பொது செய்தி

தமிழ்நாடு

மோடியின் ஞாயிறு 'மக்கள் ஊரடங்கு'

Added : மார் 21, 2020
Share
Advertisement

மதுரை : ''கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி விடுத்துள்ள மக்கள் ஊரடங்கு அழைப்பை முழுமையாக நிறைவேற்றுவோம்'' என மதுரை மக்கள் நெகிழ்ச்சி கருத்தை தெரிவித்துள்ளனர்.உலகை நிலைகுலையச் செய்துள்ள கொரோனாவின் ருத்ர தாண்டவத்தை கட்டுப்படுத்த இதுவரை மருந்து இல்லை.

எனினும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான சமூகப்பொறுப்பை உணர்ந்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால் இதை வெல்லலாம். மக்கள் தங்களை தனிமைப்படுத்துவது ஒன்றே கொரோனாவிற்கான தற்காப்பு ஆயுதம். இதைத்தான் நேற்று முன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக வைத்தார்.

'போரை விட கொடூரமான இக்கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். சரியான தீர்வு இல்லாத நிலையில் தங்களை தனிமைப்படுத்துவது தான் ஒரே வழி. நம்மையும், பிறரையும் பாதுகாக்க இதை மேற்கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்ட மோடி, 130 கோடி இந்தியர்களுக்கும் மார்ச் 22ல் மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். வருகிற நாட்களில் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி தற்காக்க ஒரு சோதனை ஓட்டமாக இதை கடைபிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் இந்த விழிப்புணர்வு யுக்திக்கு நாடு தழுவிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து மக்கள் தெரிவித்த கருத்துகள்:
-இத்தாலி போல் வரக்கூடாது
டாக்டர் வே. தெய்வேந்திரன்: இத்தாலி போன்ற பிற நாடுகளில் நோய் தொற்று ஏற்பட்ட இரண்டாவது வாரத்தில் தான் சீனாவை விட அதிகமாக பரவியது. அது போன்று நம் நாட்டிலும் நோய் பரவுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கில் பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கு, நோய் தொற்றை மேலும் பரவவிடமால் தடுக்கும். ஊரடங்கை விடுமுறை தினமாக எடுத்துக்கொள்ளாமல் நோய் தொற்று சங்கிலித்தொடரை தடுக்கும் வகையில் ஓரிடத்தில் தங்குவதால் நோய் பரவுவதற்கான சாத்தியம் குறையும்.

ஒவ்வொரு பெண்களும் உறுதியேற்க வேண்டும்
சுகபிரியா, அழகு கலை நிபுணர்: உலகமே நிலைக்குலைந்துள்ள இந்த தருணத்தில் நம்பிக்கையோடு கொரோனாவே எதிர்கொள்ளும் மனநிலையை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக வீடுகளை சுத்தமாக வைக்க பழகிக்கொள்ள வேண்டும். உப்பு கலந்த நீரில் கைகளை கழுவுவது, தரையில் மஞ்சள் கலந்த தண்ணீர் வைத்து சுத்தம் செய்வதை பின்பற்றலாம். வெளியில் சென்று வீடுகளுக்கு திரும்பும் கணவர், குழந்தைகளிடம் பெண்கள் தான் விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்க வேண்டும். அன்றைய நாள் வீட்டில் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடுவோம்.

காலத்தின் கட்டாயம்

ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற காப்பீட்டு கழக அதிகாரி: மக்களை காப்பாற்ற பிரதமர் மோடி அறிவிப்பு உதவும். அரசுடன் மக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும். அதை மக்கள் உணர வேண்டும். அரசியல், கருத்து வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பினரும் பிரதமர் அறிவிப்பிற்கு ஆதரவளித்து வருவது வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் இந்தியாவின் பண்பாட்டை பறைசாற்றுவதாக இருக்கிறது. ஞாயிறு வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவுள்ளோம். என் நண்பர்கள், உறவினர்களிடமும் பிரதமர் அறிவிப்பை செயல்படுத்த கேட்டு வருகிறேன்.

பிரதமர் அறிவிப்பு நிதர்சனமான உண்மை
எஸ்.மஞ்சுளா, எல்.ஐ.சி., அதிகாரி: கொரோனா வைரஸ் தாக்குதல் உலக போர்களை காட்டிலும் கொடுமையானது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வெறும் வார்த்தை அல்ல. நிதர்சனமான உண்மை. பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் முன் காப்பது நல்லது என்ற சித்தாந்தத்தின்படி பிரதமர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அறிவிப்புகளை வெளியிட்டது பாராட்டுக்குரியதாகும். அவரது அறிவிப்பை அனைவரும் ஏற்க வேண்டும். ஞாயிறு கணவர், குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாலை கொரோனா வைரஸ் தடுப்பில் ஈடுபடுவோருக்காக கை ஒலி எழுப்பி ஆதரவு தெரிவிப்போம்.

ஒரு நாள் இயற்கை உணவு
வி.ஜெயமதி, குடும்ப தலைவி: பிரதமர் கூறியபடி நாளை வீட்டுக்குள் இருப்பது என குடும்பத்தினர் முடிவு செய்துள்ளோம். கொரோனா வைரசை ஒழிக்க அரசு எடுக்கும் முயற்சிகளில் எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும். வீட்டுக்குள் இருப்பதால் வீணாக பொழுதை போக்க விரும்பவில்லை. நாளை ஒரு நாள் முழுக்க இயற்கை உணவுகளை சமைத்து சாப்பிட திட்டமிட்டுள்ளோம்.

