பொது செய்தி

தமிழ்நாடு

காடுகளை அழிப்பதாக நினைத்து மனிதன் தன்னை தானே அழிக்கிறான்!

Added : மார் 20, 2020
Share
Advertisement

''ஒரு நாட்டின் செழிப்புக்கு முதுகெலும்பாக இருப்பது காடுகள். இவை, பல ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு அடைக்கலமாக, மழைப்பொழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நாம் உயிர் வாழ காரணமான ஆக்சிஜனின் பிறப்பிடமே, மரங்கள் நிறைந்த காடுகள் தான். ஆனால், காடுகளை அழிப்பதாக நினைத்து, மனிதன் தன்னை தானே அழித்து கொண்டிருக்கிறான். இன்றையை காலகட்டத்தில், ஒவ்வொரு குடிமகனும், தனக்கு சொந்தமான இடங்களில், பயன் தரும் மரங்களை நட்டு பராமரித்தால், ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த, 33 சதவீத வனப்பரப்பை விரைவில் அடைய முடியும்,'' என்கிறார், முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரான, ஐ.எப்.எஸ்., அதிகாரி, ஆர்.ராம சுந்தரராஜு.இன்று உலக வன நாள் கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து, அவரிடம் பேசியதிலிருந்து:உலக வன நாள் ஏன்? மனித இனம் தோன்றிய காலகட்டத்தில் இருந்தே, தேவைக்கு ஏற்ப, விவசாயத்திற்காகவும், தொழிலுக்காகவும் மரங்களை வெட்டி, வனங்களை பயன்படுத்தி வந்தனர். பிரிட்டன் அரசு, உலகின் பல நாடுகளை கைப்பற்றிய காலகட்டத்தில், மரக்கலன்களை செய்வதற்கு, பெருவாரியான வனத்தை அழித்தது.கடந்த, 18ம் நுாற்றாண்டில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி துவங்கியதற்கு பின், உலக அளவில் மக்களின் பசி, பட்டினியை போக்கவும், வாழ்க்கையின் தரத்தை உயர்த்தவும் வனங்களை அழித்தனர்.உணவு உற்பத்தியை பெருக்கவும், மக்களை குடியமர்த்தவும், சோயா, காபி, தேயிலை, மிளகு, வாழை, ஏலக்காய் மற்றும் ரப்பர் போன்ற வர்த்தக பயிர்களை விளைவிக்கவும், இன்று வரை வனங்கள் அழிக்கப்படுகின்றன.குறிப்பாக, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளில் தான், தொழில் முன்னேற்றத்திற்காகவும், உணவு உற்பத்தி செய்யவும், அதிகளவில் வனங்கள் அழிக்கப்படுகின்றன.ஆண்டுதோறும், 13.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனம், பலவகை காரணங்களுக்காக அழிக்கப்படுகிறது. இதில், பாதி அளவு பரப்பளவு மட்டுமே, மீண்டும் வனமாக அல்லது மரத்தோட்டமாக எழுப்பப்படுகிறது.பிரேசில், பெரு உள்ளிட்ட நாடுகள், அமேசான் காடுகளை அழித்து, சோயா பயிர் எழுப்புவதற்கு முன்னிலையில் உள்ளன.ரஷ்யா, இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகள், தடிமரம் விவசாயம், தொழில் போன்ற செயலுக்காகவும், பாம் எண்ணை தோட்டம் எழுப்பவும் வனங்களை அழிக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளன.இதனால், வனத்தை சார்ந்து வாழும் எண்ணற்ற, பல வகை உயிரினங்கள் மடிந்து விடுகின்றன. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களும், பூமியை விட்டு, நிரந்தரமாக மறைந்து விடுகின்றன. ஆண்டிற்கு, 13.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு வனம் தொடர்ந்து அழிந்தால், அதனால், ஏற்படும் விளைவை அளவிட முடியாது. வேடிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும், 31 சதவீதம் கூட வனம் இல்லை.ரஷ்யா, கனடா, சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனா மற்றும் ஆப்ரிக்கா, ஆசிய நாடுகள், 50 சதவீதத்திற்கு மேல் வனப்பரப்பு கொண்டுள்ள நிலையில், சில நாடுகளில் வனப்பரப்பு குறைவாக உள்ளது.கத்தார், ஓமன் நாடுகளில், பெயர் சொல்வதற்கு கூட வனம் இல்லை. இதனால் தான் வன பாதுகாப்பை கருத்தில் வைத்து, உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச், 21ம் தேதி, உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது.மார்ச் 21ம் தேதியை ஏன் கொண்டாடுகிறோம்?மார்ச், 21ல், கொண்டாடுவதற்கு ஒரு காரணம் உண்டு. உலகின் பெரும்பாலான பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும், மார்ச், 20ம் தேதி முதல், மரம், செடி, கொடிகள் வளரும் நிலைக்கு வருவதால், அதை வளரும் பருவம் என்று கூறுகிறோம். அதாவது, மார்ச், 20 முதல் வசந்த காலம் துவங்குகிறது.