ஈரான் தீவுகளில் சிக்கிய தமிழக மீனவர்களுக்கு உணவு | Dinamalar

ஈரான் தீவுகளில் சிக்கிய தமிழக மீனவர்களுக்கு உணவு

Added : மார் 21, 2020
Share

ஈரானில் உள்ள தீவுகளில் சிக்கிய, 700 தமிழகமீனவர்களுக்கு, முதல் கட்டமாக, உணவு பொருட்கள், குடிநீர் வழங்க, மத்தியஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்தகட்டமாக, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க, வரும், 26ம் தேதி, பிரதமர் மோடியை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்து பேசுகின்றனர்.தமிழகம், கேரளா, குஜராத் மாநிலங்களில் இருந்து, ஈரானில் உள்ள தீவுகளில், மீன்பிடி தொழில் செய்ய, 700 பேர் சென்றனர். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, மீனவர்கள் மட்டும், 600 பேர். ஈரானில் உள்ள, ஏழு தீவுகளில், அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

'கொரோனா' வைரஸ் காரணமாக, மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகுகள், அந்தந்த தீவுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; கடலில் பயணிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது; அவர்கள், பசியால் வாடினர். இத்தகவல் தெரிய வந்ததும், கன்னியாகுமரி மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், அ.தி.மு.க., அமைப்பு செயலரும், தமிழக அரசின் டில்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்தை சந்தித்து, மீனவர்களை காப்பாற்றுமாறு வலியுறுத்தினர். உடனே தளவாய்சுந்தரம், சென்னையில் முதல்வரை சந்தித்து, மீனவர்களை மீட்கும்படி கேட்டுக் கொண்டார். முதல்வர், இ.பி.எஸ்.,உடனே, பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்களுக்கு உதவும்படி வலியுறுத்தினார். மேலும், தளவாய்சுந்தரம்தலைமையில், எம்.பி.,க்கள், டில்லி சென்று, வெளியுறவு அமைச்சர்,ஜெய்சங்கர் மற்றும் இணை அமைச்சர், முரளிதரனை சந்தித்து பேசினர்.

இதையடுத்து, ஈரான் நாட்டில் உள்ள துாதகரக அதிகாரிகளிடம் பேசிய, மத்திய அமைச்சர், ஜெய்சங்கர், அங்குள்ள தமிழக மீனவர்களுக்கு, முதல் கட்டமாக, உணவு பொருட்கள், குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.இது குறித்து, தளவாய் சுந்தரம் கூறியதாவது:அடுத்த கட்டமாக, கப்பல் அல்லது விமானம் வாயிலாக, மீனவர்களை அழைத்து வரும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X