பொது செய்தி

இந்தியா

குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றம் : நிர்பயா தாய் மகிழ்ச்சி

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றம் : நிர்பயா தாய் மகிழ்ச்சி

புதுடில்லி,: 'நிர்பயா' வழக்கு குற்றவாளிகள், நான்கு பேருக்கும், திஹார் சிறையில், நேற்று அதிகாலை துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஓடும் பஸ்சில், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆறு பேரும் குற்றவாளிகள் என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் ஒருவர், 'மைனராக' இருந்ததால், அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில், மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டு, பின், விடுவிக்கப்பட்டார். மீதி, ஐந்து பேருக்கு, விசாரணை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதில், ராம் சிங் என்ற குற்றவாளி, திஹார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
குற்றவாளிகள், முகேஷ் குமார் சிங், 32, வினய் சர்மா, 26, பவன் குப்தா, 25, அக்ஷய் குமார் சிங், 31, ஆகிய நால்வரும், துாக்கு தண்டனையை எதிர்த்து, நீதிமன்றங்களில் முறையிட்டனர். எனினும், அவர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அவர்களுக்கு இருந்த அனைத்து சட்ட வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டதாக, நீதிமன்றம் அறிவித்தது.
எனினும், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, கடைசி முயற்சியாக, நேற்று முன்தினம் இரவு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். நேற்று முன் தினம் நள்ளிரவு வரை நடந்த அந்த விசாரணையின் இறுதியில், உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, தூக்கு தண்டனை உறுதி செய்தது. ஏற்கனவே, மூன்று முறை, துாக்கு தண்டனைக்கான தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து, திஹார் சிறைத்துறை மூத்த அதிகாரி சந்தீப் கோயல் கூறியதாவது:

குற்றவாளிகள் வினய் சர்மா மற்றும் முகேஷ் குமார், நேற்று முன்தினம் இரவு, உணவு உண்டனர். ஆனால், அக்ஷய் குமாரும், பவன் குப்தாவும் உணவை எடுத்துக்கொள்ளவில்லை. நேற்று அதிகாலை, அவர்கள் நான்கு பேரும், எதையும் உண்ணவில்லை. துாக்கிலிடும் போது, முதல் நாள் அணிந்திருந்த ஆடைகளையே அவர்கள் அணிந்திருந்தனர்.
சிறை விதிமுறைப்படி, துாக்கிலிடுவதற்கு முன், மாவட்ட நீதிபதி நேஹா பன்சால் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள், குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று, அவர்களை சந்தித்தனர். உயில் உள்ளிட்ட ஆவணங்களை எழுத, அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், நான்கு குற்றவாளிகளும், அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, அவர்கள் நான்கு பேரும், துாக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். துாக்கிலிடுவதற்கு முன், குற்றவாளிகளிடம் கடைசி ஆசை குறித்து கேட்கப்பட்டது. அப்போது, குற்றவாளி முகேஷ், தன் உடல் உறுப்புகளை தானம் செய்யவேண்டும் என்ற விருப்பத்தை, தெரிவித்தார். மற்றொரு குற்றவாளியான வினய் சர்மா, தான் வரைந்த ஓவியங்களை, சிறை கண்காணிப்பாளரிடமும், தன் 'ஹனுமன் சாலிசா' புத்தகத்தை, தன் குடும்பத்தினரிடமும் ஒப்படைக்க வேண்டும் என, கூறினார்
அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்ததும், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, நான்கு பேரும் ஒரே நேரத்தில் துாக்கிலிடப்பட்டனர்.