மரங்கள் நன்றாக வளர்ந்து, வனத்தின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, மார்ச், 21ம் தேதி, உலக வன நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. மரம் வளர்ப்பில் மனிதன் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏன்?பூமி வெப்பமயமாவதை கணிசமாக குறைக்க, அதிக பரப்பளவில் மரங்கள் வளர்க்க வேண்டியது அவசியம். வனம் மற்றும் மரங்களின் இன்றியமையாத செயல்பாடு என்றால், அதிக வெப்பத்தை உருவாக்குகிற காரணியான, கரியமில வாயுவான கார்பன் - டை - ஆக்சைடை, மரம், செடி, கொடிகள், ஒளிச்சேர்க்கையின் போது உட்கொண்டு, உணவை தயாரிக்கும் போது உயிர் வாயுவான ஆக்சிஜனை வெளிவிடுகின்றன.காற்றில், கரியமில வாயுவின் அடர்த்தியை குறைக்க, மரங்களால் தான் முடியும். அதனால், இயற்கை சூழ்நிலையின் பருவநிலை மாற்றத்தை சமன் செய்வதற்கு, மரங்கள், வனங்கள் வெகுவாக உதவுகின்றன.அதேசமயத்தில், கரியமில வாயு மற்றும் இதர வாயுகள், அளவிற்கு அதிகமாக, மனிதனின் செயல்பாடுகளால் உற்பத்தியாவதை, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் குறைக்க வேண்டும்.உயிர்ப் பண்மை ஏன் அவசியம்?பூமியில் வாழும், லட்சக்கணக்கிலான வகைகள் கொண்ட, பல கோடி உயிரினங்களில், மனிதனும் ஓர் உயிர்.ஆனால், மனிதன் என்ற ஓர் உயிரினம், பூமியின் மொத்த பரப்பளவில், 70 சதவீதத்தை தன் வசப்படுத்திக்கொண்டுள்ளது.மீதமுள்ள, 30 சதவீதத்தில், எஞ்சியுள்ள உயிரினங்கள் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. காற்று, நீர் ஆகிய இரண்டு ஆதாரங்களை மட்டுமே பயன்படுத்தி, மனிதன் வாழ முடியாது.அதனால், மனிதன் மற்றும் இதர உயிரினங்களும் வாழ, உயிர்ப் பண்மை கொண்ட, அனைத்து உயிரினங்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள் இதே நிலையில், பூமியில் வாழ வேண்டும்.அறிவியலாளர்களின் கூற்றுப்படி, பூமியில், 80 சதவீத அளவில், உயிர்ப் பண்மைகள் வனத்தில் தான் வாழ்கின்றன எனவும், 20 சதவீதம் உயிரினங்களில், வனம் அல்லாத விவசாய நிலங்கள், கிராமங்கள், நகரங்களில் வாழ்கிறது என்று கூறுகின்றனர்.வருங்கால சந்ததிக்கு, உயிர்ப் பண்மையை காக்க, வனம் மற்றும் மரங்கள் ஓர் அரணாக விளங்குகின்றன என்றால், அது மிகையாகாது. உலகின் பருவநிலை மாற்றத்தை சமன் செய்யவும், உயிர்ப் பண்மை தொகுப்பை பாதுகாக்கவும், அதிகப்படுத்தவும் வனம் அத்தியாவசியம்.மக்களுக்கு தேவையான பொருட்களை, வனத்தை பாதிக்காமல் நெடுங்காலத்திற்கு நுகரவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தலின் படி, ஒவ்வொரு நாடும், மொத்த நிலப்பரப்பில், 33 சதவீதம் வனம் அமைத்திருக்க வேண்டும்.வனத்தை பெருக்க, அனைத்து நாடுகளும் முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சிறிய நாடுகள் தவிர, பெரும்பாலான நாடுகளில், வனத்தின் பரப்பளவு, 33 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது.வனத்தின் பரப்பளவை பெருக்க முடியாத சூழலில் உள்ள நாடுகள், வனம் அல்லாத இடங்களான, விவசாய நிலங்கள், கிராமத்தின் பொது இடங்கள், சாலைகள், ஆற்றங்கரை, ஏரிகள், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில், ஆண்டுதோறும் திட்டம் தீட்டி, குறிப்பிட்ட எண்ணிக்கையில், மரங்களை நட்டால், 33 சதவீத இலக்கை விரைவில் அடையலாம்.காடுகளை காப்பதில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன?தமிழகத்தில், அரசின் தீவிர முயற்சியால், வனப்பரப்பும், மரப்பரப்பும், 23.80 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்தியாவில், விவசாய நிலங்களில், குறிப்பாக, சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகளின் நிலங்களில் பயன் தரும் மரங்களை, வனத்துறை மூலம், 2007 முதல், அரசு செலவில் நட்டு, மரப்பரப்பை அதிகரித்ததில், தமிழகம் ஒரு முன்னோடியாக உள்ளது.ஒவ்வொரு குடிமகனும், தனக்கு சொந்தமான இடங்களில், பயன்தரும் மரங்களை நட்டு பராமரித்தால், ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த, 33 சதவீதத்தை விரைவில் அடைய முடியும். அனைவரும், உலக வன நாளை கொண்டுவது மட்டுமின்றி, மரங்களையும் முடிந்த அளவிற்கு நட்டு பாதுகாக்க வேண்டும்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X