குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் பழுது! ...நகரில் குப்பைகள் தேங்கும் அவலம்| Dinamalar

தமிழ்நாடு

குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் பழுது! ...நகரில் குப்பைகள் தேங்கும் அவலம்

Added : மார் 21, 2020
Share

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் துப்புரவு ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக அரசு மூலம் வழங்கப்பட்டதில் 18 பேட்டரி வாகனங்கள் பழுதானதால் இந்த வாகனங்கள் செல்ல வேண்டிய இடங்களில் குப்பைகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரில் பல புதிய நகர்கள் அமைந்துள்ளதால், குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கைகளும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை, துப்புரவு ஊழியர்கள் மூலம் தினந்தோறும் துாய்மைப்படுத்தி, மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, நுண்ணுயிர் உரமாக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த துப்பரவு பணிகளில் 147 நிரந்தர ஊழியர்களும், 319 ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். துவக்கத்தில், இந்த குப்பைகள் அனைத்தும் பெரிய அளவில் நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த மூன்று லாரிகளில் மட்டுமே கொண்டு செல்லப்பட்டது.

இதனால், நகரில் பல இடங்களில் தேங்கிய குப்பைகளை முழுமையாக அள்ள முடியாத சூழல் இருந்ததால், குடியிருப்புகளில் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.இதையடுத்து, நகராட்சி மூலம் புதியதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரி மூலம் இயங்கும் 59 வாகனங்கள் வாங்கப்பட்டது. கோவை நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேட்டரி வாகனத்தை இயக்க துப்புரவு ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஊழியர்கள் வாகனத்தில் குப்பைகளை சேகரித்து உரம் மையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், 18 பேட்டரி வாகனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுது ஏற்பட்டு இயக்கப்படாமல், நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் இந்த வாகனங்கள் செல்ல வேண்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் சேரும் குப்பைகள் அள்ள முடியாமல் ஆங்காங்கே தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது. இதையடுத்து, பணிகளில் உள்ள மற்ற ஊழியர்கள் கூடுதல் பகுதிகளாக இரு தினங்களுக்கு ஒரு முறை சென்று, குப்பைகளை அள்ளி வருகின்றனர்.

இதுகுறித்து, நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'பழுதடைந்த வாகனங்கள் குறித்து கோவை பராமரிப்பு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துள்ளோம். விரைவில் வாகனங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் நகர பகுதிக்குள் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றனர்.விழுப்புரம் நகர மக்களின் சுகாதார சூழலைக் கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள பேட்டரி வாகனங்களை விரைவாக விரைந்து சீரமைத்து குப்பைகள் தேங்காத வகையில் அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X