விதிகளின்படி, அவர்களின் சடலங்கள், அரை மணி நேரத்திற்கு, துாக்கு கயிற்றில் தொங்கியபடி இருந்தன. பின், டாக்டர்கள் பரிசோதித்ததை தொடர்ந்து, நான்கு பேரின் சடலங்களும், பிரேத பரிசோதனைக்காக, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டன.
பிணவறைக்கு அருகே, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் குற்றவாளிகளின் குடும்பத்தினரை தவிர, வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பின், குடும்பத்தினரிடம், சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன. அக்ஷய் குமாரின் உடல், பீஹாரில் உள்ள அவுரங்காபாதிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. முகேஷின் உடல், ராஜஸ்தானுக்கும், வினய் மற்றும் பவனின் உடல்கள், டில்லியில் உள்ள அவர்களது இல்லங்களுக்கும் கொண்டு செல்லப்பட உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.16 ஆயிரம் கைதிகள் அடைக்க பட்டிருக்கும், தெற்காசியாவின் மிகப்பெரிய சிறையான திஹாரில், ஒரே நேரத்தில், நான்கு பேருக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், சிறைக்கு வெளியே கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள், தேசிய கொடியை அசைத்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அங்கிருந்தவர்கள், 'நீடூழி வாழ்க நிர்பயா, பாரத் மாதா கீ ஜெய்' போன்ற கோஷங்களை எழுப்பினர்.


கண்ணீருடன் தாயார்கள்



நிர்பயா குற்றவாளிகள் வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகிய இருவரும், டில்லியில் உள்ள ரவிதாஸ் முகாம் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று அவர்கள் துாக்கிலிடப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் தாயார்கள், சோகத்தில் மூழ்கினர். தங்கள் வீட்டுக்கு வெளியே, கண்ணீருடன் அமர்ந்துகொண்டு, தங்கள் மகன்களின் உடல்களுக்காக காத்திருந்தனர். அவர்களுக்கு, அங்கிருந்த மக்கள் ஆறுதல் கூறினர்.


பூர்வீக ஊரில் கொண்டாட்டம்



நிர்பயாவின் பூர்வீக ஊரான, உத்தர பிரதேசத்தின், பாலியா மாவட்டத்தில் உள்ள மேத்வாரா காலா கிராமத்தில், மக்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, நிர்பயாவின் தாத்தா லால்ஜி சிங் கூறுகையில்,“நிர்பயா சம்பவத்தை தொடர்ந்து, நாங்கள் தீபாவளி, ஹோலி ஆகிய பண்டிகைகளை கொண்டாடவில்லை. இன்று அவ்விரு பண்டிகைகளையும் சேர்த்து, கொண்டாடுகிறோம்,” என்றார்.


ஆத்மாவுக்கு அஞ்சலி



நிர்பயா வழக்கை விசாரித்த போலீஸ் குழுவிற்கு, தலைமை தாங்கிய, அப்போதைய துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா கூறுகையில்,“குற்றவாளிகள் துாக்கிலிடப்பட்டது மூலம், உயிரிழந்த நிர்பயாவின் ஆத்மாவுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு, இது பாடமாக இருக்கும்,” என்றார்.


720 பேருக்கு மரண தண்டனை



நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இதுவரை, 720 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், 354 பேர், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, ஹரியானாவை சேர்ந்த, 90 பேருக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த, 73 பேருக்கும், மஹாராஷ்டிராவை சேர்ந்த, 57 பேருக்கும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


நிர்பயா தாய் மகிழ்ச்சி



துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில்,“இறுதியில், எங்களுக்கு நீதி கிடைத்துவிட்டது. நீதி கிடைக்க தாமதானது; எனினும் அது மறுக்கப்படவில்லை. என் மகளின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். நாட்டின் மகள்களுக்கு நீதி கிடைக்க, நாங்கள் தொடர்ந்து போராடுவோம்,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
21-மார்-202019:45:38 IST Report Abuse
Darmavan மற்றவன் மரணத்தில் மகிழ்ச்சி படுதல் தவறு. இவர்கள் தொழில் குற்றவாளிகள் இல்லை.
Rate this:
Cancel
vidhya - mumbai,இந்தியா
21-மார்-202012:44:27 IST Report Abuse
vidhya வேலூர் ஜெயிலில் 9 கொலைகாரர்கள் உள்ளனர். அவர்களை தூக்கில் போடாமல் சட்டம் இன்னும் தூங்கி கொண்டு இருக்கிறது...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
21-மார்-202010:38:26 IST Report Abuse
vbs manian அதே சமயம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் மீது ஒரு கண்காணிப்பு வைத்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X