோம்,'' என்றார்.இவருடன் இணைந்து பணியாற்றும் சவுந்திரராஜன், 60, கூறியதாவது:நான் சுமை துாக்கும் தொழிலாளி. முதலில் பூச்செடி வளர்ப்பதில் ஆர்வம் இருந்தது. காலப்போக்கில் மரம் வளர்க்க ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்குபின் கொஞ்சம் இடம் இருக்கிறது. அங்கு நாற்று தயார் செய்வேன்; கொஞ்சம் வளர்ந்ததும் வேறிடத்தில் நடவு செய்வேன்.பைக்கில் எப்போதும் மரக்கன்று இருக்கும். யார் கேட்டாலும் கொடுப்பேன்.
பிரகாஷ், ஒரு நாள் என்னிடம் கேட்டார். அப்போது தான், அவரும் நானும் ஒரே வேலையை செய்வது தெரிந்தது. இப்போது இருவரும் இணைந்து மரக்கன்று நடுகிறோம்.இப்பூமியில் இருந்து போகும்போது எதுவும் கொண்டு போகப் போவதில்லை. எதை விட்டுச் சென்றார் என யாரும் கேட்டால், '100 மரங்கள் விட்டுப்போனார்' என சொல்லும்போது, நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும். நம்மால், சக மனிதர்களுக்கு சுத்தமான காற்றும், ஆரோக்கிய வாழ்வும் கிடைக்கிறது என்பது நமக்கு பெருமை தானே, என்றார் சவுந்திரராஜன்.
இவர்களுடன் இன்னும் சிலரும் சேர்ந்து, இத்தகைய பசுமை பணியை செய்கின்றனர். தங்கள் அமைப்புக்கு, 'பசுமை தொடர்ச்சி' என்ற பெயரை சூட்ட இருக்கிறோம் என்கிறார், பிரகாஷ். இவர்களது பணி, சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X