கொரோனா தகவலை மறைத்த சீனாவின் தவறால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது| Dinamalar

'கொரோனா தகவலை மறைத்த சீனாவின் தவறால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது'

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share

வாஷிங்டன் : ''கொரோனா வைரஸ் குறித்த தகவலை முன்கூட்டியே தெரிவிக்காமல் மறைத்து, சீனா செய்த தவறால், சர்வதேச நாடுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

''உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு, சீனா தான் காரணம்,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவிலும் மோசமான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக, அமெரிக்கா - சீனா நாடுகள் பரஸ்பரம் குற்றஞ் சாட்டி வருகின்றன.


கடும் பாதிப்பு


இந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் நேற்று அளித்த பேட்டி:கொரோனா வைரசால், 145 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர்; இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த பிரச்னைக்கும் சீனாவே காரணம். கொரோனா வைரஸ் பரவியது குறித்த தகவலை, முன்கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை, குறிப்பிட்ட பகுதியிலிருந்து வெளியேறாமல் வைத்து, சிகிச்சை அளித்திருந்தால், மற்ற பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதை தடுத்திருக்க முடியும்.சரியான நேரத்தில், சரியான தகவலை உலக நாடுகளிடம் தெரிவிக்காமல் மறைத்து, சீனா மிகப் பெரிய தவறு செய்து விட்டது. சீனாவின் இந்த தவறுக்கு, உலக நாடுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது. சீனாவின் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் தான், இந்த வைரஸ் முதலில் பரவியது. அந்த நகரைச் சேர்ந்தவர்கள், மற்ற நகரங்களுக்கு வெளியேறுவதை தடுத்திருந்தால், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது

.இது மோசமான நோய் என தெரிந்தும், அதற்கு உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாமல், அது குறித்த தகவலை தெரிவிக்காமல் மறைத்து விட்டனர். இதற்காக, சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார். எச்சரிக்கைசீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த டாக்டர் லி வென்லியாங் என்பவர், கொரோனா குறித்து, டிசம்பரிலேயே, அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவரது எச்சரிக்கையை, சீன போலீசார் பொருட்படுத்தவில்லை. வதந்தியை பரப்புவதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதற்கு அடுத்தடுத்த நாட்களில், வூஹான் நகரம் முழுவதும் கொரோனா வேகமாக பரவியது. அதற்கு பின் தான், சீன அரசு சுதாரித்தது. அதற்கு பின், அந்த டாக்டரும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பலியானார். அந்த டாக்டர் எச்சரிக்கை விடுத்ததுமே, சீன அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என, பலரும் கூறி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், இதே கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை, 218 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, மேலும், 14 ஆயிரத்து, 299 பேர், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வதாக, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும், தொழில்நுட்ப துறையில், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரம் ரத்து!l அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர்கள், அமெரிக்க அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், 'நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். மக்கள், தங்களுக்கு தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது

'அமெரிக்க குடிமக்கள் யாரும், அடுத்த உத்தரவு வரும் வரை, வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்' என, அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது l இந்தாண்டு இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது, பேரணி, நிதி திரட்டுவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும், அமெரிக்க அரசியல் கட்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளன. கொரோனாவுக்கு மலேரியா மருந்துஅமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சில மருந்துகளை, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் பரிந்துரை செய்துள்ளது. இதில், மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும், 'க்ளோரோகுவின்' மருந்தும் அடக்கம். அதிர்ஷ்டவசமாக, இந்த மருந்து நன்றாக வேலை செய்வதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

அமெரிக்கா முழுவதும் இந்த மருந்து, தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகவே இந்த மருந்தை, மலேரியா காய்ச்சலுக்கு அமெரிக்க டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, கொரோனாவுக்கும் இது பயன்படுவது, மகிழ்ச்சியான விஷயம்.இவ்வாறு, அவர் கூறினார்.கலிபோர்னியாவில் பாதிப்புஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தான், கொரோனா பீதி அதிகம் உள்ளது. இங்கு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

அடுத்த எட்டு வாரங்களில், கலிபோர்னியா மாகாண மக்கள் தொகையில், 56 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. நியூயார்க் நகரிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மக்கள் மருத்துவமனைகளில் குவிவதால், டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நகரில் இதுவரை, 22 பேர் இறந்துள்ளனர்; 3,615 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிதி அளிக்கவும், அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இத்தாலியில், 3,405 பேர் பலிஐரோப்பிய நாடான இத்தாலியில், கொரோனா வைரஸ், மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு, கொரோனா தாக்குதலுக்கு, இதுவரை, 3,405 பேர் பலியாகியுள்ளனர்; இது, கொரோனா முதலில் தோன்றிய சீனாவில் ஏற்பட்ட உயிரிழப்பை விட அதிகம்.சீனாவில், 3,245 பேர் பலியான நிலையில், இத்தாலியில் இதை விட அதிகமானோர் உயிரிழந்தது, அந்த நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி பிரதமர், ஜியுஸ்பி கூறுகையில், ''பாதிப்பை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள், அடுத்த மாதம், 3 வரை தொடரும்,'' என்றார். மற்றொரு ஐரோப்பிய நாடான பிரான்சிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் அதிபர், இமானுவேல் மேக்ரோன் கூறுகையில், ''வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், சில முட்டாள்கள், அந்த உத்தரவை மீறுகின்றனர். இவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது,'' என்றார். தென் அமெரிக்க நாடான பிரேசிலிலும், வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள கடற்கரை, சுற்றுலா தலங்கள், நட்சத்திர விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X