வீட்டை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்து நோய் நெருங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம். உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்து வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். நோயை வெல்லும் நல்ல நாளாக இந்த நாள் இருப்பதற்கு இறைவனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

ஒற்றுமை ஏற்பட்டால் ஓடிவிடும் 'கொரோனா'
தர்மிதா சுமி, குடும்ப தலைவி: பிரதமர் மோடி இந்த வேண்டுகோளை சரியான நேரத்தில் விடுத்துள்ளார். ஒவ்வொரு இந்திய குடிமகன்களும் இதை பின்பற்ற வேண்டும். கொரோனாவின் கோரத் தாண்டவத்தை இதுபோன்ற விழிப்புணர்வுர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை விரட்டிய சீன மக்களின் மன உறுதி நமக்கும் ஏற்பட வேண்டும். என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என பல வாட்ஸ் ஆப் குரூப்களில் உள்ளேன். மோடியின் இந்த வேண்டுகோளை அனைத்து குரூப்களுக்கும் அனுப்பியும், பேஸ்புக் பதிவுகள் மூலமாகவும் என்னால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். நாளை ஒரு நாள் வீட்டிற்குள் முடங்கி நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். ஒற்றுமை ஏற்பட்டால் கொரோனாவை விரட்டலாம்.

தாமாக முன்வந்து ஆதரவு தர வேண்டும்
முரளி, சமூக ஆர்வலர்: நாட்டை கொரோனா வைரஸில் இருந்து காக்க பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாக அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமனதுடன் வரவேற்கிறேன். அவரது அறிவிப்பின்படி மக்கள் தாமாகவே முன்வந்து ஆதரித்தால் மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது. கொரோனா வைரஸை விரட்ட மத்திய, மாநில அரசுகளுடன் மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் கட்டுப்படுத்த முடியும்.

ஒன்றுகூடி பிரார்த்திபோம்
வி.ஜே.விஸ்வா, கல்லுாரி மாணவர்: பிரதமர் மோடி வேண்டுகோளை நாம் ஒவ்வொருவரும் முதலில் மதிக்க வேண்டும். கொரோனா பீதியை எந்த வழியிலாவது ஒழிக்க வேண்டும். மக்கள் கூட்டமாக கூடினால் இதன் தொற்று ஏற்படும் என்பதை நாம் புரிய வேண்டும். தனிமனிதனுக்கு புரிதல் இருந்தால் மட்டுமே இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையை எந்த நாடும் எதிர்கொள்ள முடியும். மார்ச் 22 ல் பிள்ளைகளை வெளியே செல்ல பெற்றோர் அனுமதிக்க கூடாது. அன்று ஒரு நாள் 'நம் குடும்பத்திற்கான நாள்' என நினைக்க வேண்டும். கொரோனாவிற்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அனைவருக்கும் பிரார்த்தனை செய்வோம்.

வரவேற்க வேண்டிய அறிவிப்பு

சிவா, விவசாயி: வரவேற்க வேண்டியது பிரதமரின் அறிவிப்பு. மக்களை பாதுகாக்க அறிவிக்கப்பட்ட உத்தரவு என்பதால் அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும். பிரதமர் அறிவித்தபடி மார்ச் 22 வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி கலந்துரையாட திட்டமிட்டுள்ளேன். அலைபேசியில் நண்பர்கள், உறவினர்களை தொடர்பு கொண்டு கொரோனா வராமல் தடுப்பதற்கு செய்ய வேண்டிய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்குவேன்.

நமக்கான வேண்டுகோள்
தியாகராஜன், ஐ.டி.,நிறுவன ஊழியர்: மோடியின் இந்த வேண்டுகோள் நமக்கானது. இதன்மூலம் மற்றவர்களால் நமக்கும், நம்மால் மற்றவர்களுக்கும் வைரஸ் பரவுவதை தவிர்க்கலாம். நான் நாளை வீட்டில் இருந்தபடி என் பணிகளை செய்வேன்.

அலைபேசியை அணைப்பேன்
கலையரசன், தனியார் நிறுவன ஊழியர்: அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு, எனது மகனோடு, நாள் முழுவதையும் செலவிடலாம் என முடிவு செய்துள்ளேன். ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தால் நோய் தொற்றை தடுக்கலாம், மக்களின் ஒற்றுமையை நிரூபிக்கலாம் என்பதால், பாரத பிரதமரின் அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு தர உள்ளோம்.

தினமலர் மூலம் விழிப்புணர்வு
கவுரிநாதன், ஆட்டோ ஓட்டுனர்: மருத்துவப் பணியில் உள்ளவர்களுக்கு நாளை மாலை 5:00 மணிக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும். என் ஆட்டோவின் உள், வெளிப்பக்கங்களில் மோடியின் பேச்சு இடம் பெற்ற மார்ச் 20 தினமலர் முதல் பக்கத்தை போட்டோ காப்பி எடுத்து ஒட்டியுள்ளேன். பயணிகளும் விழிப்புணர்வுடன் உள்ளனர்.

குடும்பத்தினரிடம் அதிக நேரம்
முரளிதரன், ஓட்டுநர் பயிற்சியாளர்: பெரிய அளவில் நோய் பரவுவதை தடுப்பதற்காகவும், மக்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் நல்ல வாய்ப்பு. நாங்கள் சுய தொழிலில் இருப்பதால், எப்போதும் வீட்டிற்கு வெளியே இருப்பதற்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாது. நாளை நமது சுய விருப்பத்தின் பேரில் ஊரடங்கு செய்ய வலியுறுத்தியுள்ளதால், எனது வீட்டாருடன் போதிய நேரத்தை செலவிட உள்ளேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X